ஆர் எஸ் எஸ் – பாஜக அஜண்டாவில் உள்ள குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை, ராமர் கோவில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடைமுறைப்படுத்திய பிறகு, அதன் அடுத்த கட்டமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குண்டான முனைப்பில் ஒன்றிய – மாநில பாஜக அரசுகள் ஈடுபட்டு வருகின்றது.  பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெறுவது என்ற ஒற்றை நோக்கோடும் முஸ்லீம் சமூக இன அழிப்பின் ஒரு பகுதியாகவும்தான் மேற்சொன்ன சட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது பொது சிவில் சட்டம் நோக்கிய நகர்வுகள் முனைப்பு காட்டப்படுவதும் அதே நோக்கோடுதான். இவ்வருட இறுதியிலும் 2023லும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களும் 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலும் கவனத்தில் கொண்டுதான் நீண்ட நெடுங்காலமாக சங்பரிவார் கும்பல் வலியுறுத்தி வரும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான  விவாதங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பாஜக ஆளும் உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ள அம்மாநில  முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைத்துள்ளார்.

இது ஒரு சிறந்த நடவடிக்கை என பாராட்டு தெரிவித்துள்ள இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெயராம் தாகூர், தன்னுடைய மாநிலமும் அதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறது என அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேசத்திலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தபடுவதற்கான முன்னறிவிப்புகளை அம்மாநில துணை முதலமைச்சர் மௌரியா வெளிப்படுத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாஜக மையக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குண்டான செயல்பாடுகளில் கட்சித் தொண்டர்கள் முனைப்புடன் களத்தில் இறங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 உத்தரகாண்டில் நடைமுறைப்படுத்தப்படுவது இதற்கான முன்னோடி திட்டம்தான் என அறிவித்துள்ளார். இனி இந்த வழியின் ஊடாகவே  பாஜக ஆளும் மாநிலங்கள் பயணிக்கும். இறுதியில் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்து சட்டத்தை கொண்டு வருவார்கள். திருமணம், விவாகரத்து, வாரிசுரிமைச் சட்டம், தத்தெடுத்தல் போன்ற விஷயங்களில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் சங்பரிவாரின் திட்டம். பலதார திருமணம் செய்வதன் மூலமாக முஸ்லீம்கள் நாட்டில் பிள்ளைகளை பெற்று பெருகி வருகிறார்கள் எனவும் அதன்மூலம் அவர்கள் இந்தியாவில் பெரும்பான்மையான சமூகமாக மாறி விடுவார்கள் எனவும் இக்கும்பல் நீண்ட நெடுங்காலமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால், இவற்றைச் சொல்லி அவர்கள் பொதுசிவில் சட்டத்தை நியாயப்படுத்துவது இல்லை. மாறாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவு 44ல் சொல்லப்பட்டுள்ள நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டத்தை உருவாக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்பதைத்தான் அவர்கள் முன்வைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், போக்கர் சாஹிப், நாசிருத்தீன் அஹமத், ஹுசைன் இமாம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வரப்போகும் தீமையை தீர்க்கதரிசனமாக உணர்ந்ததன் அடிப்படையில் அவர்கள் தெரிவித்த எதிர்ப்பை அம்பேத்கரும் பிற அமைப்பு சட்ட குழுவில் இருந்த உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. பொதுசிவில் சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சொல்ல மாட்டோம் என்று சொல்லித்தான் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை அவர்கள் எதிர்கொண்டார்கள்.  மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவற்றை குறித்து ஆலோசிப்பதற்காக கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பதுதான் நிஜம்.

பொதுசிவில் சட்டத்திற்காக வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசு, 2016 ஜூனில் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு பொது சிவில் சட்டத்தை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி பிஎஸ் சவுகான் தலைமையில் தலைமையிலான சட்ட  ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது. 2018ல் ஆணையம் ஒன்றிய அரசுக்கு அளித்த அறிக்கையில், இப்போதைய நிலையில் நாட்டுக்கு பொது சிவில் சட்டம் அடிப்படைத் தேவையோ முக்கியத்துவமானதோ இல்லை என தெளிவுபடுத்தியது.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு எவ்வித முரணும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தனியார் சட்டங்களின் பன்மைத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. நாட்டின் பன்மைத்துவத்தை மதச்சார்பின்மையின் பெயரில் நிராகரிக்கக் கூடாது என  ஆணையம் சுட்டிக்காட்டியது. அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பதற்கு முன்னால் அரசியல் கட்சிகள், மத – சமூக அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் ஆணையம் கருத்துக்களை கேட்டு அறிந்தது. “வேறுபாடுகளை பாகுபாடாக பார்க்கக்கூடாது. வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம் அது. பல நாடுகளும் தற்போது வேறுபாடுகளை அங்கீகரிக்க துவங்கியிருக்கிறார்கள்” எனவும் ஆணையம் ஒன்றிய அரசிற்கு உணர்த்தியது. ஆனால் அனைத்து இடங்களிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பது என்ற முனைப்போடு செயல்படும் சங்க்பரிவார ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் காதுகளில் ஆணையத்தின் கருத்துக்கள் உட்செல்லவில்லை.

சிவில் சட்டத்தின் ஒருங்கிணைப்புக்காக கூச்சலிட்டுக் கொண்டு இருக்கும் இவர்கள், அது எவ்வாறு இருக்கும் என்பதை குறித்தான எந்த விதமான அறிக்கைகளையும் இதுவரை மக்கள் முன்னால் சமர்ப்பிக்கவில்லை என்பது விசித்திரமானதாகும். குடும்பச் சட்டங்களில் இதுநாள் வரை பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள சம்பிரதாயங்களை புதிய தலைமுறை பின்பற்றுவதும் இல்லை. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட சமூகங்களை விட பிற சமூகங்களில் தான் அது சட்ட விரோதமாக அதிக அளவில் பின்பற்றப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் – அதாவது முஸ்லிம்  சமூகத்தின் மீதான – வன்மமும் குரோதமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சமூக வாழ்வை எந்த அளவுக்கு சிரமப்படுத்தப்போகிறது என்பதையும் இந்திய நாடு எங்கே சென்று முட்டுச்சந்தில் முடங்க போகிறது என்பதையும் நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் சமூகம் தங்களுடைய எதிர்கால வாழ்வியல் திட்டங்கள் குறித்து எப்போதும் சிந்திக்கக் கூடாது என்பதில் சங்பரிவார் சக்திகள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு பிரச்சனைகளுக்கும் முஸ்லிம் சமூகத்தை அவர்கள் தள்ளி விடுகிறார்கள். அதற்குப்பின்னால் எதிர்வினைகளோடு முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கான எவ்வித அஜண்டாக்களும் முஸ்லிம் சமூகத்திடமோ அதன் தலைவர்கள் இடமோ இல்லை. இனியும் இந்நிலை தொடருமானால் முஸ்லிம் சமூகம் இந்தியாவில் அடையாளமற்றுப் போகும். சங்பரிவார்கள் திட்டங்களை தீர்க்கமாக புரிந்து அதை சரியான விதத்தில் எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான வினைகளை முஸ்லிம் சமூகம் முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவை இந்தியாவாகவே நிலைநிறுத்தும் கடமை முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்த நாட்டை நேசிக்கும், இந்த நாட்டின் உண்மையான குடிகளாக வாழும் அனைவரது கடமையாகும். நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன தங்களை கடிக்காமல் இருந்தால் போதும் என்று பொது சமூகம் எண்ணமானால்  பாசிச வாதிகளின்  இறுதி இரைகள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *