“பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மன, உடல் ரீதியாக தொந்தரவு தந்தால் மாணவர்களின் மாற்று சான்றிதழில் அவர்கள் செய்த குற்றம் எழுதப்பட்டு பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்கிற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சட்டமன்ற பேச்சு மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. ஒரு சில மாணவர்களின் தற்போதைய ஒழுங்கற்ற செயல்களுக்கான காரணத்தை ஆராயாமல், அரசு முன்னெடுக்கும் இந்த கடும்போக்குத்தனத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ்நாடுவன்மையாக கண்டிப்பதாக SIO தமிழக கல்விச்செயலாளர் சகோ.சுஹைப் ஜிப்ரான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாணவர் பருவம் என்பதே கற்று, திருத்தம் பெறும் வயதுதான். அவர்களை அறிவிலும் செயலிலும் ஒழுங்குள்ளவர்களாக மாற்றத்தான் எல்லா பெற்றோர்களும் பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை செலுத்துகிறார்கள். சிறிதோ, பெரிதோ தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தல் என்கிற மனப்பான்மையை கடந்து, போலீஸ்காரர்களை போல உடனேயே கடுமையாக தண்டித்துவிட வேண்டும் என்கிற அரசின் பேச்சு முறையானதாக இல்லை. நாம் கடந்து வந்த பேரிடர் காலநிலை அரசாங்கம், தொழில் நிறுவனம், குடும்பம், தனிமனிதன் என எல்லாத் தரப்பினரையும் சில மனச்சிக்கல்களில் தள்ளி இருக்கின்றது. அதே போலத்தான் இங்கு மாணவர் சமூகமும் நீண்டகால சமூக இடைவெளியை, தனிமையை கடந்து வந்திருக்கின்றார்கள். மக்களின்  வாழ்வியலை சரிப்படுத்த நிவாரணப் பொருட்களை கொடுப்பதுபோல, மாணவர்களின் மனோபாவத்தை மீண்டும் அதே பாதைக்கு கொண்டுவர தகுந்த கற்றல் மாறுபடுத்தல்களையும், தொடர் ஆலோசனைகளையும் கொடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான புறச்சூழலில் இருந்து வருபவர்கள் கிடையாது. அவர்களை சமூகத்தோடு இயன்று வாழும் ஒழுக்க விழுமங்கள் கொண்டவர்களாக உருவாக்குவதே பள்ளி மற்றும் அரசு நிர்வாகத்தின் கடமையாக SIO பார்க்கிறது. ஆனால் காவல் நிலையங்கள் போல குற்றப் பின்னணி உள்ளவர்களாக மாணவர்களை முத்திரை குத்தி, நிரந்தர விலக்கு என்பது கல்வியை விட்டே அவர்களை விலக்கி வைத்துவிடும்.

அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களை ஆரம்பத்திலேயே மிரட்டிவைத்தல் மட்டும்தான் என்கிற அளவுகோலில் கடந்தும் சென்றுவிட முடியாது. ஆசிரியர்கள் மாணவர்களை அணுகுகின்ற முறையை, இது எவ்வளவு மோசமானதாக மாற்றும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம், அகமதிப்பீட்டு மதிப்பெண்ணுக்காக நீ என்னை சார்ந்துதான் இருக்கிறாய் என மாணவர்களை மிரட்டி வைத்து தனிப்பட்ட வேலைகளை செய்ய வைக்கின்ற ஆசிரியர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே,மாணவர்களின் செயல்களில் ஏற்பட்டு இருக்கும் இந்த மாறுதல்களை களைவதற்கு பள்ளிகள் தோறும் மனநல ஆலோசகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என தனி பொறுப்பாசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும்.  கூடவே ஆசிரியர்களின் மனசூழலையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர், மாணவரின் மன இறுக்கங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். வெறும் மதிப்பெண் சார்ந்த கற்றல், மன இறுக்கத்திற்கே வழிவகுக்கும். இந்த கொரானா போன்ற பேரிடர் காலநிலைக்குப் பின், நமது கற்பித்தல் முறைகளில் சில மாறுதல்களும் தேவை என்பதை SIO தனது கோரிக்கையாக முன்வைக்கிறதுஎன்று அவர் தெரிவித்தார்.

சுஹைப் ஜிப்ரான் – கல்வி வளாகச் செயலாளர் (SIO)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *