இந்திய வரலாற்றில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அது நடந்தபோது நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமைக்குரிய ஒன்றாகத் தோன்றுகிறது. இதற்கு முன் முஸ்லிம்கள் இந்த அளவுக்குத் திரளாக அணிதிரண்டு பங்குகொண்ட போராட்டம் இந்தியச் சுதந்திரப் போராட்டம்தான். தொடக்கத்தில், அஸ்ஸாமிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க சிஏஏவுக்கு எதிரான அலை வீசியது. பிறகு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கெதிராகக் களமிறங்கினர். அப்போது அவர்கள்மீது காவல்துறை மேற்கொண்ட படுமோசமான வன்முறை வெறியாட்டம் டெல்லியில் ஷாஹீன் பாக் போராட்டம் உருப்பெற வழிகோலியது. அது இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது.

இந்தியாவின் பலதரப்பட்ட மக்களும் சிஏஏவுக்கு எதிராகக் களமாடினர் என்றபோதிலும் கட்சிகள், அமைப்புகளையெல்லாம் தாண்டி முஸ்லிம்கள் ஒரு சமூகமாக அதில் முன்னணியிலிருந்தனர். மதச்சார்பற்ற கட்சிகள் தங்களை மீட்கும் என்றெல்லாம் காத்திருக்காமல் அவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்தனர். பிறகு, எதிர்க்கட்சிகளும் இதர ஜனநாயக அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின. அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் அரசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளைப் போராட்டக்காரர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டார்கள். அவர்களில் பலர் சிறைக்கொட்டகையிலும் அடைக்கப்பட்டார்கள். அந்தத் தீரமிகு போராட்டக் களத்தில் தனித்துவமான சில முஸ்லிம் குரல்கள் வெளிப்பட்டன; குறிப்பாக, மத்தியப் பல்கலைக்கழக வளாகங்களிலிருந்து. அவற்றில் ஷர்ஜீல் இமாமின் குரல் குறிப்பிடத்தக்க ஒன்று.

மும்பை ஐஐடியின் முன்னாள் மாணவரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவருமான ஷர்ஜீல் இமாம் தற்போது திஹார் சிறையிலிருக்கிறார். அலிகர் முஸ்லிம் பல்கலையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகளைக் காரணம் காட்டி உபி, அஸ்ஸாம், டெல்லி, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்கள் அவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து அவரைக் குறிவைத்தன. அதைத் தொடர்ந்து, 2020 ஜனவரி 28 அன்று அவர் காவல்துறையில் சரணடைந்து சிறை சென்ற பிறகு, பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறி அவர்மீது உபா சட்டம் (UAPA) பாய்ந்தது. ஆனால், உண்மையிலேயே அந்த வன்முறையை முன்னெடுத்த கபில் மிஷ்ரா போன்ற இந்துத்துவவாதிகள் இன்றுவரை சுதந்திரமாகவே திரிகின்றனர்.

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஷர்ஜீல் இமாம் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அப்படியென்ன மாபாதகச் செயலைச் செய்துவிட்டார் அவர்? வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரி பாதையை மறிக்கச் சொன்னதுதான் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு. ஷர்ஜீல் இமாமின் பேச்சு தேச துரோகக் குற்றமாகாது என்று தி க்விண்ட் தளத்தில் பத்திரிகையாளர் ஆதித்யா மேனன் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “இந்தியாவில் சாலை மறியல் செய்வது ஒரு நியாயமான போராட்ட வடிவம். 2008ல் அமர்நாத் கோவில் விவகாரத்தின்போது பல இந்துத்துவ இயக்கங்கள் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையை மறித்து, நாட்டின் எஞ்சிய பகுதியிலிருந்து கஷ்மீரைத் துண்டித்தன. அதை யாரேனும் பிரிவினைவாதம் என்று குற்றம்சாட்டினார்களா? ஆனால், இங்கே ஷர்ஜீல் இமாம் நெடுஞ்சாலையை மறிக்கத்தான் சொன்னார், அதை செய்யக்கூட இல்லை!”

ஷர்ஜீல் இமாமைப் போலவே சிஏஏ எதிர்ப்புப் போராளிகள் பலரை அரசு வேட்டையாடியதற்கும், அவர்களை பூதாகரப்படுத்தி தீவிரவாதக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல அவதூறுகளை அவர்கள்மீது சுமத்தியதற்கும் ‘பொதுச் சமூகம்’ என்ன எதிர்வினையாற்றியது என்பது இங்கு எழும் ஒரு முக்கியமான வினா. அதிலும் லிபரல்கள், செக்யூலர்கள் எனச் சொல்லிக்கொள்வோர் ஷர்ஜீல் இமாம் போன்ற முஸ்லிம்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக நிற்காததை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இதன் காரணமாகவே மத்தியப் பல்கலைக்​கழகங்களில் ஷர்ஜீல் இமாம் முதலானோருக்கு ஆதரவாக நடந்த கூட்டங்களிலெல்லாம் லிபரல், இடதுசாரி வட்டாரங்களை மாணவர்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கினர். அத்துடன், ஷர்ஜீல் இலக்காக்கப்படுவதற்கு அவரின் முஸ்லிம் அடையாளம் முதன்மைப் பங்காற்றுவதை அவர்கள் சுட்டிக்காட்டினர்; இந்த சிவில் சமூகம் முழுக்க இஸ்லாமோ ஃபோபியா வியாபித்திருப்பதையும் அவர்கள் அம்பலப்படுத்தினர்.

உண்மையில், அரசையும் அமைப்புமுறையையும் விமர்சிக்கும் முஸ்லிம் குரலை எந்தத் தரப்பும் சகித்துக்கொள்வதில்லை. முஸ்லிம் செயல்பாட்டாளனை வில்லனாகவோ பாதிக்கப்பட்டவனாகவோ பார்ப்பதற்கு அப்பால் ஒரு போராளியாகப் பார்க்க யாரும் விரும்புவதில்லை. முஸ்லிம்கள் அமைப்பாகத் திரண்டால், தம் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடினால் ‘மதவாதிகள்’, ‘இந்துத்துவத்தை வளர்த்துவிடுபவர்கள்’ என்றெல்லாம் ‘மதச்சார்பற்ற’ வட்டாரம்கூட கூக்குரலிடுவதை நாம் பார்க்கலாம். இப்படியான போக்குகளையெல்லாம் கேள்வி கேட்க, புரட்டிப்​போட ஷர்ஜீல் இமாம் போன்றோரின் கருத்துருவாக்கச் செயல்பாடுகள் நமக்கு உதவும்.

பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஷர்ஜீல் இமாமின் எழுத்துகள் விவாதிக்கின்றன. அவை காத்திரமான மாற்றுப் பார்வைகளை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன. தெரிவுசெய்யப்பட்ட அவரின் கட்டுரைகளையும் பேச்சுக்களையும் தொகுத்தளிக்கிறது இந்நூல். முஸ்லிம் விவகாரம் சார்ந்த பல விவாதங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  • நாகூர் ரிஸ்வான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *