கௌதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற புதிதாக வெளியிடப்பட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியல் என்கிற ஆய்வு தெரிவிக்கிறது. முதலாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். அதானியின் சகோதரரும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடத்திற்குள் முதல் முறையாக வந்திருக்கிறார். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூபாய்.1.4 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 5.05 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கௌதம் அதானி தான் இந்தியாவின் முதன்முதலாக ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள 5 கம்பெனிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். கோவிஷீல்டு தயாரிப்பு கம்பெனியான சீரம் இன்ஸ்ட்டியூட்டின் சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 1 லட்சம் கோடிக்கு கீழே இருந்தது. கோவிஷீல்டு மூலம் சம்பாதித்த இந்த ஆண்டில் 74 சதவிகிதம் அவரது சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் நிகர சொத்து மதிப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்திருக்கிறது.

கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் ஒரு நாளைக்கு ரூ.1002 கோடி என்கிற வேகத்தில் அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ.41.75 கோடி என்ற அளவிலும், ஒரு நிமிடத்திற்கு 69.6 லட்ச ரூபாய் என்ற அளவிலும், ஒரு நொடிக்கு 1.16 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் உயர்ந்திருக்கிறது. அதன் மூலம் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறார். அவரது சகோதரரின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து ரூ.1.316 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் பெரும்பாலான காலம் முழு முடக்க காலமாக இருந்தது. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வியாபாரம் முடங்கியிருந்தது. இந்தியாவின் பொருளாதாரம் ஒரு காலாண்டில் 23.9 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருந்தது. வீழ்ந்த பொருளாதாரம் கொரோனாவிற்கு முந்தைய காலத்தை இன்னும் தொடவில்லை. இந்த பின்னனியில் தான் இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 9 சதவிகிதம் முதல் 261 சதவிகிதம் வரை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். பெருமுதலாளிகளை பொருத்தமட்டில் நாட்டின் பொருளாதாரம் உச்சத்தில் இருந்தாலும் சரி, துச்சமாக கிடந்தாலும் சரி எல்லாக் காலமும் கொள்ளை லாபத்திற்கான காலங்கள்தான். கோவிட் காலத்தில் இந்தியாவில் 97 சதம் குடும்பங்கள் வருமான இழப்பை சந்தித்து இருக்கின்றன. பல்வேறு ஆய்வுகளின்படி கொரோனா காலத்தில் பத்து கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். மத்தியதர வருவாய் பிரிவில் இருந்த பலர் அடுத்த கீழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கீழ்த்தட்டில் உள்ள மக்களின் கடன் சுமையும் பட்டினியும் அதிகரித்து இருக்கிறது. வீடற்றோர், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட எளிய பிரிவினர் மிகப்பெரும் வாழ்வாதார சிக்கலை எதிர்கொண்டு பிழைத்துக் கிடக்கிறார்கள். பல ஆய்வுகள் முறைசாரா தொழிலில் இருப்போரின் வருமானம் 40 முதல் 80 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக தெரிவிக்கின்றன.

கீழ்த்தட்டில் உள்ள 25 சதவிகிதம் ஏழை மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களின் மாதாந்திர வருமானத்தை போல இரண்டு முதல் ஆறு மடங்கு கடன் வாங்கியே வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வும், ஒட்டுமொத்த விலை உயர்வும் ஏழைகளை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. இன்னும் கூட ஒன்றரை கோடி பேர் கொரோனாவுக்கு பிந்தைய காலத்திலும் வேலை இன்றியே முடங்கி கிடக்கிறார்கள். பல குடும்பங்களின் மருத்துவ செலவுகளை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு மாறியிருக்கிறது. இந்த காரணத்தால் ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழே இருந்தவர்களை தவிர புதிதாக 23 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்தக்கூலி வேலை செய்வோரின் சம்பளம் 13 சதமும், சுயதொழில் செய்வோரின் வருமானம் 18 சதமும், தற்காலிக பணியாளர்களின் சம்பளம் 13 சதமும், நிரந்தர தொழிலாளர்களின் சம்பளம் 5 சதமும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் சம்பளம் 17 சதமும் குறைந்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டிற்கான ஆக்ஸ்பார்ம் அறிக்கை இந்தியாவில் கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் சம்பாதித்த தொகையும், ஒரு தினக்கூலி பத்தாயிரம் வருடங்கள் வேலை பார்த்தால்தான் சம்பாதிக்க முடியும் என்றும், முகேஷ் அம்பானியின் ஒரு நொடி சம்பளத்தை சம்பாதிப்பதற்கு அதே தினக்கூலி தொழிலாளிக்கு 3 வருடம் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறது.

பட்டினி, தற்கொலை, சாலை மற்றும் ரயில் விபத்துக்கள், காவல்துறை தாக்குதல்கள், உரிய மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் கடந்த ஆண்டு மட்டும் 300 முறைசாரா தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆக்ஸ்பார்ம் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலே உள்ள ஒளிரும் இந்தியாவின் வானளாவிய உயர்வுக்கும் கீழே உள்ள ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் அதளபாதாள நிலைக்கும் வெறும் கொரோனா மட்டும் காரணமல்ல. இந்த காலத்தில் ஏழைகள் அவர்கள் பிழைத்திருப்பதற்கே ஏராளமாய் செலவழிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். இன்னொரு பக்கம் வருமானமும், வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மருத்துவ செலவு, குடும்ப உறுப்பினர்கள் இழப்பு, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலைமை, பள்ளிகள் இல்லாததால் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால் குழந்தைகளுக்கு ஆகும் செலவு என்று மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆனால், இந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களின் சொத்து மதிப்பு நொடிக்கு நொடி தாவிக்குதிக்கிறது. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்கிறது. இது இரண்டும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. பெரும் பணக்காரர்கள் மிகப்பெரும் பணக்காரர்களாவதும், ஏழைகள் பரம ஏழைகளாவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.

தடுப்பூசியின் விலையை உயர்த்தியதாலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதி மறுத்ததாலும் தான் சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 74 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. பெரு நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக வெட்டி குறைக்கப்பட்டதன் மூலமாக மட்டும் கடந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக பெரு நிறுவனங்கள் சுருட்டியிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் வாங்கி பொதுத்துறை வங்கிகளில் ஏப்பம் விட்ட 7 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் என தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்தாண்டில் மட்டும் 2.53 லட்சம கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதே காலத்தில் இந்திய மககள் அனைவரும் பயன்படுத்தும் ரெம்டஸ்விர், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றிற்கெல்லாம் வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை 285 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்கனவே இருந்த வரிகள் போக பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் ரூபாய் 15 லட்சத்து 60 ஆயிரம் கோடி பெட்ரோல் டீசல் பயன்படுத்தும் ஏழை எளிய நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து நிர்ப்பந்தமாக அபகரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலையங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 20,872 கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்க போகிறது என்று பொதுமக்களை ஏமாற்றிவிட்டு, விற்பதற்கு முன்பாக அந்த விமான நிலையங்களில் ரூ.14,500 கோடி புதுப்பித்தல் மற்றும் புது வேலைகளை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின்றன. ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்ட அனைத்து விமான நிலையங்களும் அதானிக்குத்தான் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திப்படி கடந்த ஓராண்டில் மட்டும் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நேரடியாக ரூ.837 கோடி அள்ளிக் கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் மக்களின் வரிப்பணங்கள். அநியாயமாக விதிக்கப்பட்டு ஏழைகளிடமிருந்து பிடுங்கிய பணங்கள். இவற்றையெல்லாம் தான் வாரி இரைத்து இந்திய நிறுவனங்கள் ஆசியாவில் முதலிடம், இரண்டாமிடம் என்று மார்தட்டி கொள்ள திருப்பிவிடப்பட்டுள்ளது. மோடியும், சங் பரிவாரமும் அதிகாரத்தில் இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பெரிய பணக்காரர்கள் பலர் இந்தியர்களாக இருப்பார்கள். அதற்கு இயைந்தாற்போல் இந்தியாவில் கணிசமான பகுதி ஏழ்மைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். ஏனென்றால் இவர்களின் உணவைப் பறித்துத்தான் அவர்களுக்கு அரியாசனம் அமைத்து தரப்படுகிறது. முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் இதுதான் நிலையென்றாலும் இந்தியாவில் முதலாளித்துவமும் இந்துத்துவாவும் இணைந்து ஏழைகளிடம் அபகரிப்பதை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டங்களை முனைமழுங்க செய்திருக்கின்றன.

ஃபக்ருதீன் அலி அஹமது – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *