இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும்

இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய, பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குஜராத் இனப்படுகொலையை ஒரு கலவர நிகழ்வாக மட்டுமே நம்மால் பார்க்க இயலாது. அதற்கும் அப்பால் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்தையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றி அமைத்த ஒரு வரலாற்று பேரழிவு நிகழ்வாகவே அதை நாம் பார்க்க வேண்டும். பன்முகச் சமூகம், மதச்சார்பற்ற இந்தியா என்ற தத்துவத்தின் ஆத்மாவை அசிங்கப்படுத்திய ஒரு நிகழ்வு நடந்து இருபதாண்டு கடந்திருக்கிறது. 2002 பிப்ரவரி 27 அன்று சில கயவர்களால் கோத்ராவில் வைத்து சபர்மதி எக்ஸ்பிரஸில் தீ வைக்கப்பட்டது. அதில் அயோத்தியில் இருந்து குஜராத்திற்கு  வந்துகொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் இறந்தார்கள். அதைத்தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் குஜராத் மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டது. அவை அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களாகவே இருந்தது. குஜராத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இருபது மாவட்டங்களிலும் கோத்ரா நிகழ்வைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றது என்று சொன்னால் அவைகள் இயல்பாக நடந்தவை அல்ல. இவற்றை விசாரித்த பல்வேறு விசாரணை குழுக்களும் தனியார் விசாரணை ஏஜென்சிகளும் தெளிவான ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும் இது திட்டமிட்ட தாக்குதல்தான் என நிறுவியுள்ளனர். கொடும் குரூரமான இந்த இனப்படுகொலைக்கு பின்னால் இருந்த உணர்வு என்ன என்பது ஆரம்பத்திலேயே தெள்ளத் தெளிவாக இருந்தது. இப் படுகொலைகளுக்கு தலைமை ஏற்றவர்கள் குறித்தும் பின்னாலிருந்து இயக்கியவர்கள் குறித்தும் பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. இருப்பினும் இனப்படுகொலையில் இருந்து தப்பித்த இரைகள் இப்போதும் நீதிக்காக நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேட்டைக்காரர்களோ அதிகாரத்தின் அரண்மனைகளில் இருந்துகொண்டு ‘குஜராத் மாடலை’ நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்ணூறுகளின் இறுதியில் குஜராத்தில் பாசிச பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு குஜராத்தை இந்துத்துவா பாசிசத்தின் சோதனைச்சாலை என்றே பல சமூக அறிஞர்களும் குறிப்பிட்டனர். பாபரி மசூதி இடிப்புக்கு பிறகு நாட்டில் உருவான முஸ்லிம் விரோத மனப்பாங்கின் விளைவுதான் இது. வெறுப்பின், முஸ்லிம் இனப் பாகுபாடின் அரசியல் செயல்பாடுகளை இந்துத்துவாவின் தலைவர்களும்  பிரச்சாரகர்களும் வெகுவேகமாக முன்னெடுத்துச் சென்றது இக்காலகட்டங்களில்தான். அந்த  அரசியல் சோதனைகளை மிக சரியாக நடைமுறைப்படுத்திய மாநிலம்தான் குஜராத். கேசுபாய் பட்டேலுக்குப் பிறகு நரேந்திர மோடி மாநில முதலமைச்சராக வந்த பிறகு அந்த செயல்பாடுகள் இன்னும் வேகமாக நடைபெற்றன. அதனால், நாட்டின் பல மாநிலங்களிலும் நடைபெற்ற இனக் கலவரங்களை போல இதனை பார்க்க முடியாது.  வெறுப்பின் வைரஸ்களை விதைத்து, முஸ்லிம்கள் மீதான இனப்பாகுபாடுகளை   வளர்த்து, மிகச்சரியான பாதைகளை உருவாக்கிய பிறகுதான் இந்துத்துவ அழிவு சக்திகள் அங்கே தாண்டவமாடின. முதலில் முஸ்லிம்களை அநியாயக்காரர்களாகவும் சுமைகளாகவும் தேவையற்றகளாகவும் ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள். மாமிசத்தை உண்பவர்கள் இயல்பாகவே நீதிநெறியற்றவர்களாக இருப்பார்கள் என பிரச்சாரம் செய்தார்கள். அவ்வாறான பிரச்சாரங்களுக்கு அங்கே இருந்த முதன்மையான ஊடகங்களும் சில காந்தியவாதிகளும் துணை போனார்கள். இவ்வாறான பிரச்சாரங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட வெறுப்பின் இயல்பான பரிணாமம்தான் அந்த இனப்படுகொலைகள்.

நரோடா பாட்டியாவிலும் குல்பர்க் சொசைட்டியிலும் அரங்கேறிய கும்பல்களின் ரவுடியிசம் இப்போது நாடெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட இந்துத்துவ சோதனைகள் இப்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது குஜராத் இனக் கலவரத்தை நடத்திய நரேந்திர மோடி இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பொறுப்பேற்றதுதான். அதுவரை இந்தியாவில் சமான அரசாங்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த சங்பரிவார் கும்பல்களுக்கு அரசின் லகான் நேரடியாக கைகளில் கிடைத்தது. அதன்மூலம் அவர்களது அஜண்டாக்களை நேரடியாக செயல்படுத்த அவர்களுக்கு வேறு தடைகள் எதுவும் இல்லை. கடந்த ஏழு வருடங்களில் குடியுரிமை திருத்த சட்டம் உள்பட எத்தனை எத்தனை சட்டங்கள் சங்பரிவாரின் சமையலறையில் தயார் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சங்பரிவாரின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் உள்ள மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் உள்பட இந்திய அமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான சட்டங்கள் இதே காலகட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. கும்பல் கொலைகளும், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்றதைப் போன்ற இனப்படுகொலைகளும், பாசிச தலைவர்களின் இனப்படுகொலைக்கான அறைகூவல்கலும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. இந்த வழியில்  தொடர்ந்து செயல்படுவதற்கு சங்பரிவார்களுக்கு ஊக்கமாக அமைந்தது இருபது வருடம் முன்பு நடந்த குஜராத் இனப்படுகொலைகள்தான்.  இனப்படுகொலையும் இனப்பாகுபாடும் தத்துவமாகக் கொண்ட ஒரு கட்சி மிகப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தில் உள்ள பொழுது நாட்டின் கதியும் நிலையும் அந்த திசையில்தான் இருக்கும்.

இதுதான் நமக்கு முன்னால் உள்ள உண்மை . ஆனாலும் ஒரு ஜனநாயக சமூகத்திற்கு இந்தச் சூழலை கண்டு காணாமல் அமைதியாக கடந்து செல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் கலந்துரையாடல்களின், போராட்டங்களின் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இதில் மிகவும் மகிழ்வுக்கு உரிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் யாருடைய இரக்கத்திற்கும் கருணைக்கும் தயவுக்கும் காத்திராமல் சுயமே களத்துக்குள் இறங்கி செயல்படுகிறார்கள்.  என்பதுதான். குஜராத்தில் இருந்து கிடைத்த கொடுமையான அனுபவங்களிலிருந்து பாடங்களை படித்து சமூகத்தை சுயமே வலிமைப்படுத்தும்  செயல்பாடுகளின் பக்கம் இனப்படுகொலையின் இரைகள் போட்டி போட்டு செயல்படுகிறார்கள் என்கின்ற நற்செய்தியும் குஜராத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. குஜராத் இனப்படுகொலை காலகட்டத்தின் இரைகளின் அடையாளங்களாக அவதரிக்கப்பட்ட கைகூப்பி கும்ம்பிட்டு நிற்கும் குத்புதீன் அன்சாரியும் பில்கிஸ் பீவியும் உயிர்த்தெழுதலின் துடிப்புமிக்க முன்மாதிரிகளாக எழுந்து நிற்கிறார்கள்.  அக்கிரமக்காரர்கள் குரல்வளையை நெறித்த போதும், அரசாங்கம் அதற்கு துணை நின்று தங்களை ஒடுக்கிய போதும் விதி மீது பழி கூறி ஒதுங்கி நிற்காமல் விதியின் கதியை மாற்ற ஜனநாயக வழியில் அவர்கள் புதிய போராட்டங்களை உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மாற்றத்தின் முகங்கள் தான் புதிய காலகட்டங்களில் நம்பிக்கைகள்.

அச்சம் மிகுந்த முகத்தோடு கும்பிட்ட கூப்பிய கைகளோடு நின்ற குத்புதீன் அன்சாரிகள் அல்ல புதிய காலகட்டத்தின் அடையாளங்கள். திப்புவின் வாரிசுகளான முஸ்கான்களும் ஆலி முஸ்லியார்களின் வாரிசுகளான ஆயிஷா ரெனாக்களும் முஹம்மத் அலி ஜவ்ஹரின் வாரிசுகளான உமர் காலிதும் ஷர்ஜீல் இமாமும்தான் புதிய கால கட்டத்தின் அடையாளங்கள்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *