ஜஸ்வந்த்பாயி நயி, கோவிந்த்பாயி நயி, சைலேஷ் பட், மிதேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர் பாயி வொஹானிய, பிரதீப் மோர்தியா, ராஜு பாய் சோனி, ரமேஷ் சந்தன….

இவர்கள் யார் தெரியுமா..? இவர்கள்தான் பிராமணர்கள். ஆகவே இவர்கள் நல்லவர்கள் என்று கூறி குஜராத் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகள்.

2002 மார்ச் மூன்றென்று நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் காலகட்டத்தில் ஒரு குடும்பம் முழுவதையும் கொன்றொழித்த கயவர்கள் இவர்கள். 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள், அவரது மூன்று வயது குழந்தையை தரையில் அடித்து கண்முன்னே படுகொலை செய்தார்கள், அவர்களது குடும்பத்தில் இருந்த பிறந்து ஒரு தினம் மட்டுமே ஆன பச்சிளம் பாலகன் உட்பட  7 மனித உயிர்களை, முஸ்லிம்களை கொடூரமாக கொன்றார்கள்.  அதற்காக நடைபெற்ற நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தின் முடிவில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 மனித பிசாசுகள் அவர்கள். 2002 மார்ச் மூன்றென்று குஜராத்தில் தஹோத் மாவட்டத்தில் ரந்திக்பூர் கிராமத்தில் சங்பரிவார் கொலையாளி கூட்டத்திடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்த பெண்களும் குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டத்தை வழிமறித்து பெண்களை துகிலுரித்து, பாலியல் வன்கொடுமை செய்து அனைவரையும் கொன்றொழித்தனர் அந்த கொடூரர்கள்.

அன்று அவர்களால் செத்து விட்டதாக கருதி விட்டுச் சென்ற,  உண்மையை உலகிற்கு உரத்து சொல்வதற்காக உயிர் பிழைத்து வந்த போராளிதான் பில்கீஸ் பானு. அந்தக் கொலை கூட்டம் சென்ற மூன்று மணி நேரத்துக்கு பிறகுதான் அவருக்கு நினைவு வந்தது. உணர்ந்து எழுகின்ற பொழுது அவரது உடலில் உடைகள் எதுவும் இல்லை. அவருடன் இருந்த குழந்தையின் உடலில் உயிரும் இல்லை. ஆனால் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணான அவர் தன் உணர்வுகளை இழக்கவில்லை. சங்பரிவார் கூட்டத்திற்கு முன்னால் தோற்றுப் போக விரும்பவில்லை. தன்னுடைய குழந்தையை தரையில் அடைத்து கொலை செய்த பஞ்சமா பாதகர்களை, தன்னுடைய உறவினர்களை படுகொலை செய்த கயவர்களை சட்டத்திற்கு முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர அவர் போராடினார். மனிதர்களின் வடிவில் சாத்தான்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த குஜராத்தின் மண்ணில் நின்று கொண்டு அப்படி ஒரு போராட்டம் நடத்துவதற்கு தனி தைரியம் வேண்டும். சங்பரிவாரின் இரை என்ற இடத்தில் இருந்து உயர்த்தெழுந்து போராளி என்ற இடத்தை நோக்கி உயர்ந்தார். அந்த தளராத போராட்டத்தின் விளைவாகத்தான் பதினோரு பேர்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இன்று அந்த பதினோரு நபர்களும் குஜராத்தின் வீதிகளில் இனிப்பு பாயாசங்கள் அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளனர். அவர்களது கால்களை தொட்டு வணங்க சங்பரிவார் நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட இடம் எது தெரியுமா? பாஜகவின் சித்தாந்தவாதி என்று அழைக்கப்படும் தீனதயாள் உபாத்தியாயாவின் பெயரில் நடத்தப்படும் ஒரு அறக்கட்டளையின் அலுவலகத்தில்தான் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரத்தின் பவள விழா கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது அந்த சுதந்திரத்தின் பெயரால் அந்தப் பாவிகள் 11 பேரை குஜராத் அரசு விடுவித்து இருக்கிறது. ஒருவேளை வரும் காலகட்டங்களில் நமது பிள்ளைகள் இந்த 11 பேர்களையும் சுதந்திரத்தின் போராளிகள் என்று படிக்க வேண்டியது வரும் போல்… சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேவின் புகைப்படங்களை கையில் ஏந்தி சுதந்திர தின பேரணி நடக்கும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

உச்ச நீதிமன்றத்தின் மேல் பார்வையில்தான் பில்கீஸ் பானு வழக்கு நடந்தது. வழக்கின் விசாரணையை குஜராத்திற்கு வெளியே மகாராஷ்டிராவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்றங்களுக்கும் சுதந்திரம் இல்லாத நிலைமைதான் குஜராத்தில் நிலவியது என்று உச்ச நீதிமன்றம் கூட அறிந்தது போல். காரணம் இங்குதான் அமித்சாவின் வழக்கை விசாரித்த லோயாக்கள் மர்ம மரணம் அடைந்தார்கள். புகார் கொடுப்பதற்கும் எஃப் ஐ ஆர் பதிவு செய்வதற்கும் வழக்கின் இன்ன பிற நடைவடிக்கைகளுக்கும் பெரும் சிக்கல்களை பில்கிஸ் பானு குடும்பம் எதிர்கொண்டது. இந்த எல்லா தடைகளையும் கடந்து தான் 11 நபர்கள் தண்டிக்கப்பட்டார்கள். பில்கீஸ் பானுவின், அவரது கணவர் யாகூப் ரசூலின், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களின் தளராத உறுதிதான் இந்த வழக்கு தரமான முடிவை எட்ட வைத்தது.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேர் படுகொலை செய்யப்பட்ட, ஏராளமான பெண்களின் மானம் பறிக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான பேர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத, கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையில் இன்னமும் விசாரிக்கப்படாத புகார்களும் தண்டனை அளிக்கப்படாத வழக்குகளும் மட்டுமே மிஞ்சி நிற்கும் நிலையில் பில்கிஸ் பானுவின் வழக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பில்கிஸ் பானு அடைந்த வெற்றி ஒரு அசாதாரண வெற்றி. போராடிப் பெற்ற வெற்றி. அந்த வெற்றியையும் உச்சநீதிமன்றத்தையும்  இழிவுபடுத்தும் வகையில்தான் இப்போது ஒரு நடவடிக்கையை குஜராத் அரசு எடுத்துள்ளது. குஜராத் இனப்படுகொலையின் மூலம் கிடைத்து வெற்றியை தங்களது பெருமையாக கருதிக் கொண்டு நடப்பவர்கள் ஆளும் தேசத்தில் இவ்வாறு நடக்காமல் இருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். மனிதர்களை கூட்டாக படுகொலை செய்த கொலையாளிகளை, கொடும் கிரிமினல்களை சட்டத்தின் முன்னால் கொண்டு வருவதற்காக பாடுபட்ட தீஸ்டா செடால்வாட்டும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆர்பி ஸ்ரீ குமாரும் சஞ்சய் பட்டும் சிறையில் அடைபட்டு கிடப்பதும், பாலியல் வன்முறை கொலையாளிகள் சிறையில் இருந்து வெளியே வருவதும் அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படுவதும் நம்முடைய பெருமைமிக்க இந்திய கலாச்சாரம் ‘பாரத காலச்சாரமாக’  மாறிவிட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சமகாலச் செய்திகள் இரு விஷயங்களை உரத்துச் சொல்கின்றன.

ஒன்று.,  பிராமணர்கள் நல்லவர்கள், சாத்வீகமானவர்கள், அமைதியானவர்கள், பிறருக்கு துன்பம் நாடாதவர்கள் என்ற போலி கட்டமைப்பு உடைத்து நொறுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஒன்றும் புனிதர்கள் கிடையாது. அவர்களுக்குள்ளும் கிரிமினல்கள் உண்டு என்பதைதான் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஏன்..,  இன்று இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய கலவரங்களுக்கும் வன்முறை நிகழ்வுகளுக்கும் தலைமை ஏற்று இருப்பதும் வழிகாட்டிக் கொண்டிருப்பதும் அந்த பிராமண வர்க்கம்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற மனு சாஸ்திர கோட்பாடும் சாணக்கிய வழிமுறைகளும்தான் அவர்களின் மைய வழிகாட்டுதல்.

இரண்டாவதாக இந்திய சமூகம் மனுசாஸ்திர நீதி அமைப்பின் அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.  பார்ப்பனன் அல்லாதவன் பார்ப்பன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால் அவர்களை சிறைச்சேதம் செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடிய மனு சாஸ்திரம் ஒரு பார்ப்பனன் பார்ப்பன சமூகத்தில் இல்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டால் மொட்டை அடிப்பதோ தண்டம் கட்டுவதோ போதும் என்று சொல்கிறது. அந்த அநீத தருமத்திற்கு பின்னால் இந்திய சமூக அமைப்பு செல்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. அங்கே இருந்துதான் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற கருத்தாக்கம் உருவாகிறது. நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுந்தண்டனை அளிக்கப்படுகின்ற பொழுது பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய பார்ப்பனர்களுக்கு அந்த தண்டனை அளிக்கப்படவில்லை என்பது அந்த வேறுபாட்டை உறுதிப்படுத்துகிறது.

நீதி உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் செய்திகள்தான் குஜராத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு அதிர்ச்சி இந்தியாவில் உள்ள அரசியல் தலைமைகளுக்கோ குடிமை சமூகங்களுக்கோ பொதுமக்களுக்கோ ஏற்பட்டதாக நமக்குத் தெரியவில்லை. ஏன், முஸ்லிம் தலைமைகள் கூட மரத்துப் போய் உணர்ச்சிகள் அற்று கிடக்கிறார்கள். நிச்சயம் ஒரு நாள் இந்த மரத்துப்போன நிலைமைகள் மாற்றத்திற்கு உள்ளாகும். நீதிக்காக வீதிகள் கிளர்ந்தெழும். நீதியை எப்போதும் யாராலும் எல்லா காலமும் தடை போட்டு நிறுத்த முடியாது.

– K.S. அப்துல் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *