மோடிக்காக எதையும் தாக்கும் செவ்வாய்க் கிரகம் மனிதன்.
-ரானா அயூப் ( பத்திரிக்கையாளர்)

மே 17 அன்று, மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியப் பத்திரிகையாளர்களிடையே ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளாகப் பிரதமராக இருந்த நரேந்திர மோடி முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் என்கிற செய்தியைக் கேட்டுதான் அத்தகைய பரபரப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.

ஏனெனில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்வி எதையும் விரும்பாத ஒரு பிரதமர் இருந்தார் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்.

அதற்குப் பதிலாக அவர் மட்டும் பேசி நடிக்கும் காட்சி மட்டும் ஒளிபரப்பாகும். ஒரு சமயம், கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தபோது, அவர் தன் அருகே இடது பக்கம் அமர்ந்திருந்த, பாஜகவின் தலைவராக இருந்த, அமித்ஷாவை பார்த்து, அனைத்துக் கேள்விகளுக்கும் அமித்ஷா பதிலளிப்பார் என்று மோடி கூறினார். அமித்ஷாவும் முன்வந்து பதில்களைக் கூறினார்.

உண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மோடிக்காக அதை அவர் செய்து வந்தவர் தான். இன்றைய தினம் இந்தியாவில் மிகவும் அதிகாரம் படைத்த இரண்டாவது நபராக அவர் திகழ்கிறார். பாஜகவில் பலர், அமித்ஷாவை, கண்ணுக்குப் புலனாகாத பிரதமர் என்றே அழைக்கிறார்கள்.

அமித்ஷா, மோடியின் நிழல், விசுவாசி, செய்தித் தொடர்பாளர் மற்றும் பிரச்சார வல்லுநர். அவர் மோடி-2 அரசாங்கத்தின் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிகுந்த உள்துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
அமித்ஷா (வயது 54), கோளிலிருந்தே மோடியின் விசுவாசியாக இருந்து வருகிறார்.

குஜராத்தில் மோடியின் ஆரம்ப நாட்களில் மோடி, கட்சியின் பொதுச் செயலாளராக மட்டும் இருந்தார். மோடி, இதில் திருப்தி அடையவில்லை. தனக்கு அதிகாரம் தேவை என்று அவர் விரும்பினார். அவர் குஜராத்திற்கு வந்து சில ஆண்டுகள் கழித்து, மோடி, 2001இல் அமித்ஷாவின் உதவியுடன் குஜராத்தின் முதலமைச்சராக மாறினார்.

மோடியின் மாநில அமைச்சரவையில் அமித்ஷா உள்துறை உட்பட பல்வேறு துறைகளைக் கவனித்து வந்தார். அமித்ஷாவின் கவனம் முழுவதும், மோடி தன்னுடைய வழியில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவது என்பதேயாகும்.

இதன்காரணமாக இவரது துறைக்கு அலுவலர்கள் மத்தியில் முதலமைச்சரின் “அசிங்கமான சூழ்ச்சிகள் நிறைந்த துறை” (‘dirty tricks department”) என்றே பெயரிட்டு அழைத்தனர்.
அப்போதிலிருந்தே அமித்ஷா மிகவும் வல்லமை பொருந்திய நபராக வளர்ந்தார்.

இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் அரசியல்வாதிகளில் மிகவும் சக்தி படைத்தவராக விளங்கினார். கூட்டத்தாரிடையே அவர் உரையாற்றுகையில் பாஜகவிற்கு எதிராக விழும் வாக்கு, பாகிஸ்தானில் கொண்டாடப்படும் என்று கூறியிருக்கிறார்.

நாட்டிலுள்ள முஸ்லீம்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில், “கறையான்கள்” (“termites”) என்று முத்திரை குத்துவதுடன் அவர்களை வங்காள விரி குடாவில் தூக்கி எறிய வேண்டும் என்று பேசுவார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்திருப்பவர்களில் முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை அளித்திடும் சட்டமுன்வடிவு, அவரது மூளையில் உதித்ததேயாகும்.

எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய சங்கதி என்னவெனில் மனித உரிமைகள் மீது அவருடைய கடந்தகால தாக்குதல்களாகும். முஸ்லீம்களை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவராக அவர் இருந்திருக்கிறார்.

2010இல், இவ்வாறு நடைபெற்ற கொலைகள் குறித்து நான் செய்திகள் பதிவு செய்திருந்தேன். பாதிப்புக்குள்ளாகியிருக்கிறவர்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள் என்கிற ரீதியில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களையும் குஜராத் மாநில உளவுப் பிரிவினரின் உள் குறிப்புகளையும் நான் தாக்கல் செய்திருந்தேன்.

என்னுடைய புலனாய்வு வெளியான பின்னர் இரு வாரங்கள் கழித்து அமித்ஷா கைது செய்யப்பட்டார். (அவர் இதன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அக்குற்றச்சாட்டுகள் “சோடிக்கப்பட்டவை” என்றும் “அரசியல் நோக்கம் கொண்டவை” என்றும் கூறினார்.)

மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகமான (சிபிஐ), சொராபுதீன் ஷேக் என்கிற முஸ்லீம் நபர் ஒருவரும் அவரது மனைவி கவுசர் பீ என்பவரும் கொல்லப்பட்ட வழக்கில் அமித்ஷாவின் பங்கு குறித்து புலனாய்வு மேற்கொண்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் புலனாய்வை மேற்கொண்ட மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், அமித்ஷாவை இவ்வழக்கின் கேந்திரமான சந்தேக நபர் என்றும் இக்குற்றத்தின் பின் உள்ள சதிகாரர் என்றும் குறிப்பிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், கீழுலக குண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பணம் பறித்திடும் கும்பலுக்குத் தலைவனாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது.

உச்சநீதிமன்றம், அமித்ஷா மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் ஆழமானவையாக இருந்ததால், சாட்சிகள் மீது செல்வாக்கு அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர் குஜராத் மாநிலத்திற்குள் நுழைவதற்குத் தடை விதித்தது.

மேலும், இஸ்ரத் ஜஹான் என்றும் 19 வயது பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கிலும் அமித்ஷாவின் பங்கு குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இஷ்ரத் ஜஹான் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
அமித்ஷா அதிக நாட்கள் சிறைக் கம்பிகளுக்குப்பின்னால் செலவழித்ததில்லை. விரைவிலேயே அவர் பிணையில் வெளி வந்துவிட்டார்.

அந்த சமயத்தில் அமித்ஷாவின் இறங்குமுகம், மோடியின் இறங்குமுகமாகவும் மாறிவிடும் என ஊகிக்கப்பட்டது. ஆனால், 2013இல் மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டார். அமித்ஷா பாஜகவின் தலைவராக்கப்பட்டார். எண்ணற்றக் குற்றவாளி குற்றச்சாட்டுகள் உள்ள ஒரு நபர், பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால், அமித் ஷா மீதான வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளானார்கள். நீதிபதிகள் வழக்கை விசாரிப்பதிலிருந்து தங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். ஒருசீல மாதங்களிலேயே அமித்ஷா, அவர்மீது சாட்டப்பட்டிருந்த அனைத்துக் குற்றவாளி குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

2013இல் அமித்ஷா, ஓர் இளம்பெண் மீது சட்டவிரோதமாக வேவு பார்த்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அமித்ஷா, மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் அப்பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்ட உரையாடல் பதிவுகளின் ஒலி நாடாக்களை இரு இதழியல் நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்தன.

இது தொடர்பாக பாஜக அளித்த விளக்கம் என்னவென்றால், அப்பெண்ணின் பெற்றோர் இவ்வாறு அப்பெண்ணைக் கண்காணிக்குமாறும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள் என்பதாகும். ஆனால் இது தொடர்பாக காவல்துறையினர் எவ்விதமான சான்றாவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.

இவ்வாறு பிரச்சனைக்குரிய கடந்தகாலத்தை அமித்ஷா பெற்றிருந்தபோதிலும், இன்றையதினம் மோடியின் நெருங்கிய நம்பகமான நபராகவும் அவரது எண்ணங்களை அமல்படுத்துபவராகவும் மாறியிருக்கிறார். பிரதமரின் ஒப்புதல் பெறாமல்விடக் கொள்கை முடிவுகளை அவர் எடுக்க முடியும்.

2014இல், காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைக் கைவிட்ட சமயத்திலேயே, அமித்ஷா 2019 தேர்தலுக்கான பணிகளைத் தயார் செய்திடத் தொடங்கிவிட்டார். பாஜகவிற்கு அதிகமான அளவில் உறுப்பினர்களைச் சேர்க்கும் இயக்கத்தை அவர் மீளவும் துவக்கினார்.

இரு ஆண்டுக் காலங்களுக்குள்ளாகவே, சரிபார்க்கப்பட்ட பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 3 கோடியே 50 லட்சத்திலிருந்து (35 மில்லியன்), 11 கோடியைத் தாண்டியது. (110 மில்லியன்). நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுடன் இதர கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்தார்.

இவை அனைத்தும் பாஜகவிற்கு சமீபத்திய தேர்தலில் அபரிமிதமான வெற்றியை ஈட்டுவதற்கு உதவின.
அமித்ஷா, வரும் 2024இல் பிரதமர் நாற்காலியில் உட்காருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று சிலர் ஊகிக்கிறார்கள்.

இப்போதே அவர், இந்திய நாடாளுமன்ற அமைப்புமுறையில் மிகவும் சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சகத்தின் தலைவர் என்ற முறையில், நீதித்துறை முடிவுகள் மற்றும் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுதல் போன்ற பொறுப்புகளை மேற்பார்வையிடுவார்.

அமித்ஷா தன் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யத் தயங்கியதே கிடையாது. இந்தியாவில் மக்கள் தற்சமயம் அரசியல்ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறுவிதமான வெறிகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய வெறிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும். ஆனால், மோடி – ஷா வகையறாக்கள் தங்கள் வசம் அதிகாரம் குவிதல் குறித்தே கவனம் செலுத்துவார்கள்.

இதற்காக அவர்கள் நாட்டிலுள்ள அரசமைப்புச்சட்ட நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவது குறித்தோ, மனித உரிமைகளை மீறுவது குறித்தோ, சட்டத்தின் ஆட்சியில் அரிப்பு ஏற்படுத்துவது குறித்தோ கவலைப்பட மாட்டார்கள். இந்தியா மிகவும் ஆபத்தானவர்கள் கைகளில் இருக்க முடியாது.

(நன்றி: தி வாஷிங்டன்போஸ்ட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *