நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத 65 வார்த்தைகளின் பட்டியலை மக்களவை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். சாதாரணமாக மக்களிடத்தில் பிறரை விமர்சனம் செய்கின்ற பொழுதும் அரசியல் மேடைகளிலும்  புழங்குகின்ற வார்த்தைகள்தான் அவைகள். விமர்சனத்திற்கு உரிய வார்த்தைகளும் பயன்பாடுகளும் சபை குறிப்பில் இடம் பெறாது என மக்களவை செயலகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றிய அரசை விமர்சிக்கும் வார்த்தைகள் ஜனநாயகத்தின் உன்னத அவை என்று சொல்லப்படும் நாடாளுமன்றத்தில் எழக்கூடாது என பாசிச அரசு தீர்மானித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள பல வார்த்தைகளும் நரேந்திர மோடிக்கும் அவரது தலைமையிலான பாசிச பாஜக அரசுக்கும் எதிராக எழக்கூடிய வார்த்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“புதிய இந்தியாவிற்கான புதிய வார்த்தைகள்” என இதைக் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை செய்துள்ளனர். சமூக ஊடகங்கள் நரேந்திர மோடி அரசின் இந்த போலித்தனத்தை குறித்த கிண்டல்களால் நிறைந்துள்ளன. இருப்பினும் பாசிச பாஜக அரசின் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் வரும் என நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது வேறொரு இந்தியாவில் என்ற எதார்த்தத்தை நாம் உள்வாங்க வேண்டும்.  அவ்வளவுதான்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடைபெற கூடாது என்ற தடை உத்தரவையும் சபாநாயகர் வெளியிட்டுள்ளார்..

சர்வாதிகாரிகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற சர்வ கால சத்தியத்தை நாம் நிகழ்காலத்தில் அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரத்தனத்தை, அதன் தன்மைகளை விமர்சிக்கும் அரைடசனுக்கும் அதிகமான வார்த்தைகள் புதிய தடை பட்டியலில் உள்ளது. முரண்படுதலுக்கான சுதந்திரம் என்பது ஜனநாயக மேன்மையின் அடையாளமாகும். எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்தான் அந்த முரண்படுதலை, தவறுகளை அடையாளப்படுத்துதலை பெரும்பாலும் நிறைவேற்றி வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஊடகங்களை மோடி அரசு ஏற்கனவே மௌனப்படுத்திவிட்டது. பெரும்பான்மையான தேசிய ஊடகங்கள் அனைத்தும் ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது. ஒன்றிய அரசின் தவறுகளை விமர்சிப்பது என்பதை கடந்து, விமர்சிப்பவர்களை புறக்கணிப்பதும் வேட்டையாடுவதும்தான் தேசிய ஊடகங்களின் மையமான பணியாகிவிட்டது. அச்சுறுத்தியும் ஆசை வார்த்தைகள் காட்டியும் விலைக்கு வாங்கியும் ஊடகங்களை முடக்கி வைத்துள்ளனர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அடியாள் ஏஜென்சிகளை பயன்படுத்தி தங்கள் வழிக்கு வராதவர்களையும் வழிக்கு கொண்டு வருகின்றனர். மேற்கண்ட சாம, பேத, தண்ட முறைகளுக்கு கட்டுப்படாதவர்களை இறுதியில் இல்லாமலும் ஆக்கி விடுகிறார்கள். கேரளாவில் மீடியா ஒன் என்ற சேனல் மீதான தடையும் ஆல்ட் நியூஸ் முஹம்மது ஜுபைரை பொய் வழக்கில் கைது செய்ததும் அதன் அடையாளங்களே. அரசை விமர்சனம் செய்யும் மற்றொரு பிரிவினர் சமூக செயல்பாட்டாளர்களும் தன்னார்வலர்களும்தான். அவர்களில் பலரையும் பலவிதமான பொய் காரணங்களை கூறி கைது செய்து சிறையில் அடைத்தாகிவிட்டது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு இந்தியாவில் தங்களுடைய பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக விமர்சனங்களின் கதவு நாடாளுமன்றத்தில் மட்டும்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்போது அதையும் இல்லாமல் ஆக்கி விடலாம் என்ற சர்வாதிகார இறுமாப்பின் வெளிப்பாடுதான் புதிய தடைப்பட்டியலின் வெளியீடு. இது மிகவும் மோசமான, ஜனநாயக விரோதமான, இழிவான செயல்பாடாகும்.

நாடாளுமன்றமே ஒரு தேவையற்ற வீண்வேலைதான் என்று நினைப்பவர்கள்தான் இன்று நாட்டை ஆளுகிறார்கள் என்பதுதான் இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை பிரச்சனை.  கலந்துரையாடலின், விவாதங்களின், ஜனநாயகத்தின், முரண்பாடுகளின் மொழிகள் அவர்களுக்கு புரியாது. ஏகாதிபத்தியம்தான் அவர்களுக்கு தெரியும். வேறு வழியின்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் உள்வாங்கி செரிப்பது என்ற பிராமணியத்தின் கோட்பாட்டின்படி நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற மாண்புகளை எல்லாம் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டே அதை இல்லாமல் ஆக்குவதற்குண்டான விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களை பாதிக்கும் பல தீர்மானங்களை எடுக்கின்ற பொழுது நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்படுவதில்லை. விவாதங்கள் நடத்தப்படுவதில்லை என்பதை கடந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை அறிவது கூட இல்லை. நாடாளுமன்றத்தை வெறும் பார்வையாளராக மாற்றி தங்கள் அஜண்டாக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதோ இப்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய சின்னத்தை நிறுவுகின்ற பொழுது எதிர்க்கட்சியில் இருந்து ஒரு நபர் கூட அங்கே அழைக்கப்படவில்லை. நாடாளுமன்றம் என்பது ஒரு அரசுத்துறை அல்ல. அனைத்து உறுப்பினர்களுக்கும் சம பிரதிநிதித்துவமும் அதிகாரமும் உள்ள இடம்தான் அது. இப்போது புதிய தடை பட்டியல் வெளியிட்ட பொழுதும் நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களோ ஆலோசனைகளோ நடைபெறவில்லை. நாடாளுமன்ற நிலை குழுவிலோ, நாடாளுமன்ற நெறிமுறை குழுவிலோ எவ்வித ஆலோசனைகளும் செய்யப்படவில்லை. எல்லா ஆணைகளும் நவ இந்தியாவின் அரசனின் ஆசைக்கு இணங்க வெளியிடப்படுகிறது.

அமைப்புச் சட்டத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டே, அதில் மாற்றங்களை வருத்தாமலேயே அமைப்புச் சட்டத்தை இல்லாமல் ஆக்குவது. நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டே நாடாளுமன்ற ஜனநாயகத்தை, நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்ற வழியில்தான் பாசிச பாஜக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பசுந்தோல் போர்த்திய புலியைப் போல, ஜனநாயகத்தின் ஆடை அணிந்த சர்வாதிகாரம் இது. அறைகளுக்குள் அமர்ந்து ட்விட்டரிலும் முகநூலிலும் கிண்டல் கேலி செய்வதற்கு உண்டான விஷயம் அல்ல இது. ஜனநாயகத்தையும் இந்த நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் களத்தில் இறங்கி நடத்த வேண்டிய மாபெரும் போராட்ட அரசியலின் காலம் இது. நேரம் செல்லச் செல்ல நம் கால்களுக்கு கீழே இருக்கக்கூடிய மண்ணும் அடித்துச் செல்லப்படும் ஆபத்து உண்டு. எதிர்க்கட்சிகளின்  கையாலாகதனத்தின் ஆபத்தான மௌனங்கள் பாசிச பாஜகவிற்கு மென்மேலும் தைரியத்தை அளிக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் கைமேற் கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்த ஆபத்தை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டதாக தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *