இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரால் தலித்துகளை தீண்டத்தகாதவர்கள் என்று அவர்கள் மீது மேல் சாதியினரின் அத்துமீறல்கள் இன்றளவும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

மத்திய பிரதேசத்தில் சாகர் என்னும் ஊரில் உள்ள ஜைன கோவிலில் பிரசாத பொருளாக வைக்கப்பட்டிருந்த பாதாம் பருப்பை திருடி சாப்பிட்டான் என்று குற்றம் சாட்டி பதினோரு வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார் ஜைன அர்ச்சகர். இதனைப்பற்றி போலீஸிடம் புகார் கொடுத்தார் அச்சிறுவனின் தந்தை. ஆனால், இதுவரை அந்த அர்ச்சகர் கைது செய்யப்படவில்லை. இதுபோல, அச்சாதியினரின் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கமும், காவல்துறை அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவற்றை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பிற்படுத்தப்பட்ட இச்சாதியினர்களுக்கு எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. சமூகத்தில் அவர்களுக்கு சுதந்திரமாக வாழும் வாழ்க்கையும் கிடைப்பதில்லை. மேலும், உணவு, உடை, வருமானம், தண்ணீர்,கல்வி, சமூக அந்தஸ்து, அடிப்படை உரிமைகள் ஆகிய அனைத்தும் அவர்களுக்கு கிடைப்பது அபூர்வமாக ஆகிவிட்டது. அச்சாதியினரை வெறும் மேல் சாதியினர்கள் அடிமைகளாகவே வைத்திருக்கின்றனர். அனுதினமும் அச்சாதியினரின் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே அமைகின்றது.

ஒரு மண்ணின் சுதந்திரத்தை விட மக்களின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்ற பெரியாரின் கூற்றும் மேலும், சுதந்திர நாட்டில் சாதி இருக்கலாமா ? சாதி இருக்கும் நாடு சுதந்திர நாடா ? என்ற பெரியாரின் கேள்வியும் மனதில் எழுகின்றது.

தீண்டாமை ஒரு குற்றச்செயல் என்ற வாக்கியம் கல்வி புத்தகங்களிலும், அரசியலமைப்பு சட்டங்களிலும் எழுதப்படுவது மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படி நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டால் அதுவே உண்மையான சுதந்திரமாக கருதப்படும்.

எழுத்தாளர் – இம்ரான் ஃபரீத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *