இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்துத்துவமயமாக்க வேண்டும். குறைபாடுகள் உடைய, மேற்கத்திய சித்தாந்தம் போதித்த மதச்சார்பற்ற தத்துவத்தைத்தான் இந்திய அமைப்புச் சட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய சித்தாந்தமான சோசலிசமும் இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல. இதில் உள்ள பல அடிப்படை விஷயங்களையும் மாற்றம் செய்ய வேண்டும்.. போன்ற பல்வேறு கருத்துக்களை கோல்வாக்கரின் சித்தாந்தங்களை மையமாகக் கொண்டு ஒரு பாஜக தலைவர் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் அவரிடம் பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜே பி நட்டா விளக்கம் கேட்டுள்ளார். அதற்கான விடையை காண நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை விமர்சித்து ஆர் எஸ் எஸ்ஸின் குருஜி கோல்வால்கர் எழுதியுள்ளார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது. அவர் எழுதிய ஞான கங்கையை  அவர்களால் புறக்கணித்து பேசவும் முடியாது. ஏனெனில், ஆர்எஸ்எஸ் முன்பு வேலைகளை செய்ததும் இப்போது செய்து வருவதும்  கோல்வால்கரின் சிந்தனைகளை மையப்படுத்தித்தான். அந்தச் சிந்தனைகளை மையப்படுத்திய ஒரு இந்துராஷ்டமாக இந்தியாவை மாற்றுவதுதான் சங்பரிவார் அரசின் இலட்சியமும் கூட. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளின் அமைப்புச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்திய அமைப்புச் சட்டத்தை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை.  சுயராஜ்ஜியம், தர்மராஜ்ஜியம் போன்ற வார்த்தைகள் முகவுரையில் கூட இடம்பெறாத இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பாரதத்தின்  கலாச்சாரத்தையோ அரசியல் சித்தாந்தத்தையோ வெளிப்படுத்தவில்லை என கோல்வால்கர் கூறியுள்ளார்.  சுய அதிகாரங்கள் உள்ள மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவை அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுவதையும் கோல்வால்கர் அங்கீகரிக்கவில்லை. மாநிலங்களின் ஒன்றியம் அல்ல இந்தியா, மாறாக  இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடு தான் என அவர் வாதிடுகின்றார். அதன் அடிப்படையில்தான் நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு, மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எவ்வித அதிகாரங்களும் இல்லாத 200க்கும் மேற்பட்ட ஜன்பத்துக்களாக மாநிலங்களை மாற்றி அமைப்பதற்குண்டான சூழ்ச்சி திட்டமும் ஆர்எஸ்எஸ் இடம் உள்ளது.

தேசியக் கொடியில் உள்ள நிற வேறுபாடுகளை கூட அவர் விமர்சித்துள்ளார். காவி நிறம் இந்துக்களையும் பச்சை நிறம் முஸ்லிம்களையும் வெள்ளை நிறம் பிற மக்களையும் குறிப்பிடுகிறது என துவக்கத்தில் கூறினார்கள். இவ்வாறான விளக்கம் இன வேறுபாட்டை  குறிக்கிறது என்று சிலர் கூறியதனால்தான் காவி நிறம் தியாகத்தையும் பச்சை நிறம் இயற்கையையும் வெள்ளை நிறம் தூய்மையையும் குறிப்பிடுகிறது என மாற்றப்பட்டதாக அவர் கூறுகிறார்.

மதச்சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பிறகு கம்யூனிஸ்டுகளும் நாட்டின் அச்சுறுத்தல்கள் என கூறிய கோல்வால்கருக்கு, மதச் சிறுபான்மையினரின் நம்பிக்கை சுதந்திரத்தையும் உரிமைகளையும் அவர்களுக்கு அளிக்கும் அமைப்புச் சட்டத்தின் 25 முதல் உள்ள பிரிவுகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  சிறுபான்மையினர் நலத்துறையை காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு உருவாக்கிய போதும் சுதந்திரத்திற்கு பிறகான 50 வருட காலத்தில் முஸ்லிம்களுடைய வாழ்வியல் சூழலை குறித்து ஆய்வு செய்வதற்காக சச்சார் குழு அமைக்கப்பட்ட போதும் பாஜக கடுமையாக எதிர்த்ததும் கோல்வால்கர் முன்வைத்த சித்தாந்தத்தின் அடிப்படையில்தான். நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு சிறுபான்மையினர் நலத்துறையை கலைக்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தங்களோடு இணைந்து இருக்கும் முஸ்லிம்களுக்கு பதவி அளிப்பதற்கான ஒரு துறையாகவும் அதே நேரத்தில் வெளி உலகை ஏமாற்றுவதற்கான வெறும் ஒரு கண்துடைப்பு நாடகமும்தான் என்பதை கடந்த நாட்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பதினைந்து சதவீதம் மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஆளும் கட்சி, ஒரு அமைச்சர் கூட இல்லாத அமைச்சரவை போன்ற சிறப்புக்களைக் கொண்டதுதான் மோடியின் ஆட்சி.

சுருக்கமாகச் சொன்னால் மதச்சார்பற்ற தன்மையையும் , ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அமைப்புச் சட்டம் ஒருபோதும் சங்பரிவாருக்கு ஏற்புடையதல்ல. தாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு உதவிகரமாக இருந்தது இந்த அமைப்புச் சட்டம்தான் என்பதால் தற்காலிகமாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். கச்சிதமான வாய்ப்புகள் அமைகின்ற பொழுது தேவையான திருத்தங்களை செய்தும் சில பொழுது அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு ஒவ்வாத புதிய சட்டங்களை  நுழைத்தும்  சில பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்தும் அவர்கள் தங்கள் வேலைகளை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்கும் போது இந்துராஷ்டத்தை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை மாற்றங்களை அவர்கள் கொண்டு வருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டுதான் பாஜக அல்லாத பிற கட்சிகள் தங்களுடைய அரசியல் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். இந்தியாவின் ஆத்மாவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆத்மார்த்தமான எண்ணத்தோடு  பாஜகவிற்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்.

K.S. அப்துல் ரஹ்மான்எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *