சமூக ஊடகங்களில் தொடர்ந்து தங்கள் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்நாட்டிலுள்ள நூற்றுக்கும் அதிகமான பிரபல முஸ்லிம் பெண்களை ஏலத்திற்கு விட்ட ‘புல்லி பாய்’ என்ற பெண் விரோத, துவேச ஆப்பினுடைய விஷயத்தில் 2 விசாரணைகள் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறது. முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் உத்தரகாண்டைச் சேர்ந்த ஸ்வேதா சிங்கை மும்பை சைபர் காவல்துறை கைது செய்திருக்கிறது. பிறகு அசாம் ஜோர்ஹர்ட்டை சேர்ந்த பொறியியல் மாணவன் நீரஜ் பிஷ்னோய்தான் இந்த ஆப்பை உருவாக்கியதில் முக்கியமானவன் என டெல்லி காவல்துறை குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. உத்தரகாண்டில் இருந்து மாயங்க் அகர்வால் என்ற 21 வயது இளைஞனையும் பெங்களூருவில் இருந்து விஷால் குமார் என்ற பொறியியல் மாணவனையும் மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்து விசாரணையை அதிவேகமாக முன்னெடுத்துக் கொண்டு சென்றுள்ள நிலையில்தான் அதுவரைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்த டெல்லி காவல்துறை தற்போது களத்தில் இறங்கியுள்ளது. ‘ புல்லி பாய்’க்கு பின்னால் இருந்து செயல்பட்டது யார் என்ற கேள்வி இந்த இரண்டு விசாரணைகளுக்கு இடையே தான் உள்ளது.

மும்பை – டெல்லி காவல்துறை அணுகுமுறைக்கு இடையேயான வேறுபாடுகள்
கைது செய்யப்பட்டவர்களைக் குறித்த அடிப்படைத் தகவல்களை மட்டும் அளித்து விசாரணையின் விவரங்களையோ குற்றவாளிகள் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தையோ ஊடகங்களுக்கு அளிக்காமல் மும்பையில் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான் டெல்லியில் கைது நடைபெறுகிறது. மும்பை காவல்துறையின் அணுகுமுறையும் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவின் அணுகுமுறையும் முற்றிலும் மாறானதாக இருந்தது. துவேச ஆப்பின் தாக்குதலுக்கு இரையான இஸ்மத் ஆறா என்ற ஊடகவியலாளரின் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்திய டெல்லி காவல்துறை திடீரெண்டு நீரஜின் புகைப்படத்தை வெளியிட்டு அவனுடைய வாக்குமூலம் என்ற பெயரில் ஊடகங்களுக்கு பல தகவல்களையும் அளித்தது. நீரஜின் கைதின் மூலம் மேற்படி ஆப்பின் சங்கிலி முற்றிலுமாக சிதைந்து விட்டது என்றும் வெறும் இரண்டு தினங்களுக்குள் விசாரணை முடிவுற்றது என்றும் டெல்லி காவல்துறை நம்பிக்கையற்ற வாதங்களை முன்வைத்தது. அதற்குள் ராகுல் சிவசங்கர் போன்ற அரசின் அடியாள் படை ஊடகவியலாளர்கள் இதற்கும் சங்பரிவாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நற்சான்றிதழ் அளித்ததோடு, மதச் சார்பற்ற மனித உரிமை அமைப்புகள்தான் பயத்தை பரப்பி சமூகத்தை துண்டாடுகிறார்கள் என குற்றம் சாட்டினர்.

தீவிர இந்துத்துவ கும்பலின் நேபாளி சதிகாரன்.
மும்பை காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டதைக் கண்ட இந்துத்துவ தீவிரவாத கும்பல் ஆப் உருவானது இந்தியாவில் அல்ல. மாறாக, இந்தியாவை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் வெளிநாட்டில்தான் எனக் கூறி விசாரணையை திசைத் திருப்பிவிட முனைந்தனர். கியோ என்ற நேபாளிதான் புல்லி பாயை உருவாக்கியது என அவர்கள் பிரச்சாரம் செய்துவரும் நிலையில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை சிறப்பு பிரிவு முக்கிய குற்றவாளி என்று கூறி நீரஜ் பிஷ்நோயை கைது செய்தது. நீரஜிக்கு பின்னால் கியோதான் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளை அவர்கள் செய்தார்கள். இவ்வாறு விசாரணையை திட்டமிட்டு திசைதிருப்பி விடுவதற்கான முயற்சிகளுக்கு இடையில் தான் மும்பை, டெல்லி காவல்துறை விசாரணைகள் முன் சென்று கொண்டிருக்கிறது.

இந்துத்துவ பயங்கரவாதத் தாக்குதல்களின் விசாரணைகள்.
நாட்டை நடுங்க வைத்த இந்துத்துவப் பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு விசாரணையை முன்னெடுத்துக் கொண்டு சென்ற நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு துறை திடீரென்று உள்ளே குதித்து பல கைதுகளை செய்ததை புல்லி பாய்ஸ் வழக்கில் இப்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய செயல்பாடுகள் நினைவுபடுத்துகிறது. மகாராஷ்டிராவில் மாலேகாவிலும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் சம்ஜோதா எக்ஸ்பிரசிலும் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பின்னால் இருந்த செயல்பட்ட இந்துத்துவ பயங்கரவாத கும்பல்களின் வேர்களைத் தேடிக் கண்டுபிடித்த மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு தான் மேற்படி கைதுகளை அவர்கள் செய்தார்கள். கர்கரே கொல்லப்பட்டதுடன் நின்றுபோன விசாரணையை மீண்டும் முன்னெடுத்துக் கொண்டு செல்ல அன்று காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டு மாநிலங்களில் உள்ள ஏடிஎஸ் முயற்சி செய்த நிலையில்தான் பாஜக ஆண்டுகொண்டிருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏடிஎஸ் வேகவேகமாக சிலரை கைது செய்து விசாரணைக்கு முடிவு கட்டினர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் சாட்சிகள் அனைவரும் மாறி குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தார்கள். அத்தோடு வழக்குகள் காணாமல் போனதோடு முக்கிய குற்றவாளி நாடாளுமன்ற உறுப்பினராகவும் மாறிவிட்டார்.

கிட்ஹப் நிர்வாகி தாமஸ் டோமுக்கு அளித்த கடிதத்தில் முஸ்லிம் பெண்களை ஏலத்திற்கு விட்ட சொல்லி ‘சுள்ளி டீல்’ ‘புல்லி பாய்ஸ்’ போன்ற பெண்கள் விரோத, துவேச ஆப்புகள் இனியும் உருவாகாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என ‘நெட்வொர்க் ஆஃப் மீடியா வுமன் இந்தியா’ கேட்டுக் கொண்டுள்ளது. ‘கிட்ஹப்’ இதுவரை எடுத்த நடவடிக்கைகளை தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் பெண்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரை மோசமாக சமூகத்தில் பிரச்சாரம் செய்யப்படாமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ‘கிட்ஹப்’ தலைமை நிர்வாகியிடம் பெண் ஊடகவியலாளர் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. முதலில் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு ‘கிட்ஹப்’ இதுதொடர்பாக வேறு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. அதை வெளிக்கொணர்வதற்கான முயற்சிகளையும் விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளவில்லை. முழுமையான விசாரணையை நடத்தி உண்மை வெளிவர வேண்டுமானால் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் ஹரித்துவாரிலும் டெல்லியிலும் நடைபெற்ற இன வெறுப்புக் கூட்டங்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எவ்வித பதிலையும் அளிக்காத நிலையில் நிலையில் மீண்டும் ஒரு கடிதம் எழுத பலரும் தயங்குகிறார்கள்.

பொதுச் சமூகத்திலே சில தனிப்பட்ட குரல்கள்.
“அநீதியின் வேலையில் யார் பக்கமும் சாயாமல் நிற்பீர்கள் எனில் நீங்கள் தேர்ந்தெடுத்தது கொடுமைக்காரர்களின் பக்கத்தைதான்” ‘புல்லி பாய்ஸ்’ ஆப் வெளியான நிலையில் ஒன்றிய அமைச்சரின் மூலமாக ஆப்பை தடை செய்து மகாராஷ்டிரா காவல்துறையை மூலம் வழக்குப்பதிவு செய்த சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதியின் ‘டிவிட்டு’தான் இது. புல்லிபாய்ஸ் வழக்கில் பொறியியல் மாணவர்கள் கைதான பிறகு ஹரித்துவாரில் நடைபெற்ற இன வெறுப்பு மாநாடுகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தன் அமைதியை கைவிட வேண்டும் என்றும் வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக பேச வேண்டும் என்றும் பெங்களூரு, அகமதாபாத் ஐ.ஐ.எம்களில் படிக்கும் மாணவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதை ஆதரித்துக் கொண்டு பிரியங்கா வெளியிட்ட டிவிட் ஆகும் இது. நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் யாரும் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்பட்டு கொண்டிருக்கும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக பேசாமல் மௌனத்தை கடைபிடித்து வரும் நிலையில்தான் காங்கிரசில் இருந்து சிவசேனாவில் இணைந்துள்ள பிரியங்காவின் கருத்துக்கள் வெளிவந்தது. இந்துத்துவ தீவிரவாத தலைவர்கள் மத நாடாளுமன்றம் நடத்திய சட்டீஸ்கரில் உள்ள ஒரு கிராமவாசிகள் முஸ்லிம்களை முழுவதுமாக புறக்கணிப்போம் என சபதம் உறுதிமொழி எடுத்ததுதான் வெறுப்பு பிரச்சாரத்தில் புதியது. ஒரு கிராமம் வெளிப்படையாக ஒலிபெருக்கியின் வாயிலாக நடத்திய ஒரு வெறுப்பின் உறுதிமொழி சமூக ஊடகங்களின் வாயை ஊடாக பரவிக்கொண்டிருக்கிறது. வெறுப்பை பரப்ப முயற்சிகள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் பிரியங்கா சதுர்வேதி யைப் போல பெண் ஊடக கூட்டமைப்பைப் போல மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போல நம்பிக்கையூட்டும் சில குரல்களும் பொது சமூகத்தில் இருந்து எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

ஹசனுல் பன்னா.
தமிழில்: கே.எஸ். அப்துல் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *