இன்றைக்கு இந்தியாவில் முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தைரியமாக நடமாட முடியாத சூழல். ஒரு இறுக்கமான நிலைமையை சங்பரிவார் திட்டமிட்டு சாதித்துள்ளது. நிச்சயமாக இது ஒரு கடுமையான சோதனை காலம்தான். இதற்கு திசை காட்டத்தெரியாத சுயநலமிக்க தலைவர்களும் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் முஸ்லிம் சமூகமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கவியலாது.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும்.

முதலாவதாக


முஸ்லிம் சமூகத்தை பயமூட்டுவதை விட தைரியப்படுத்த வேண்டும். நாளைய தினத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். சில அமைப்புகளும் அதன் தலைவர்களும் தங்களின் இருப்பை தக்கவைப்பதற்காக சமூகத்தின் அச்ச மனோநிலையை அதிகரிக்கச் செய்கிறார்கள். முஸ்லிம்களை காட்டி ஒரு போலியான அச்ச மனோநிலையை எப்படி ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே கட்டமைக்கிறதோ அதைப் போன்றுதான் இவர்களும் செய்கிறார்கள். இதை பொறுப்புணர்வுமிக்க சமுதாய தலைவர்கள் கவனமேற்கொண்டு முஸ்லிம்களை அச்சத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். வட இந்திய நிலைமை தென் இந்தியாவில் இல்லை. இதை தக்க வைக்க உரிய திட்டங்களை வகுக்க வேண்டும்.


இரண்டாவது.
களத்தில் துடிப்புடன் செயல்பட வேண்டும். களத்தில் இறங்கி செயல்பட தயங்கி விட்டு பாதிப்புகளை நினைத்து புலம்புவதில் அர்த்தமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறக்கூடாது என்பதற்காக நாம் என்ன திட்டமிட்டோம். புலம்பி பயனுமில்லை. துடிப்புடன் அரசியல் களத்தை கையாளும் தலைவர்களின் தேவை இப்பொழுது அதிகம். ஒவ்வொரு நாளும் சங்பரிவார் தங்களது திட்டங்களை நடைமுறைப்படுத்தி தங்களது பிராமண ஆதிக்கத்தை நிலை நாட்டிட சகலவித தந்திரங்களையும் – அது மிக தாழ்வான, அசிங்கமான, இழிவான செயலாக இருப்பினும் – உபயோகிக்கின்றனர். ஒரு வினாடி நேரத்தை கூட வீணடிப்பதில்லை. ஆனால் நாம் வேடிக்கை மனிதர்களாகவே இருந்து பெரு மூச்சு விடுகிறோம்.

மூன்றாவது
பன்முக சமூகத்தில் கலந்துரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். நம்மை குறித்து தவறான புரிதல்களை பரப்பி வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வட இந்தியாவில் ஒருவரையொருவர் வெறுக்கும் மனோநிலை வளர்ந்துள்ளது. இதைத்தான் சங்பரிவார் நாடெங்கும் உருவாக்க முயல்கிறது. அதை வென்றெடுக்க வேண்டுமெனில் முஸ்லிம்கள் மற்றவர்களுடன் அதிகமான கலந்துரையாடல்களை – அழைப்பு பணிக்கு அப்பாற்ப்பட்டு – செய்ய வேண்டும்.

நான்காவதாக
ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து எதிரிகளும் ஒன்றல்ல என்பதை நாம் உணர வேண்டும். பிரித்து ஆளும் நரித்தனத்தை பாஜக செய்கிறது. ஆசை காட்டி விலைக்கு வாங்குகிறது. அச்சுறுத்தி அடிபணிய வைக்கிறது. அவர்களை சந்தித்து அவர்களோடு நாம் இருக்கிறோம் என்ற உறுதியை நாம் அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் வலிமை என்பது எதிர்க்கட்சிகள்தான். அவர்கள் வலிமையுடன் செயல்பட வேண்டிய தேவைகளை குறித்து எடுத்துரைக்க வேண்டும். சிதறி கிடக்கும் அவர்களை ஒருங்கிணைக்க நாம் முன்னிறங்க வேண்டும்.

ஐந்தாவதாக
அவர்களோடு அரசியல் இலாபத்திற்காக சேர்பவர்களை சந்தித்து பேசி சூழ்நிலைகளை விளக்க வேண்டும். இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்துகளை குறித்து எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவின் பிரதமர் சங்பரிவார் ஆள். இந்திய இராணுவத்தளபதி அவர்களது விருப்பப்படி செயல்படும் நபர். குடியரசுத்தலைவரும் சங்கபரிவாரின் கூடாரத்தில் இருந்து வெளிவந்தவர்தான். இனி இந்தியாவில் என்ன நடைபெறும் என்பதையும் அதன் தீய விளைவுகளை அனைவருமே அனுபவிக்க நேரிடும் என்ற உண்மையையும் அவர்களுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும்.

ஆறாவதாக
சங்பரிவார் கும்பலிடத்தில் விலைப் போகும் சமுதாய துரோகிகளை மிகச் சரியாக அடையாளம் காண வேண்டும். வெறும் சமுதாய உணர்வுகளை தூண்டி விட்டு பேசி பிறகு காணாமல் போகும் சில கயவர்கள் தோலுரிக்கப்பட வேண்டும். இவர்களின் ஆவேஷப் பேச்சுக்களின் விளைவுகளை அனுபவிப்பது மராட்டியத்தலும் உபி யிலும் பாஜகத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டமும் முத்தலாக்கும் மாடும் எப்படி பாஜகவின் அரசியலுக்கு பயன்படுகிறதோ அதைப்போலவேதான் சில சமூக முகமூடி சுயநல தலைவர்களும் அமைப்புகளும் அவற்றை தங்களது வளர்ச்சிக்காகவும் வலுவூட்டவும் அப்பிரச்சனைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜாகிர் நாயக்கின் பிரச்சனையின் போது மக்கள் பின்பலமில்லாத ஒருவர் தமிழகம் காஷ்மீர் ஆகும் என்கிறார். மற்றொருவர் தங்களது தொண்டர்களை தூண்டிவிட்டால் நடப்பது வேறு என்கிறார். அதை கேட்டு ஒரு கூட்டம் கோஷமிடுகிறது. இப்பொழுது ஜாகிர் நாயக் இந்தியாவில் நுழைய முடியாத சூழ்நிலை. இவர்களால் என்ன செய்ய முடிந்தது.
இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று ஹைதராபாத். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் முன்னேறியதை போன்று ஹைதராபாத் முன்னேறதாததற்கு காரணம் மக்களை உணர்ச்சிபூர்வமாக வழி நடத்தி தோற்றுப்போன ரசாக்கியர்களும் இன்றைக்கும் மக்களை அதே வழியில் பயணிக்கச் செய்து தங்களின் அதிகாரங்களையும் செல்வத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் உவைசி குடும்பமும்தான் காரணம். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஏழாவதாக
இன்றைக்கு முஸ்லிம்களை போன்றே பாதிப்புகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் தலித் சமூகத்தை நம்மோடு சேர்த்து நிறுத்த அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்காக ஆத்மார்த்தமாக குரல் கொடுக்க வேண்டும்.

எட்டாவதாக
பாஜக அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்தில் தோலுரிக்கும் வேலைகளை திட்டமிட்டு தொடர்ந்து செய்ய வேண்டும். தங்களது தோல்விகளை வகுப்புக் கலவரங்களின் மூலம் மறைப்பதற்குண்டான வேலையைத்தான் பாஜக செய்யும். குஜராத்தில் பூகம்பத்தின் போது ஏற்பட்ட அவப்பெயரை மறைத்து மக்களை திசை திருப்பி வெற்றி பெருவதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதுதான் கோத்ரா இரயில் எரிப்பும் அதை தொடர்ந்துண்டான குஜராத் இனப்படுகொலைகளும். எனவே மக்களை திசை திருப்ப நடக்கும் அனைத்து வேலைகளையும் காலமுணர்ந்து சரியான முறையில் மக்களிடத்தில் பாஜகவின் உண்மை முகத்தை வெளிக் கொணர வேண்டும்.

ஒன்பதாவதாக
ஊடகங்களை அதிகளவு தன்வயப்படுத்த முயற்சிக்க வேண்டும். அவர்களுடன் நல்லுறவை பேணுவதற்காக தனிக்குழுக்களையே உருவாக்க வேண்டும். சமூகத்திலிருந்தே திறமையாளர்களை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட ஊடகங்களுக்கு நிதியுதவி அளித்தாவது அவர்களை நம் பக்கம் நிறுத்த வேண்டும். இதற்காக சமூக பெருந்தனக்காரர்களின் சிந்தை மாற்றப்பட வேண்டும்.

பத்தாவதாக
சங்பரிவார் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனைகளை உடைக்க வேண்டும். உதாரணமாக பசு ஒரு புனிதம் என்பது. இதை உடைக்காத வரை பசு பிரச்சினை தொடரும். இதை போன்ற பல்வேறு கற்பிதங்களை இந்து மத அறிஞர்களை வைத்தே உடைக்க திட்ட மிட வேண்டும். இதற்காக வரலாற்று அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.

இன்னும் நிறைய நாம் திட்டமிட வேண்டும். அடுத்தடுத்த இதழ்களில் விரிவாக பேசுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *