ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். மாஹி-மாண்டாவி என்ற விடுதியில் இரவு உணவு அருந்தியதற்குப் பின்பு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ABVP) சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று பிரச்சாரம் செய்யும் போது ஒரு அறையில் நஜீப் அகமது இருந்தார். முதுகலை உயிரித் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் நஜீபுக்கு விடுதி கிடைத்து இரண்டு வாரங்களே ஆகின.

 ஜாமியா மில்லையா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் ஜே.என்.யு.வில் தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், இந்த வளாகத்திற்கு வந்தவர் நஜீப். இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவினரும் அவர்களது மாணவ அமைப்பும் இயல்பாகவே முஸ்லிம்களைப் பார்க்கும்போது, வெறுப்பும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருக்கின்றனர். ஓட்டுக் கேட்பதாக நஜீப் அறைக்குள் சென்றவர்கள், அங்கும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். எதிர்த்து கேள்வி எழுப்பினார் நஜீப். அதற்காக அவரை அடித்துக் காயப்படுத்தினார்கள். மாணவர் நஜீபின் முகத்தில் இரத்தம் வழிந்தோடியது. அவரை அறையிலிருந்து வெளியில் இழுத்து வந்து, 25-30 பேர் சேர்ந்து தொடர்ந்து அடித்துள்ளனர். விடுதியின் விளக்கினை அணைத்துவிட்டு அடித்துக்கொண்டே, மோசமான வசைச்சொற்களால் திட்டிக்கொண்டே அடித்துள்ளனர். இறுதியில், ‘உன்னைச் சொர்க்கத்தில் உள்ள 72 கன்னிமார்களிடம் அனுப்பப் போகிறோம்’ என்று சொல்லிக் கொண்டே அடித்துள்ளனர். இது நடந்தது அக்டோபர் 14ஆம் நாள் 2016. அடுத்த நாளிலிருந்து நஜீபைக் காணவில்லை.

“என் மகன் நஜீப் எங்கே..?” இதுதான் நீதியின் முன்னால் நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ் எழுப்பியிருக்கும், எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி. நஜீப் ஏ.பி.வி.பி. எனும் கொலைகார கும்பலால் காணாமலடிக்கப்பட்டு இன்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.

தன்னுடைய மகன் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்தார் நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ் அவர்கள். காவல்துறையின் விசாரணையில் திருப்தி பெறாத டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சி.பி.ஐ. ஆர்வம் காட்டவில்லை; இதில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று டெல்லி உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. மீது குற்றம்சாட்டியது. இப்படி பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலையீட்டால் கொலைகார ஏ.பி.வி.பி. கும்பலைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதற்காகவே வேலை செய்வதைப்போல் சி.பி.ஐ. எடுபிடி வேலை செய்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.

தீடிரென்று ஜே.என்.யு. நிர்வாகமும் ஆளும் வர்க்கத்தின் ஊடகங்களும் நஜீப்பையே குற்றவாளியாக மாற்றினார்கள். நஜீப்பிற்குப் பைத்தியக்காரன் பட்டம் கட்டினார்கள். அவன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவன், அங்கு சென்றுவிட்டான் என்று ஆதாரமில்லாத பல்வேறு கட்டுக்கதைகளை இட்டுக்கட்டினார்கள்.

இருப்பினும் நஜீபின் தாயார் பாத்திமா நபீஸ் அவர்கள் தொடர்ந்து தனது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. பாசிச கும்பலை எதிர்த்தால் நாளை நாமும் கூட காணாமலாக்கப்படலாம், கொல்லப்படலாம். நஜீப் எங்கே என்ற கேள்விக்கான விடை வெறுமனே தன் மகனை இழந்துவாடும் அன்னைக்கான பதில் மட்டுமல்ல! இந்த நாட்டில் அநீதியை எதிர்த்து போராட முன்வரும் ஒவ்வொருக்குமான பதில்.

நமக்காக, இந்திய மக்களின் பன்முகத் தன்மைக்காக  குரலெலுப்பிய ஒரு வீரனுக்காக இன்று நாம் கேள்வி கேட்க வேண்டும்.

நஜீப் எங்கே?

Where is Najeeb?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *