இன்று சர்வதேச மகளிர் தினம். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் ஒதுக்கப்படுவது போல பெண்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மனித சமூகத்தில் சரிபாதி பெண்கள். பெண்களை தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவிட்டு சமூக முன்னேற்றம் என்பது கற்பனையான ஒன்றே. அவர்களுடைய இயல்பின் அடிப்படையில் அவர்களுக்கான முழுமையான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து தளங்களிலும் அவர்கள் அவர்களுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும். அவருடைய கரங்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்.

சம காலகட்டத்தில் கல்வியில் பெண்கள் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. குறிப்பாக தென் மாநிலங்களில், அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில். கல்வி, விஞ்ஞானம் தொடர்பான துறைகளில் பெரும் சாதனையாளர்களாக, கல்வியாளர்களாக பெண்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பொருளாதாரம், அரசியல், சமூகம் போன்ற தளங்களில் பெண்கள் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் மற்றும் தலித் பெண்கள் இவ்வாறான விஷயங்களில் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள்.

சுய பொருளாதார பாதுகாப்பிற்கு பெண்களுக்கு முழு உரிமையை நபிகளார் அளித்துள்ள போதிலும் இன்றளவும் பொருளாதார விஷயங்களில் ஆண்களை சார்ந்தே முஸ்லிம் பெண்கள் இயங்குகிறார்கள். இதனைக் குறித்து குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட அவர்களிடத்தில் இல்லை. உருவாக்கப்படவுமில்லை. குடும்ப வளர்ச்சி, பாதுகாப்பை குறித்து கவனம் செலுத்தும் அதே நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் பெண்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான திட்டமிடல்கள் சமூகத்தின் கீழ் மட்டங்களில் செய்யப்பட வேண்டும். பெண்களுக்கான சுய பொருளாதார பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முழுமையாக பயன்படுத்துவதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்கேற்பு என்பது கட்டாயங்களின் ஊடாகவே இன்றளவும் செயல்படுத்தப்படுகிறது. வேறு வழியின்றிதான் இன்றைக்கு பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. பெண்களும் தலித்துகளும் எவ்வித அதிகாரமும் அற்றவர்கள் என்ற சனாதன சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் இந்திய அரசியல் இயங்கிவருகிறது. இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசியல் அதிகாரம் என்பது இந்த இரு கூட்டத்தாருக்கும் கானல் நீராகவே இருக்கும். இன்றைக்கும் உள்ளாட்சிகளில் வென்ற முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு கூட தயாரில்லாத மனோநிலையில் தான் முஸ்லிம் சமூகம் உள்ளது. ”தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று நபிகளார் கூறியதாக ஒரு செய்தியை முஸ்லிம் அறிஞர்கள் பலரும் சுட்டிக் காட்டுவதுண்டு.

இந்த செய்தியை வைத்துக்கொண்டு முஸ்லிம் பெண்களை இயக்க தளங்களிலும் அரசியல் தளங்களிலும் அதிகாரப்படுத்துவதை தடை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மையான பின்னணியை வசதியாக மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள். பாரசீகத்தின் ஆட்சி கிஸ்ராவின் மகள் வசம் ஒப்படைக்கப்பட்ட செய்தியை அறிந்த நபிகளார் பாரசீகத்தின் தோல்வியை குறிக்கும் முகமாக அந்த ஒரு பகுதியை மட்டுமே மையப்படுத்தி சொன்ன விஷயத்தை ஒட்டுமொத்த பெண்களுக்கான கருத்தாக மாற்றிவிட்டார்கள். இதன்மூலம் நீண்ட நெடுங்காலம் அதிகாரங்களில் இருந்து முஸ்லிம் பெண்கள் அகற்றி நிறுத்தப்பட்டிருந்தார்கள். உள்ளாட்சி போன்ற அதிகார மையங்களில் இன்றளவும் தலித், முஸ்லிம் பெண்கள் இயங்கு பொம்மைகளாக பின்னால் இருந்து இயக்கப்படுகிறார்கள். உமர்  அரபுலக அதிபராக இருந்த பொழுது மதினா நகரத்தின் கண்காணிப்பாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட வரலாறுகளை வசதியாக எல்லோரும் மறந்து விட்டார்கள். இனிவரும் காலங்களிலாவது தலித், முஸ்லிம் பெண்கள் சுய அதிகாரத்துடனும் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக உருவாக வேண்டும். ஆண்கள் வழிவிட வேண்டும்.

அதே நேரத்தில் துருக்கி, துனீசியா, மொரோக்கோ போன்ற முஸ்லிம் நாடுகளில் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுவது அதிகரித்து  வருகிறது. அது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

இதனது மறுபக்கம் பெண்களின் மீதான சுரண்டல். பெண்ணுரிமை பெண் சமத்துவம் என்ற கவர்ச்சியான பெயர்களில் பெண்கள் ஆண்களால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மதத்தின் ஊடாக பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் எனில் மதம் இல்லாத மனிதர்களால் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். நாகரீக உலகில் பெண்கள் பெரும்பாலும் ஒரு போகப் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். அதை சரி இன்னும் மனோநிலைக்கு நவயுக பெண்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வது தங்களது விருப்பப்படி என்ற கவர்ச்சிகரமான  முழக்கம் பெண்களை வசீகரிக்கிறது. அதன்மூலம் எவ்வித நெருக்கடிகளும் இன்றி பெண்களை தங்கள் வலையில் வீழ்த்துகிறது ஆண் சமூகம். பெரும் விழாக்களில் ஆண்களும் பெண்களும் அணிந்து வரும் ஆடைகள் அதற்கு உதாரணங்கள்.  ஆடை குறைப்பை தங்களுடைய உரிமை என பெண்களுக்கு போதிக்கும் ஆண் சமூகம், அதன்மூலம் தங்களது  உடல்களில் அரைகுறை ஆடைகளை அணிந்து அங்கங்களை வெளிப்படுத்திக் கொண்டு வரும் பெண்களை ரசிக்கும் ஆண் சமூகம், தங்களுடைய உடலை மட்டும் கண்ணியமான ஆடைகளை அலங்கரித்துக்கொண்டு வரும் நயவஞ்சக போக்கை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

முற்போக்கு பேசும் நவீன அரசியல் இயக்கங்களில் கூட அவர்களது நிர்வாகக் குழுக்களில் பெண்களுக்கான போதிய இடத்தை அளிப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% அளிக்க வேண்டும் என்று வாதிடும் முற்போக்கு அரசியல் இயக்கங்கள், அவர்களது அவைகளில்  பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சதவீதம் எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதுவும் ஒருவகையான இரட்டை முகமே.

பெண்களை அவர்களது இயல்பின் தன்மைக்கேற்ப, அவர்களது  சுய விருப்பம், தீர்மானங்களுக்கு ஏற்ப, புற அழுத்தங்களும் திணிப்புகளும்  நிர்ப்பந்தங்களும் இல்லாமல் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.

அதற்குப்பின் மகளிர் தினத்தை மகிழ்ச்சியோடும் கொண்டாடுவோம்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *