கி.பி.எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி அரபுலக விஸ்தரிப்பு மிக நீண்ட தொலைவினை எட்டியிருந்தது. உமைய்யத் கலிஃபாக்களின் காலத்திலேயே வடக்கு ஆப்பிரிக்கா தொட்டு ஐரோப்பிய -ஸ்பானிய (ஐபீரியன் தீபகற்பம்) முனையை அடைந்து தற்போதைய  பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாம் தனது கிளையை பரப்பியிருந்தது. கி.பி.750 ஆண்டுவாக்கில் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இஸ்லாமிய பேரரசு  இருந்தது. 

பிரிட்டிஷ் மற்றும் பைஸாண்டிய ரோம அரசுகள் தங்களது ஐரோப்பிய, ஆசிய நிலப்பகுதிகளை  போரில் இழந்து நிலப்பரப்பினை சுருக்கிக்கொண்ட காலம். நபிகளாரின் இறப்பிற்கு பிறகு நிகழ்ந்த முதல் உள்நாட்டு போரில் அரபு ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருந்த முஉஹாவியா இப்னு அபு ஸுபியான் தலைமையில் அமைந்த உமைய்யத் அரசு, இரண்டாம் மர்வான் காலத்தில் அப்பாஸிய கலிபாக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதே 33,00,000 லட்சம் மக்கள் இஸ்லாமிய ராஜ்ஜியத்தில் வாழ்ந்துவந்தனர். கலிபா ஹிஷாம் இப்னு அப்துல் மாலிக் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அதன் உச்சத்தை தொட்டிருந்த்து. முகமது பின் காஸிம் காலத்தில் தட்ச்சீலத்தை தாண்டி சிந்து-பஞ்சாப் வரை உமைய்யத் கலிபாக்கள் ராஜ்யம் விரிந்திருந்தது. இந்திய துணைக்கண்டத்திற்குள் இஸ்லாம் நுழைய இதுவே முதல் அடியாகும். 

 கான்ஸ்டன்டிநோபிளை ,பைசான்டைன்களிடமிருந்து கைபற்றியதன் விளைவாக ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் நுழைய அடிகோலப்பட்டது. கிபி.718ல் உமைய்யத் கலிபாக்களில் உமர் பின் அப்துல் அஸீஸ் உடனான நட்புறவு கையெழுத்திட ஸ்ரீ இந்திரவர்மன் எனும் அரசன்,  ஸ்ரீவிஜயா நாட்டில் (இந்தோனேசிய-மலேசிய-ஜாவா தீவுகள் இணைந்தது) இருந்து  வந்து போனது வரை எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்கள் ஆகும். மாயன்களின் வரலாறு முடிவுபெற்றதும், இந்தோனேசிய போரோபுதூர் பௌத்த கோவில்கள் கட்ட வேலைகள் தொடங்கப்பட்டதும் இதே காலகட்டத்தில் தான்.

ஐரோப்பாவில் பைஸாண்டைன் ஆட்சிகாலத்தில் அவர்களுக்குள்ளாக திருச்சபையா? அல்லது  ரோமா அரசர்களா? என அதிகாரப்போட்டியில்  ஒற்றுமையின்றி மத வழிபாடுகளில் சுமூகமான நிலைமை இல்லாதபடியாலும் அவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்துக்கொண்டிருந்த காலம். அரபுகளுடன் நிகழ்ந்த போரில் அவர்கள் நிலங்களை பறிகொடுத்து வந்த காலம். புனித நகரம் பலஸ்தீனின் ஜெரூசலேம் முஸ்லிம்கள் வசம் வந்த காலம். அப்பாஸிய கலிபாக்களின் கை ஓங்கி இருந்த காரணத்தால் உமையத்துகளின் தலைநகரான தமாஸ்கஸ் பிறகு ஹர்ரான் நகரில் இருந்து  அப்பாஸிய கலிபாக்களின் தலைநகராக பாக்தாத் உருவாக்கப்பட்டது. முதல் கலிபாவான அபு அல் அப்பாஸ் அல் ஸஃபா ஆரம்பித்த அப்பாஸிய கிலாபத், மேற்குலகில் எவராலும் அசைக்க இயலாத அடுத்த 200 ஆண்டுகள் ஆட்சிநடக்கப்பெற்றதாக இருந்தது. 

கிபி.751ல் சீனாவின் தாங் அரசினை வீழ்த்தி, சமர்கண்ட் வழியாக பாமிர் மற்றும் மத்திய ஆசியாவிற்குள் இஸ்லாம் புகுந்துகொண்டிருந்த காலத்தில் கிபி.754ல் கலீபா ஹாரூன் அல் ரஷீத் (5வது கலீபா) அவர்கள் உலக கல்வி சம்பந்தமான ஒரு பெரும் புத்தக திரட்டுகள் அடங்கிய பன்னூல் நிலையத்தை உருவாக்கினார். அது அவரது சொந்த நூலகமாக இருந்தது. அதற்கு அவர் “பைத்துல் ஹிக்மா” – House of Wisdom என பெயரிட்டார். உலகில் உள்ள அறிஞர்கள் பலர் எழுதிய அறிவுசார் நூல்களை தொகுத்து வைக்க நினைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் பைத்துல் ஹிக்மா.  பண்டைய எகிப்தில் கிமு.முதலாம் நூற்றாண்டில் அலக்ஸாண்டிரியா (இஸ்கந்திரியா) நகரில், தாலமிக் அரசர் இரண்டாம் தாலமஸ் பிலடெல்பஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு  பெருநூலகத்திற்கு இணையான ஒரு கட்டமைப்பு என்றே கூறவேண்டும்.

ஒன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாக இது வரலாற்றாசிரியர்களால் வரையறுக்கப்படுகிறது. 

பின்னர் பைத்துல் ஹிக்மா பொது நூலகமாக மாற்றப்பட்டது. அல்’மஹ்மூன் எனும் ஏழாவது கலிபா , பைத்துல் ஹிக்மா நூலகத்தை , மகா பல்கலையாக மறுநிர்மாணம் செய்தார். உலகில் ஒரு புறம் அதிகாரப்போர்கள் மூலம் சாம்ராஜ்ய உருவாக்கங்களும், வீழ்ச்சிகளும் மாறி மாறி தொடர்ந்துகொண்டிருக்க, பர்சிய பூமியில் அறிவுத்தேடல் தொடங்கப்பட்டது. நவீன காலத்திற்கு தேவையான அனைத்து விதமான புதுமை சாதனங்களும் தயாரிக்கப்பட வேண்டிய சூத்திரங்கள் அங்கே தயாராகிக்கொண்டிருந்தது. கிரேக்க,ரோம,லத்தீன்,சீன,எகிப்து,சிரியக்,இந்திய தமிழ் –  சமஸ்கிருத அறிவுக்களஞ்சியங்கள் அரபிலும் பாரசீகத்திலும் அரபு அறிஞர் குழுக்களை கொண்டு மொழிமாற்றமும் மறுபிரதிகளும் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. 

இந்தியாவில் கிமுவில் சமண சமயத்தவர்களால் தற்போதைய பிகார் மாநிலத்தில் கல்விக்காக உருவாக்கப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு நிகராக உலகின் அறிஞர்களையும் தலைசிறந்த இலக்கியவாதிகளையும், தத்துவஞானிகளையும், அறிவுத்தேடலில் தகித்துக்கிடக்கும் மாணவர்களையும் தம்பால் ஈர்த்துவந்த பைத்துல் ஹிக்மாவில் இல்லாத புத்தகங்களே இல்லை எனும் அளவிற்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உலகளாவிய மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் வெளிநாட்டு வர்த்தகங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முஸ்லிம்கள் , உலக கல்வியின்பாலும் பல்மொழி சாஸ்த்திரங்களிலும் தங்களது கவனத்தை திருப்ப ஆரம்பித்தனர்.

அரபுலக விஞ்ஞானிகள் என நாம் அறிந்திருக்கும் பலரும் தங்களது ஆக்கங்களை கொண்டுவந்து உலகின் பல மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர். அல்குவாரிஸ்மி, அல்கிந்தி, அல்ஜாஹிஸ், அல்கஸாலி ஆகியோர் பைத்துல் ஹிக்மா பல்கலையின் ஆஸ்த்தான மாணவர்களும் ஆசிரியர்களுமாக இருந்தனர். தத்துவம், மருத்துவம், வேதியியல், கணிதம்,விண்ணியல் மற்றும் கண் சிகிச்சைக்கான பாடங்களை போதித்த பைத்துல் ஹிக்மாவின் முதல் பெயர் “கிஷானத் அல் ஹிக்மா” (Storehouse of Wisdom ) எனப்பட்டது. 

1258ல் மங்கோலிய படையெடுப்பின் போது பைத்துல் ஹிக்மா தாக்கி அழிக்கப்பட்டது. மொத்தம் 14 நாட்கள் நடந்த அந்த போரில் பாக்தாத் நகரம் முழுதும் நிர்மூலமாக்கப்பட்டது. அதில் பல புத்தக பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டும் , சில மதம் சார்ந்த நூல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டும் அழிக்கப்பட்டன. பிரிட்டிஷ் நேஷனல் லைப்ரரியினை கண்டவர்களுக்கு நிச்சயமாக பைத்துல் ஹிக்மாவும் அதேபோன்றதான பிரம்மாண்டத்தை உடையது என உணர முடியும். 

ரோஸி நஸ்ரத் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *