“மதங்கள் குறித்து விமர்சனப் பார்வையை மட்டுமே கொண்டிருந்த நான் அவற்றை ஆழமாகப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டிய அவசியத்தை செப் 11 ஏற்படுத்தியது” – என்பார் உலகளவில் இன்று மிக முக்கியமான ஒப்பீட்டு மதவியல் அறிஞராக அறியப்படும் கரேன் ஆம்ஸ்ட்ராங்க். இந்தியாவில் பிறந்த நமக்கு இன்னும் சற்று முன்னதாகவே அந்த அவசியம் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில்தான் நான் மதங்கள் குறித்து யோசிக்கவும் வாசிக்கவும் தொடங்கினேன். அந்தப் பின்னணியில் எழுதப்பட்டதுதான் எனது “இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்”.

“நான் புரிந்து கொண்ட நபிகள்” – நூலை எழுதத் தொடங்கியபோது நான் நிறைய சீரத்களை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டாலும் அடிப்படையாகக் கொண்டது மூன்று நூல்களைத்தான். அந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்புத்தான் இது. இவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். இப்னு இஷாக் (கி.பி.704 -768). மதினாவில் பிறந்து பாக்தாத்தில் காலமானவர்.

இன்னொருவர் ஒரு கம்யூனிஸ்ட். யூதர். மேக்சிம் ரோடின்சன் (1915 – 2004). இவரது பெற்றோர் இருவரும் ஹிட்லரின் ஆஸ்ட்விச் சித்திரவதைக் கூடத்தில் இறந்து போனார்கள். இவர் கடவுள் உண்டா இல்லையா என்கிற பிரச்சினையில் ஆர்வமற்ற ஒரு agnostic என்பது குறிப்பிடத் தக்கது..

மூன்றாமவர் ஒரு பெண். கரேன் ஆம்ஸ்ட்ராங் (1944 – ). ஐரிஷ் கத்தோலிக்க மரபில் பிறந்தவர். கத்தோலிக்கப் பெண் துறவியாக இருந்து ஆறு ஆண்டுகளில் அதிலிருந்து விலகி வெளியே வந்து கத்தோலிக்க மதத்தைக் கடுமையாக விமர்சித்தவர். கிண்டல் அடித்தவர். இன்று உலகளவில் மதிக்கப்படும் ஒரு மதவியல் அறிஞர்.

இப்னு ஈஷாக்கின் “சீரத் ரசூல் அல்லாஹ்” நூலை ரொம்ப நாட்கள் தேடிக் கடைசியாக ஒரு pdf பிரதி கிடைக்கப் பெற்றேன். விவரம் அறிந்த பலருக்கும் கூட அப்படி ஒரு நூல் இருப்பது தெரிந்திருக்கவில்லை. கவிக்கோ அவர்கள் தன்னிடம் ஒரு பிரதி இருப்பதாகச் சொன்னதால் அவரது வீட்டுக்குச் சென்றேன். என்னிடம் மிக்க அன்பு கொண்ட அவர் தந்த நூல் நான் தேடி வந்ததல்ல.

அவ்வளவு தீவிரமாக நான் அந்த நூலைத் தேடியதற்குக் காரணம் அது நபிகள் மறைந்து மிக அருகாக எழுதப்பட்ட ஒரு நூல். மிக்க வளர்ச்சி அடைந்த ஒரு மதமாகவும் வென்று பல நாடுகளை வென்ற ஒரு இஸ்லாமியப் பேரரசாகவும் ஆனபின் எழுதப்பட்ட சீரத் அல்ல இது. பின்னால் வந்த நூற்றுக் கணக்கான சீரத்கள் மிகவும் செதுக்கிச் சீரமைத்து எழுதப்பட்டவை. நபிகளை அவரது காலத்தில் வைத்து ஒரு வரலாற்று நாயகராகவும் பார்க்காமல் ஒரு இறைத்தூதராக மட்டுமே அணுகியதால் அவரது வியக்கத்தக்க முழு ஆளுமையும் அவற்றில் வெளிப்படவில்லை என்பது என் கருத்து. ஆனால் நபிகளின் மறைவுக்கு மிகச் சமீபமாக எழுதப்பட்ட இப்னு இஷாக்கின் இந்த சீரத் நபிகளை வரலாற்றில் வாழ்ந்த ஒரு அற்புதமான மனிதராக நமக்குக் காட்டின. அந்த வகையில் அதற்கு இணை ஏதுமில்லை.

ஆனால் அதற்காகவே இப்னு இஷாக்கின் சம காலத்தவரான மாலிக் இப்னு அனஸ் போன்றவர்களால் அவர் விமர்சிக்கப்பட்டதும் உண்டு. இப்னு இஷ்ஹாக்கின் தாத்தா காலத்தில் யூத மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு வந்தவர்கள் அவர்கள். அந்தத் தாக்கம் அவரது எழுத்துக்களில் இருக்கின்றது என்பதுதான் அவர்கள் வைத்த விமர்சனம். ஆனால் அதே காலத்தில் வாழ்ந்த சுஃப்யான் இப்னு உயானாஹ் போன்றவர்கள் இஷாக் வலுவான ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதவில்லை என அவர் கூறியுள்ளவை ஆதாரபூர்வமானவை எனப் பதிவு செய்துள்ளனர்.

அக்கால போர்ப் படை எடுப்புகள் பற்றி எழுதுவதில் வல்லவரான இஷாக்கை அப்பாசிட் காலிஃப் அல் மன்சூர் ஆதம் நபிகள் முதல் முஹம்மது நபிகள் வரையிலான வரலாற்றை எழுதப் பணித்தபோது அதன் ஓரங்கமாக நபிகள் கால வரலாறும் எழுதப்பட்டது. அதுவே இன்று இப்னு இஷாக்கின் சீரத்தாக நமக்குக் கிடைக்கிறது.

மாக்சிம் ரோடின்சன் ஒரு இடதுசாரி. ஆனாலும் 1958 இல் அவர் ஃப்ரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யூதராக இருந்தபோதும் இஸ்ரேல் மீது கடுமையான விமர்சங்களை வைத்தவர் அவர். 1968 இல் ஜாக்குவாஸ் பெக்குடன் இணைந்து ஒரு ஆய்வுக் குழு (study circle) அமைத்து பலஸ்தீன அரசு ஒன்று உருவாக்குவது குறித்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டவர் ரோடின்சன் என்பது குறிப்பிடத் தக்கது. Israel: A Colonial-Settler State? (1973) எனும் அவரது நூல் இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்த ஒன்று.

1937 முதலே அவர் National Council of Research இல் இணைந்து தன்னை இஸ்லாமியக் கல்வி மற்றும் ஆய்வுகளில் ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் Damascus French Institute இன் இஸ்லாமிய அறிவுத்துறையில் ஆய்வுகளைத் தொடர்ந்தார். 1948 இல் ஃப்ரான்சில் உள்ள Bibliothèque Nationale இல் இஸ்லாமியத் துறைக்குப் பொறுப்பேற்றார். நபிகளின் வரலாறு தவிர இஸ்லாம் குறித்த மேலும் ஐந்து நூல்களை அவர் ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதிப் பின் அவற்றில் சில ஆங்கிலத்திலும் மொழியாக்கப்பட்டன.

கரேன் ஆம்ஸ்ட்ராங் இப்போது நம்முடன் வாழ்ந்து கொண்டுள்ள இஸ்லாமிய இயல் அறிஞர். உலக அளவில் பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதற்கு இஸ்லாம் குறித்த சரியான புரிதலை மேலை உலகம் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பழைய வடிவிலான வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும் எனவும் தன் நூல்கள் வாயிலாகவும், உரைகள் வாயிலாகவும் தற்போது வற்புறுத்தி வருபவர் அவர்.

எது இஸ்லாம், எது இஸ்லாம் அல்ல என்பதை முதலில் மேலை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். செப் 11 போன்ற கொடும் வன்முறைகளுக்கு இஸ்லாமில் இடமில்லை என்பதை அது புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அவர். தனது எழுத்துக்கள், பேச்சுக்கள் நேர்காணல்கள் முதலியவற்றின் ஊடாக அவர் இப்போது அந்தப் பணியைத் தொடர்கிறார்.

திருக்குர்ஆன் வரட்டுத் தத்துவம் எதையும் பேசுவதில்லை. எளிய நடைமுறைக்குச் சாத்தியமான கருத்துக்களையே அது முன் வைக்கிறது. சொத்தை அது சமமாகப் பகிர வேண்டும் என்கிறது. சுயநல நோக்குடன் தனியார் நலன்களை வளர்ப்பது தீது. நீதியும் பண்பும் உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டியது அவசியம். ஏழைகள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளார்கள் என்பதைப் புரிந்து அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை மிகவும் எளிமையாகச் சொல்வதுதான் இஸ்லாம் என்கிறார் கரேன். இதை அவர் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் பேசி வருகிறார் என்பதுதான் இதில் கவனத்துக்குரியது.

“இஸ்லாம் சமாதானத்திற்கான மதம். எந்தச் சிறந்த உலக மதங்களையும் போல அதுவும் உலகின் வன்முறைகளிலிருந்து தன்னை தூர நிறுத்திக் கொள்கிறது. அமைதியை நோக்கிய நகர்வுக்காகவே அது போராடுகிறது.
“வேர்ச்சொல் ஆய்வின்படி ‘இஸ்லாம்’ என்பது ‘சலாம்’ அதாவது “அமைதி” என்பதிலிருந்து தன் பெயரையும் அடையாளத்தையும் பெறுகிறது.

“அதற்கென்ன சாட்சியம் அல்லது நிரூபணம் உள்ளது என்கிறீர்களா. இறைத்தூதர் முஹம்மதின் வாழும் உரைகளும்தான் சாட்சியம்.” – என்றெல்லாம் அவர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.

Mohammed – A Biography of the Prophet (1991) எனும் கரேன் ஆம்ஸ்ட்ராங்கின் நூல் எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்த நூல். இறைமை மற்றும் கடவுள் குறித்த பல முக்கிய நூல்களின் (History of God, Jerusalem –One City Three Faiths, Battle for God) ஆசிரியர் அவர். இந்திய மதங்களில் பௌத்தம் குறித்த அவரது நூல் குறிப்பிடத் தக்க ஒன்று.

அ.மார்க்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *