உலக ஒழுங்கிற்கு இஸ்லாம் முக்கிய எதிர்வினையாகவும் மற்றமையாகவும் இருக்கும் என்பதே சாமுவேல் ஹண்டிங்க்டன் எழுதிய நாகரிகங்களின் மோதல் நூல். உலக ஒழுங்கு என்பது இன்றைய முதலாளித்துவ சமூகம். ஏற்றத்தாழ்வு, சுரண்டல், இயற்கை வள கொள்ளை, அடித்தள மக்கள் மீதான ஒடுக்குமுறை கொண்ட நடப்பு சமூகம். இதில், முக்கிய அம்சம் அந்தந்த தேசிய நாடுகளில் பெரும்பான்மை கொண்ட மதங்களை ஆதரித்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கும் வெறுப்பரசியல். மதங்களுக்கு இடையேயான மோதல் என்ற அடையாள அரசியலைக் கொதிநிலையில் முன்னிறுத்தி தமது சுரண்டல்களை இயல்பாகச் செய்து வருகிறது முதலாளித்துவம். இதன் முக்கிய இலக்காக உலகம் முழுவதுமுள்ள தேசிய அரசுகளின் கீழ் சிதறுண்டு கிடக்கும் இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்பரசியலை உற்பத்தி செய்யும் தேசிய அரசுகளிலேயே வரையறுக்க முடியாத வன்மத்தைக் கொண்டது இந்தியாவின் இந்துத்துவ அரசு.

2014ம் ஆண்டு நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பிறகு இந்து அணிதிரட்டலை விரைந்து செயல்படுத்தியது பாஜக. மதவாதிகள் பாஜக அரசியலை ஆதரித்தார்கள் என்றால், முற்போக்காளர்கள் இதற்கு உடன்பட்டு அமைதி காத்தார்கள். பாபர் மஸ்ஜீத் தீர்ப்பிலும் சரி, காஷ்மீர் தன்னாட்சி உரிமை நீக்கத்திலும் சரி இஸ்லாமியர்களை அமைதி காக்கச் சொல்லும் பெரும்பான்மைவாத அரசியலுக்கே வலுசேர்த்தனர். இதில்தான் ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகம் தமது அரசியல் தேவையை நிறைவு செய்வது அவசியம். முஸ்லீம் இயக்கம், கட்சி, பிரதிநிதித்துவம் என்பது இந்த அரசியலின் விளைவால் தொடங்குகிறது.

இன்றைய நிலையிலும் நீங்கள் முஸ்லீம் கட்சி போன்ற தனித்த மத அடையாளத்தோடு செயல்பட்டால், அது இந்துத்துவ வாதிகளுக்குத்தான் லாபம். ஆதலால், அதைக் கைவிடுங்கள் என முற்போக்காளர்களும், திமுக போன்ற கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களும் ஜல்லியடிப்பது தனிப்பட்ட பிழைப்புவாத அரசியல். தங்கள் காட்சிக்கான விசுவாசத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில், முஸ்லீம் பிரதிநிதித்துவம் என்பது இஸ்லாமியக் கட்சி என்றல்லாது, பொதுநீரோட்ட கட்சிகளில் எந்தளவிற்கு அவர்களுக்கான இடம் வழங்கப்படுகிறது என்பதையும் சாரும். இது, பொதுநீரோட்ட கட்சிகள் எந்தளவிற்கு பன்மைத்துவத்தைப் பேணுகிறது என்பதற்கான சோதனையும் கூட.

இத்தேர்தலில் அதிமுக இந்துத்துவர்களுடன் கூட்டணி வைத்ததால் அதில் முஸ்லிம்கள் முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டனர். அந்த அணியில் இஸ்லாமியர்களை எதிர்பார்ப்பதும் அற்பவாத அரசியலாகவே அமையும். அனைத்து கட்சிகளிலும் நம்மவர்கள் இருக்க வேண்டும், ஏன் பாஜகவிலும் இருக்க வேண்டும் போன்ற தேர்தல் கணக்கு அரசியலை எல்லாம் (அது நடைமுறைத் தேவை என்றாலும்) கோட்பாட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அறவே விரும்பவில்லை. அப்படியிருக்கையில் மாற்று அணியினரான ‘மதச்சார்பற்ற’ கட்சியான திமுக முஸ்லிம்களுக்கு வழங்கிய இடங்கள் வெறும் மூன்று. அந்த மூன்றிலும் இருவரை அமைச்சராக்கியுள்ளது திமுக என்று பெருமை பேசுவதற்கு ஒரு காரணமும் இல்லை.

சிறுபான்மை நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான் ராமர் கோவிலுக்குப் பின்னுள்ள அரசியலைப்பற்றி துளியும் அறியாமல் (அறிந்தும்..) அதற்கு நிதியளித்ததைப் பெருமை கொள்கிறார். பாபர் மசூதி இடிப்பின் போது தாம் மட்டும் மத நல்லிணக்கத்தைக் காக்கத் தமிழகத்தில் பிள்ளையார் கோவில் கட்டியதாக வரலாற்றுப் பொறுப்புணர்வு இல்லாமல் பேசுகிறார். பாபர் மசூதி இடிப்பு வேளையில் தமிழகத்தில் அனைவரும் சண்டையிட்டுக்கொண்டது போல், இவர் மட்டும் ஏதோ மத நல்லிணக்கத்தைக் கட்டிக் காத்ததாகவே ஆர்த்தப்படுகிறது அவரது வாதம். தமிழகத்தின் சமூக இணக்க வரலாறு குறித்தும், சிறுபான்மை மக்களின் தேவையையும் அறியாத இவரே சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர். மற்றொரு முஸ்லீம் அமைச்சரான ஆவடி நாசர் பெரிய கட்சியின் மற்றொரு அமைச்சர். அவ்வளவே..!

உலக அளவில் நல்ல முஸ்லீம் – கெட்ட முஸ்லீம் என்ற வரையறை உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உடன்பட்டால் நல்ல முஸ்லீம். எதிர்த்தால் கெட்ட முஸ்லீம், தீவிரவாதி. அதுபோல், இந்துத்துவ அரசிற்கு மனசு நோகாமல் நடந்துகொண்டால் நல்ல முஸ்லீம். அப்துல் கலாம் – நல்ல முஸ்லீம், அபுல் கலாம் – கெட்ட முஸ்லீம். இப்படி தம் அரசியலை மீறிச் சிந்திக்க முடியாத நல்ல முஸ்லிம்களைத்தான் திமுக அமைச்சர்களாக்கியுள்ளது. தனித்தொகுதியே என்றாலும் தலித் பிரதிநிதித்துவம் அர்த்தமில்லாமல் போனது இவ்வாறுதான். பெரும்பான்மையான சாதி வாக்காளர்கள் தமக்குத் தேவையான நல்ல தலித்தைத்தான் அங்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அம்பேத்கர் கோரிய உண்மையான தலித் பிரதிநிதித்துவம் என்பது முதலில் அவர்கள் தலித் மக்களால் மட்டும் தேர்ந்தெடுக்குமாறு இருக்க வேண்டும். ஆனால், உயர்சாதி இந்துக்களடங்கிய காங்கிரஸ் கூடாரம் தமக்கு ஏற்றார்போல் தனித்தொகுதி முறையை அமைத்துக்கொண்டது. தலித்களுக்கு வழங்கிய அந்த தனித்தொகுதி முறைகூட விடுதலைக்கு முன்புவரை நடைமுறையிலிருந்த முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிம்கள் அரசியலைச் சிதைப்பதை அன்றைய காங்கிரஸ் முதல் இன்றைய பொது கட்சிகள் வரை செய்துகொண்டே வருகிறார்கள். அவர்களின் பிரதிநிதிகளோ அர்த்தமற்றவர்களாக உள்ளார்கள். மொத்தத்தில் எதிர் அரசியலை நீர்த்துப்போகச் செய்வதில் பெரிய கட்சிகள் ஒற்றுமையாக உள்ளனர். அதுவே, அவர்களை இயக்கம் இச்சமூக கட்டமைப்பின் தேவையாகவும் உள்ளது.

அப்துல்லா.மு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *