டெல்லி கலவர வழக்கைக் காரணம் காட்டி உபா கொடுஞ்சட்டத்தில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார் ஆசிப் இக்பால் தன்ஹா. 13 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்கு பெயில் கிடைத்தது. டெல்லி நீதிமன்றத்தின் குறிப்பாக நீதிபதி சௌஜன்யா சங்கரனின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டியவர், மற்றவர்கள் நீண்டகாலம் சிறையில் வாடும்போது இதில் வியப்பேதுமில்லை என்கிறார்.

ஆனால், இந்தியர்கள் நீதி அமைப்பு மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கிராமங்களில் நடக்கும் தகராரில் விளிம்புநிலை நபர் சட்டம் எங்களைக் காப்பாற்றும் என்று சொல்வதிலிருந்தே அந்த நம்பிக்கை பிறக்கிறது என்றும் கூறுகிறார் தன்ஹா. ஆனால், அது தனது தாமதத்தைக் களைய வேண்டும் என்பதே தேவையாக உள்ளது. ‘நான் விடுதலை செய்யப்படுவேன் என்று நம்பினேன். காரணம், எனக்கு எதிரான குற்ற ஆவணம் முழுக்க குளறுபடியாக இருந்தது. என்னோடு தொடர்புப்படுத்திக் குற்றம்சாட்டப்பட்ட நடாஷா மற்றும் தேவக்னாவை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அறிவேன். ஆனால், அவர்களிடம் நான் பேசியது கூட இல்லை. நான் முழுமையாகப் படித்த 17 ஆயிரம் பக்க குற்ற ஆவணம் முழுக்க தவறுகள் நிரம்பியிருந்தது’ என்கிறார்.

சிறை வாழ்க்கை;

எனது முதல் 14 நாளில் வழிபடவும், ரமழானில் நோன்பிருக்கவும் கூட அனுமதிக்கப்படவில்லை. என்னை மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். எந்த வழக்கில் கைதாகியிருக்கிறாய் என்று கேட்டவர்கள், பதில் சொன்னவுடன் வினோதமாகப் பார்த்தனர். நான்காம் எண் சிறைக்கு மாறிய பிறகு சூழல் மாறியது. உரையாடல்கள், பாடல் பாடுதல், கதைகள் என உற்சாகப்படுத்தப்பட்டேன். கலர் பென்சில் வாங்கி வரைதல், மற்றவர்களுக்காகக் கடிதங்கள் எழுதுவதில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நாளும் குடும்பத்தைக் காண 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் மற்றவர்களின் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள இணைப்பு கருவியாகச் செயல்பட்டேன்.

சிறையில் வசிப்பவர்களை அசுத்தமான குப்பைகளாக சமூகம் காண்கிறது. குப்பைகளும் மறு சுழற்சிக்குப் பயன்படும். ஆதலால், முறையாக நடத்துவதற்கு அவர்கள் அனைத்து விதத்திலும் தகுதியானவர்கள். மருந்துகள், மருத்துவ பரிசோதனை, சரியான உணவு மற்றும் சட்டரீதியான உதவி போன்ற அவர்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டியதுகூட வழங்கப்படவில்லை. சிலர் முறையான கவுன்சிலிங் தேவைப்படும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

சிறைவாசிகளுக்கு போதுமான வாசிப்பு நிலைமை இல்லை. நூலகம் இருந்தாலும் அதற்கான சூழல் மறுக்கப்படுகிறது. அதிலும் நூலகத்தில் நாவலைத் தவிர எதுவுமில்லை. செய்தித்தாள் படிக்க நினைப்பவர்கள் முன் பணம் கட்ட வேண்டும். அது வெளியில் விற்கும் விலையை விட 10% அதிகம். என்னைப் பற்றிய செய்திகளை முழுவதுமாக கத்தரித்துவிட்டுதான எனக்கு அனுப்புவார்கள். நான் எனது சக சிறைவாசியின் தேவையைக் கோரிக்கையாக வைத்தால் கூட இது உனது அரசியலுக்கான இடமில்லை என்பார்கள். சிறையில் தொலைக்காட்சி இருந்தாலும் செய்திகள் பார்க்க ஒருபோதும் மோடி அரசு அனுமதித்துவிடாது.

தன்ஹாவின் ஆன்லைன் தேர்வுக்காகத் தனி இல்லம் ஏற்பாடு செய்துதரப்பட்டது. அதுபற்றி கூறும்போது, ‘சிறையில் கற்க முடியாதற்குக் காரணம் முறையாகக் கவனம் செலுத்த முடியாது. மற்றொன்று உங்கள் படிப்புக்காக மற்றவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்ல முடியாது. எவ்வித ஆதரவுமற்ற சிறைவாசிகள் உரையாடல் இல்லாமல் தங்கள் 24 மணி நேரத்தை எப்படித்தான் கழிப்பார்கள்’ என்கிறார்.

ஆசிப் தன்ஹாவின் கைது;

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து ஜாமியா கல்லூரி வளாகம் முழுவதுமாக மூடப்பட்டது. தடாலடியாக நுழைந்த டெல்லி போலீஸ் மாணவர்களைத் தாக்கி நூலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வரை அடித்து நொறுக்கினர். கைதாகும் முந்தைய சில வாரங்கள் டெல்லியிலிருந்தாலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடியுரிமை போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்தார். அவரை கைதில் சிக்கவைக்க டெல்லி போலீஸ் தயாராகவே இருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் ஆசிப் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டது போலீஸ். ‘என்னைத் தீவிரவாதி, ஜிஹாதி, கலவரக்காரன் என்று இங்குள்ள ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அது இன்னும் யூடியூபில் கிடைக்கிறது. அவை என்னைப் பல முறை அழவைத்தன’ என்கிறார் தன்ஹா.

சஃபூரா ஜர்கர், மீரன் ஹைதரை டெல்லி போலீஸ் கைது செய்த உடனேயே தன்னையும் தேடி வருவார்கள் என்று உணர்ந்த ஆசிப், உபா சட்டத்தைப் பற்றி அறிய ஆரம்பித்தார். விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து போலீஸால் துன்புறுத்தப்பட்டார். ஒரு போட்டாவை வாங்குவதில் கூட திரும்பத் திரும்ப எடுத்து வரச்சொல்லிச் சோதித்தனர். வீட்டில் இல்லையென்றால் எங்கே சென்றாய் என்று கேட்பது முதல் தன்ஹாவின் சுதந்திரத்தை முழுமையாகப் பாதித்தனர். இறுதியாக ஜாமியா நகர் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டவர் அங்கிருந்து தனி காரின் மூலம் சிறப்பு காவல் நிலையத்திற்குச் சென்று இறுதியாக சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குடும்பத்தின் ஆதரவு;

ஜார்கண்டின் அந்த சிறிய கிராமத்திலிருந்து டெல்லி வரை கல்வி பயில வந்த முதல் நபர் தன்ஹா. அவர் தனது நாட்டிற்காகவும், அரசியலமைப்பிற்காகவும் உரிமைக்காகவும் மற்றும் அடையாளத்திற்காகவும் போராடுவதை ஒருபோதும் தடுக்க மாட்டேன் என்று அவரது தாயார் வாக்குறுதி அளித்துள்ளார். தன்ஹாவின் முதலாவது போராட்டம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தொடங்கவில்லை. ஜாமியாவில் யூனியன் தேர்தலுக்க்கு தொடங்கி, கும்பல் படுகொலை எதிர்ப்பு, ரோஹித் வெமுலா தற்கொலை என அது நீண்ட பின்னணியின் நீட்சி.

தன்ஹாவின் வாழ்வில் முக்கிய திருப்புமுனை என்றால் அது நஜீப் அஹமதின் மாயம்தான். 2016ம் ஏபிவிபி அமைப்பால் தாக்கப்பட்ட பிறகு காணாமல் போனார் நஜீப் அஹமத். நஜீபோடு நெருங்கிய தொடர்பு படுவதாகக் கூறும் தன்ஹா, நஜீபின் தாயார் எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்கச் சென்றுவிடுவார். இந்தியாவில் ஒரு முஸ்லிமாக இருப்பதற்குத் தேவையான வலிமையையும், இந்தியத் தேசியவாதம் முஸ்லிம்களை ஒதுக்கும் அரசியலையும், ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கொண்டுள்ள முஸ்லீம் விலகல் போக்கையும் கூறுவார். நடந்த அநீதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தவறவிட்ட பொறுப்பையும் கண்டித்து விமர்சிப்பார்.

முஸ்லிம்கள், ஆதிவாசிகள், பெண்கள், தலித்துகள் போன்ற விளிம்புநிலையினரை துன்புறுத்தும் இந்தியத் தேசியத்தின் ஏற்ற தாழ்வுக்கு எதிராக முஸ்லீம்கள் முன் நிற்க வேண்டும் என்பதே தன்ஹாவின் வலியுறுத்தல். ‘நான் மீண்டும் கைது செய்யப்படலாம். ஏனெனில் என்னைத் தீவிரவாதி, தேசவிரோதி என்று முத்திரை குத்தியுள்ளார்கள். ஆனால், அதற்கு அச்சப்படும் அளவிற்கு நான் கோழை அல்ல. எப்பொழுது இந்த நாட்டிற்கும் அரசியலமைப்பிற்கும் ஆசிப் தன்ஹா தேவையோ அன்று முதலில் வந்து நிற்பேன்’ என்று பகிரங்கமாகப் பேசுகிறார் தன்ஹா.

National Herald பக்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது..

மொழிபெயர்ப்பாளர் – அஜ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *