தேர்தல் திருவிழா உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணிகளையும், வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கைகளையும் இறுதி செய்து பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
எப்போதும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் திமுக-அதிமுக என்ற இரண்டு பிரதான கட்சிகளுக்கான மோதலாக மட்டுமே இருந்து வந்திருக்கின்றது. யார் ஜெயித்து வந்தாலும் மக்கள் அதன்மூலம் சில நன்மைகளைப் பெற்றே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தமுறை தமிழக தேர்தல் களம் அதிமுக-திமுக என்பதைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு யார் காரணம், யாருக்கு வாக்களிப்பதன் மூலம் அந்த பிரச்சினைகளை ஓரளவிற்காவது சரி செய்ய முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
தமிழகம் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி அறிவு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, சமூக நல்லிணக்கம், மருத்துவம், சுகாதாரம், விவசாயம், உற்பத்தி, பொருளாதாரம் இப்படி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த மாநிலம். அதற்கு காரணம் இங்கு திமுக, அதிமுக என்ற இரு கட்சிகள் ஆட்சியின்போதும் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நீதி சார்ந்த மக்கள் நலத் திட்டங்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் இந்த வளர்ச்சியை பின்னோக்கிக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இறங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசையும், அதன் அமைச்சர்களையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து, அதன் மூலம் தனது மக்கள் விரோத செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. திமுக ஆட்சியில் இருந்தபோதும், பிறகு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்காமல் உறுதியாக தடுத்திருந்தனர். ஆனால் எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு எவ்வித எதிர்ப்பும் இன்றி நீட்டை தமிழகத்தில் அனுமதித்து மருத்துவக் கனவுடன் படித்து வந்த ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியது. விளைவு இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இப்போது நர்ஸ் படிப்பு, கலை, அறிவியல் என்று எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை நடத்துவோம் என்று இறுமாப்புடன் அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
தமிழகத்தில் இந்தியைத் திணிக்கக் கூடாது என்று மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வரலாற்றில் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு வழிமுறைகளில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழகத்தில் திணிக்க முயற்சித்து வருகிறது மத்திய அரசு. அந்த முயற்சிக்கு தமிழகத்தின் அதிமுக அமைச்சர்களும் உடன்படுவதும், பிறகு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு வேறு வழியின்றி பின்வாங்குவதும் பலமுறை நிகழ்ந்திருக்கின்றது. ,போதாதென்று தமிழகத்தின் அரசு வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றதன் மூலம் அரசு வேலைக்காக ஆண்டுக்கணக்கில் முயன்று வரும் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் போராட்டங்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறது என்று சட்டசபையில் பெருமையாக அறிவித்தார் மறைந்த ஜெயலலிதா. ஆனால் வாழ்வாதாரப் பிரச்சினைக்காக போராடிய மக்களை காட்டுமிராண்டித்தனமாக, சிட்டுக் குருவிகளைப் போல சுட்டுத்தள்ளியது தமிழக அரசு. 10ஆம் வகுப்பு மாணவி உட்பட 13 அப்பாவி பொதுமக்கள் தூத்துக்குடியில் பாஜக-அதிமுக அரச பயங்கரவாதத்துக்கு பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்தியதே தனக்கு தெரியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததன் மூலம் தமிழகத்தின் ஆட்சியதிகாரம் அவரிடம் இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.
புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை உருவாக்கி குலக் கல்வி முறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. இக்கொள்கையின்படி நமது பிள்ளைகளை நுழைவுத் தேர்வுகள் மூலம் தரம்பிரித்து விருப்பமில்லாத படிப்புகளை படிக்க கட்டாயப்படுத்தி, கல்வி கற்றலை விட்டே தூரப்படுத்துவது மத்திய அரசின் திட்டம். அந்த முயற்சிக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தலையாட்டி வருகிறது அதிமுக அரசு.
தமிழகம் இட ஒதுக்கீட்டின் நிலம். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, தமிழர்களை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தன்னிறைவு அடைய வழி ஏற்படுத்தியிருக்கின்றன அரசுகள். ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குவதன் மூலம் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற சதி முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதே வேளையில் உயர்சாதியினருக்கு மட்டும் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று சட்டமியற்றுகின்றது. தமிழக அரசு இது எதற்குமே துளிகூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இசைந்து கொடுப்பதன் மூலம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றது.
விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பருவம் தவறிப் பெய்யும் மழை, அடிக்கடி புயல் பாதிப்புகள், விளைச்சல்களுக்கு உரிய விலை கிடைக்காமை, கார்ப்பரேட் ஆதிக்கம், கூடிக்கொண்டே வரும் கடன்சுமை என்று பல்முனைத் தாக்குதல்களால் பல ஆயிரம் விவசாயிகள் தங்கள் இன்னுயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். தமிழக விவசாயிகள் எலிக்கறி தின்றும்,நிர்வாணமாக ஓடியும் தலைநகர் டில்லியில் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர். ஆனால் அதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல விவசாயிகளின் துயரத்தை அதிகப்படுத்தும்விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் பாஜக அல்லாத அத்தனை கட்சிகளும், மாநில அரசுகளும் அதை எதிர்த்தபோது தமிழக அரசு முந்திக்கொண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்ததுடன், விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் பாதிப்பில்லை என்று தமிழக சட்டமன்றத்திலும் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த சட்டங்களை எதிர்த்து டில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் நூறு நாட்களைக் கடந்தும் போராடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும், ஆடு, கோழி பலியிட தடைவிதிக்கப்படும், சென்னை மூன்றாக பிரிக்கப்படும் என்பது போன்ற தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் விரோதமான பல்வேறு திட்டங்கள் முன்நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநிலக்கட்சிகளுடன் முதலில் கூட்டணியில் இருந்து பிறகு அந்த கட்சிகளை முழுவதுமாக ஸ்வாஹா செய்து தனது மக்கள் விரோத, நாசகர செயல்திட்டங்களை அரங்கேற்றிய வரலாற்றுக்குச் சொந்தமானது பாரதிய ஜனதா கட்சி. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் அதேதான் நிகழ்ந்து வருகின்றது.
இந்த தேர்தலில் அதிமுகவிற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கானது. அழிவின் விளிம்பில் இருக்கும் அதிமுகவைப் பாதுகாக்கவும், பாஜகவின் மக்கள் விரோத, நாசகர திட்டங்களில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்கவும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக சந்தர்ப்பவாத கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு அமையப்போகும் அரசு, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளக நிகழ்ந்த தவறுகளை சரிசெய்யும் விதமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணமும், ஆசையும்.
இந்நேரத்திற்கெல்லாம் உங்கள் வாக்கு யாருக்கு என்பதை தீர்மானித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
- அபுல்ஹசன்