ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V

ஊராட்சித் தேர்தலில் தலை துணியை அகற்றக் சொல்லிய பாஜக கட்சியினரின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய சூடு தணியும் முன்பு, அதற்கு எதிர்வினையாக தடா ரஹீம் பேசிய “பூணூல் அறுப்பு” குறித்த சர்ச்சைப் பேச்சு பெரும் வாத-பிரதிவிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. உடை தொடர்பாக தொடர்ந்து சில மாதங்களாக ஊடகங்கள் விவாதித்து வருவதும், பொதுமக்கள் மத்தியில் உடை கலாச்சாரம் தொடர்பான கருத்து விவாதங்கள் ஏற்பட்டிருப்பது சமூகரீதியில் அவ்வளவு நல்ல அம்சமாக தெரியவில்லை.

பருவநிலை மாற்றத்தை போன்று ஊடகங்கள் அவ்வப்பொழுது ஒவ்வொரு விஷயங்களை சர்ச்சைக்குரியதாக ஆக்கும் போக்கும், அவற்றின் ஊடாக வியாபாரத்தை நடத்திக் கொள்வதுமாக மாத்திரமே இந்த அரசியல் நீடித்துக் கொண்டிருக்கிறது. மாறாக, விவாதிக்கப்படும் விஷயங்கள் ஒரு போதும் தீர்வை நோக்கி நகர்வதில்லை என்பதில்தான் இது சமூகத்தை பாதிக்கும் மனநோயாக – நல்ல அறிகுறியாக தெரியவில்லை என்று கூறினோம். இன்னும் சில நாட்களில், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற ரீதியில் உடை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் பிண்ணுக்குச் சென்று, வேறு ஒரு புதிய விவாதப் பொருளை சமூகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது. இங்கு இரு கேள்விகள் எழுகின்றன..

ஒருபுறம் இத்தகைய ஊடக மன நோய்களுக்கு எதிராக நாம் எப்படி நம்மை நிலைநிறுத்திக் கொள்வது? என்கிற கேள்வி.

மற்றொருபுறம் விவாதிக்கப்படும் விவகாரங்கள் குறித்த நேர்மையான, பக்கச்சார்பற்ற கருத்தை எப்படி நாம் உருவாக்கிக் கொள்வது? என்பது.

இந்தக் கட்டுரை தடா ரஹீமின் பூணூல் அறுப்பு குறித்த கருத்து ஏற்படுத்துகின்ற பாதிப்பு, அதன் எதார்த்தம், அதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அம்சம் என்ன? என்கிற ரீதியில் சில கருத்துக்களை முன்வைப்பதற்கான தீட்டப்பட்டுள்ளது. மூன்று முக்கியமான பரிணாமங்களில் இப்பொழுது நடந்து வரும் தொடர் சர்ச்சைகளையும், அவற்றின் பக்க-எதிர் விளைவுகளையும், அவற்றின் வழியே வெளிப்படும் கருத்துக்களை நாம் தொகுத்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது. அந்த வகையில்,

  • முதல் அம்சமாக, பூணூல் அறுப்பு என்கிற அரசியல்
  • இரண்டாவதாக, பாரதிய ஜனதா கட்சிக்காரர் சொன்ன தலை துணியை அகற்றி விட்டு ஓட்டளிக்க வேண்டும் என்கிற வாதமும், அதனை வழிமொழிந்து நாராயணன் கூறிய ‘மதம் தான் முக்கியம் என்றால் ஓட்டளிக்க வராதீர்கள்’ என்கிற கருத்து.
  • மூன்றாவதாக, பன்மைச் சமூகத்தில் வாழ்கிறோம் என்கிற பொது, இதுபோன்ற அழுத்தங்கள் ஏற்படும் நிலையில், ஏன் நாம் நமது பண்பாடு, கலை, கலாச்சாரங்களை விட்டுக் கொடுக்கக்கூடாது? என்கிற ரீதியில் முஸ்லிம்கள் சிலராலேயே எழுப்பப்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையின் கீச்சுக் குரல்.

இனி ஒவ்வொன்றாய் அலசலாம்…

  1. பூணூல் அறுப்பு

முதலாவதாக, பூணூல் அறுப்பு அரசியல் என்பது குறித்த தெளிவு நமக்கு இருக்க வேண்டும் தந்தை பெரியார் மற்றும் அவரது கொள்கை வழித் தோழர்களால் 1945-ம் ஆண்டுகளில் பார்ப்பனிய மதம் இந்து மதத்தின் பெயரால்,  அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு மக்களை சாதிகளாகப் பிரித்து ஒடுக்குவது, ஒடுக்குதலை நியாயப்படுத்தும் போக்கும் தொடர்ந்த காலங்களில் “இத்தகைய ஒடுக்குதலுக்கு இந்த மதம் தான் காரணம் என்றால் அந்த மதம் எனக்குத் தேவையில்லை,  மதத்தை கற்பித்த கடவுள் தான் காரணம் என்றால் கடவுளும் எனக்கு தேவை இல்லை” என்கிற ரீதியில் தர்க்கரீதியாக, பார்ப்பனிய அல்லது வைதீக மத எதிர்ப்பின் வெளிப்பாடாக – ஒரு குறியீடாக திக மற்றும் அதன் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டது தான் இந்த பூணூல் அறுப்பு போராட்டம்.

1940-களின் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட பூணூல் எதிர்ப்பு போராட்டத்தினை குறித்த கட்டுரையை தந்தை பெரியார் அவர்கள் 1446- ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையில் “காலி மணிபர்ஸ்” என்கிற புனைபெயரில் எழுதினார். அந்தக் கட்டுரையில் மிகத் தெளிவாக தந்தை பெரியார் பார்ப்பனர்கள் பூணூல் அணியும்ஆவணி அவிட்ட தினத்தன்று ஏன் பூணூலை அழிக்கும் போராட்டத்தை தோழர்கள் முன்னெடுக்க வேண்டும்? என்று கேள்வி கேட்டதற்கு பதிலாக, “பூணூலை எப்போது அறுத்தீர்கள் என யாரேனும் கேள்வி எழுப்பினால், பார்ப்பனர்கள் எல்லோரும் பூணூல் போகக்கூடிய ஆவணி அவிட்டத்தை அன்று பார்ப்பனிய மதத்தின் குறியீடாக இருக்கக்கூடிய பூணூலை,  அறுத்து எறிந்துவிட்டு, ஆதிக்க – வைதிக – பார்ப்பனிய மதத்திலிருந்து வந்துவிட்டோம்! என்று கூறுவதற்காகத் தான் அந்த நாளை தேர்ந்தெடுத்திருப்பார்கள்” என குறிப்பிடுவதோடு, நமக்கு இந்தத் தகவலின் வழியே, பூணூல் அறுப்பு என்பதை வெறும் போராட்டமாக மாத்திரம் செய்யாமல், அதற்கு ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து,  அதையும் அந்த நாளுக்கான காரணம் – முக்கியத்துவத்தையும் விளக்கிச் சொல்லி பூணூல் அறுப்பு என்பதை வைதிக மதத்திற்கு எதிரான ஒரு குறியீடாக பயன்படுத்தியதை பார்க்கின்றோம்.

அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் இந்த பூணூல் அறுப்பு போராட்டங்களை திராவிடர் கழகத் தோழர்கள் செய்து வந்ததையும், மிகச் சமீபமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் இத்தகைய பூணூல் அறுப்பு நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்த அதையும் அதில் நான்கு பேர் கைதுதானதையும் கூட நாம் அறிகின்றோம்.

இவற்றில் இருந்தெல்லாம் புரியவரும் செய்தி இது மட்டும் தான்! பூணூல் அறுப்பு என்பது ஆரிய எதிர்ப்பின் குறியீடாக தந்தை பெரியார் அவர்களாலும், அவரது தோழர்களாலும் இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு போராட்ட வடிவம். இதில் நியாயம் உண்டா? சரியா? தவறா?? என்கிற வாதப்பிரதிவாதங்களுக்கு வெளியே, இது ஒரு கலாச்சார பண்பாட்டு ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு போராட்ட வடிவமாக, ஒரு கொள்கை சார் போராட்டமாக ஒரு அமைப்பினரால் இன்றுவரை பண்பாட்டு ரீதியாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இது பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வல்ல. பார்ப்பனிய எதிர்ப்பு களத்தில் நிற்பவர்கள் அனைவரும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அல்ல. இதை எல்லாம் தாண்டி இந்தப் போராட்ட வடிவம் என்பது குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கையாக தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் மாத்திரமே தொடங்கப்பட்டு இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்கிற செய்தியை நாம் உள்வாங்க வேண்டும். இதனை ஓர் குறிப்பிட்ட மத குறியீடு அல்லது வைதிக மதத்திற்கான எதிர் குறியீடு என்கிற வகையில்தான் இதனை நாம் அணுகிட வேண்டும்.

மனித உரிமை அல்லது மனிதாபிமானம் என்கிற ரீதியில் நோக்கும் பொழுது அது அவர்களை பாதிக்காதா? பார்ப்பனர்களின் மனம் புண்படாதா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றின் மீது கவனம் செலுத்தி நீங்கள் ஏன் உங்கள் நோக்கத்திற்கு அவர்களை நிர்பந்தபடுத்துகிறீர்கள்? அவர்களது மத நம்பிக்கைகளில் கை வைக்கிறார்கள்? என்கிற கேள்வி நியாயமானது தான். இந்த நியாயமான கேள்விக்கு தான் தந்தை பெரியார் காலி மணிப்பர்ஸ் என்கிற பெயரில் அளித்த விளக்கத்தை நாம் மேலே பார்க்கின்றோம். இது, இன்றைய கால சூழலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அம்சமாக இருக்கின்றது.

  1. தலை துணி மறைப்பு

இரண்டாவது அம்சம், “தலை துணி மறைப்பு” என்பது. தலைப்பகுதியை பெண்கள் மறைப்பது என்பது பல்வேறு இனக்குழுக்களில் அது பண்பாட்டு – கலாச்சார ரீதியிலான அம்சம். இங்கே, தமிழகத்தில் தலை துணியை மறைத்து விட்டுத்தான் வாக்களிக்க வேண்டும்  என நிர்பந்தப்படுத்திய இந்த குறிப்பிட்ட நிகழ்வில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அம்சம் இருக்கின்றது. எங்கோ தொடங்கிய தலைத்துனிக்கு எதிரான மனநிலை என்பது இன்று மாநிலம் கடந்து, தேசம் முளுமைக்குமாய் சமூகத்தில் வெற்றிகரமாக பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டதோ? என்கிற அபாயத்தின் குரல்தான் வாக்குச்சாவடியில் தமிழ்நாட்டில் நடந்த இந்த சம்பவம்.

பொதுமைப்படுத்தப்பட்ட வெறுப்புரைகள் இன்று சமூகத்தில் கீழ்த்தட்டு வரை அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இங்கு பிரச்சனை தலையை முக்காடிட்டு மூடுவது என்பது அல்ல. மிகத்தெளிவாக, அது முஸ்லிம்களுக்கு எதிரானதாக மட்டுமே இங்கு பார்க்கப்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், தலை துணியை மறைப்பது என்பதை மதத்தோடு சம்பந்தப்படுத்தி, அதுவும் ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சம்பந்தப்படுத்தி, “உங்களுக்கு மதம் தான் முக்கியம் என்றால் வாக்களிக்க ஏன் வருகிறீர்கள்?” என்பது போன்ற கேள்விகள் ஏன் இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மராட்டியர்களை நோக்கியோ, மார்வாடிப்பெண்களை நோக்கியோ, சீக்கியச் சகோதரிகளை நோக்கியோ எழுப்பப்படவில்லை என்பதுதான்!

நாம் இந்த கோணத்தில் இருந்துதான் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை, அதன் பின்னணியில் இயங்கும் மனநிலையை, அரசியலைப் பார்க்க வேண்டும். தலையை மறைப்பது மதத்தோடு சம்பந்தப்பட்டது என்று சொன்னால், அத்தகைய ஒரு மத நடவடிக்கையும், நடைமுறையும் தான் தென் இந்தியாவைத் தவிர்த்து இருக்கின்ற மொத்த இந்தியாவிலும் நடைமுறையில் இருக்கின்றது. முன்பே சொன்னது போன்று இது திட்டமிட்டு முஸ்லிம்களின் மீதான பண்பாட்டு – கலாச்சார தாக்குதலாக ஒருங்கிணைக்கப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வெறுப்பு என்பது முஸ்லிம்களுக்கு எதிராக,  சராசரி – பாமர மனிதர்களின் மீது வெற்றிகரமாக கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அது சமூகத்தின் அடி ஆழம் வரை பரவிச் சென்று முஸ்லிம்களை அந்நியர்களாக, முஸ்லிம்களை சமூகத்தில் இழிந்தவர்களாக, பொதுத்தளத்தில் எல்லா வகையிலும் முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதாக இன்று செயல் வடிவத்திற்கு வந்திருக்கின்றது.

கர்நாடகாவில் எங்கோ இருக்கின்ற ஒரு கல்லூரியில் ஆரம்பித்த இந்த பிரச்சனை, அடுத்தடுத்த கல்லூரிகளுக்கு தொடர்ந்ததோடு மட்டுமில்லாமல், கர்நாடகாவில் நர்சிங் படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுத சென்ற முஸ்லிம் மாணவிகள் அத்துணை பேரின் எதிர்கால கல்விக் கனவை சிதைப்பதில் மாநில அளவில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. ஆக, இந்த அம்சங்களின் பின்னணியில், நாம் புரிய வேண்டிய இரண்டாவது பரிணாம அம்சம் இதுதான். முஸ்லிம்களின் மீதான வெறுப்பு என்பது ஒரு பேராயுதமாக இன்றைக்கு உடையை வைத்து உருவெடுத்திருக்கிறது. அது சமூகத்தின் அடிமட்டம் வரை வெற்றிகரமாக முஸ்லிம்களுக்கு எதிராக வெற்றிகரமாக கடத்தப்பட்டு இருக்கின்றது. இந்த வெறுப்பை இனியும் நாம் ஒரு தனித்த நிகழ்வாக பார்க்கக்கூடாது.

இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் பொழுதெல்லாம் அவற்றை தனித்த நிகழ்வுகளாக மாத்திரமே கருதி எதிர்வினை ஆற்றி பொது சமூகம் என்று நம்பிக்கொண்டிருக்ககூடிய சில தனி நபர்களும், சமூகத் தலைவர்களும், முஸ்லிம்களும் கூட எதிர்வினை ஆற்றி கடந்து போகின்ற செயல் எவ்வளவு தூரம் சமூகத்தை நோய் உள்ளதாக மாற்றுவதற்கு உதவிபுரிந்து இருக்கின்றது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த வாக்குச்சாவடி பிரச்சினையையும், அதற்கு ஆதரவு குறித்த நாராயணனின் வாதங்களையும் நாம் பார்த்திட வேண்டும். இந்த நாராயனன்களும், அந்த வாக்குச்சாவடி முகவரும் எவ்வளவு அபத்தமானவர்களோ, அவ்வளவு அபத்தமானவர்கள்தான் இந்தப் பிரச்சினைகளை தனித்த நிகழ்வுகளாக மாத்திரமே கருதி கடந்து போயிருக்கும் நம்மில் ஒவ்வொருவரும்.

முஸ்லிம் சமூகத்தின் தாழ்வு மனப்பான்மை

இந்தப் பிரச்சினையின் மூன்றாவது அம்சம் முஸ்லிம் சமூகத்தின் தாழ்வு மனப்பான்மை எந்த அளவிற்கு வீரியம் உள்ளதாக மாறி இருக்கின்றது என்பது. ஆம்! நாம் பன்மைச் சமூகத்தில் வாழ்கின்றோம், அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தது போல் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் இதில் என்ன தவறு நேர்ந்து விடப் போகிறது? நாம் நிம்மதியாக, பிரச்சனைகளின்றி இருக்கலாமே! என்ற ரீதியில் வெளிப்படும் சில முஸ்லிம்களின் அரசியலற்ற அறியாமைக் குரல்.

இந்த சமூகம் அனைவருக்குமானது, இந்த நாடு அனைவருக்குமானது. இந்த நாடு பன்மைச் சமூகம் தான். இதில் மாற்றுக்கருத்து இல்லை! ஆனால் பன்மைச் சமூகம் என்பதன் விளக்கத்தை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சமூக குழுக்கள் தத்தமது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பழக்க வழக்கங்களை, அவற்றின் தனித்தன்மைகளை எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாக பின்பற்றுவதற்கு ஏற்ற சூழல் தான் பன்மைச் சமூகம் என்பதன் அர்த்தம். ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தேவை, விருப்பம், நோக்கங்களுக்கு தகுந்தார் போல் மற்றவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிட்ட அந்த ஒற்றைச்சமூகத்தின் ஆளுமையை, அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் அடிமைகளாய் வாழ பழகிக் கொள்கிறோம், தயாராகி விடுகிறோம் என்பதற்கான அடிமை குரல் தான் இது.

இந்த அடிமைக்குரல் பன்மை சமூகத்திற்கு எதிரானது.  பன்மைச்சமூகத்தின் ஆன்மாவை சிதைக்கக் கூடியது. பன்மை சமூகத்தின் சிறப்பு ஒடுக்கப்படும் மக்கள் அல்லது ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு உரிய அந்தஸ்தை, மரியாதையை, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினை உயர் நிலைக்கு கொண்டு வருவதில்தான் இருக்கின்றது. அந்த வகையில், இந்தியாவை பன்மைச்சமூகமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு. இந்தியா பன்மைச் சமூகம் என்கிற என்ற அந்தஸ்தில் இருப்பதில் தான் இந்தியாவிற்கு பெருமை. “பண்டித நேரு தொடங்கி வைத்த இந்தியாவின் பெருமை இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது” என இன்றைக்கு பல உலகத் தலைவர்களும் வாய்விட்டுச் சொல்லி விட்டார்கள். இன்றைக்கு பன்மை சமூகமாக இந்தியாவை நிலை நிறுத்த வேண்டிய தேவை தேச நலனை விரும்பக்கூடிய ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாக இருக்கின்றது. ஆதிக்கம் செலுத்த விரும்பும் சமூகத்தின் குரலுக்கு அடிபணிந்து போவது, அதனோடு சமரசம் செய்துகொள்வது என்பது பன்மைத்துவத்தை ஒருபோதும் காக்காது. மாறாக, பன்மைத்துவத்தை சிதைத்து ஒற்றைத் தன்மையை – ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், இனத்தின் மேலாண்மையை நிலை நிறுத்த துணைபுரிவதாக மாத்திரமே அது அமையும்.

தான் சார்ந்த சமூகம் இன்னல்படும் பொழுது, அந்த இன்னல்களுக்கு தீர்வைத் தேடி சிந்திக்கின்ற மனிதர்களில் இருந்து வெளிப்படும் கருத்துக்களும், யோசனைகளும் எத்தனை விநோதமானவைகளாக இருக்கின்றன பாருங்கள். ஒருபுறம் துயரங்கள், இன்னொருபுறம் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்ட இந்த இந்திய முஸ்லிம்கள்.

இந்த இரு சாராருக்கிடையே, தடா ரஹீம்களும், அவரைப்போன்றவர்களை அப்படிப் பேசத்தூண்டும் நாராயணன்கள். சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியை இந்த இரு மனநிலை கொண்டோருக்கும் நாம் தரக்கூடாது. ஏன் என்றால் இவர்கள் இருவருமே வரம்பு மீறுபவர்கள் (Extremist). அல் குர்ஆனிய மொழிமரபில், இத்தகையோர்தான் தாஹூத்கள். இத்தகையோரைக்குறித்து குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது, “வரம்பு மீறுபவர்களுடன் ஒரு போதும் நீங்கள் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்” என்று. அவர்களுக்கு எதிராக போராட வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதற்கு மாற்றாக, அத்தகைய கூற்றுக்களை ஏற்றுக் கொண்டு, அதற்கு அடிபணிவது என்பதும் சரியல்ல. அதற்கு மாறாக தவறான – அபத்தமான போராட்ட வடிவத்தை நடைமுறைப்படுத்துவதும் சரியல்ல.

இந்திய ஜனநாயக நாட்டில் உண்மைக்கும், நீதிக்கும் இன்றும் மதிப்பிருக்கின்றது. அதனை இன்று வரை நம்நாட்டின் மக்கள் அங்கீகரித்து கொண்டிருக்கும் நிலையில், நாம் நமது போராட்டங்களை, கருத்துக்களை விவேகமாக இந்த நாடு எதன்மீது கட்டமைக்கப்பட்டு இருக்கின்றதோ  – அந்த அரசியல் சாசன சட்டம் நமக்கு கொடுக்கின்ற, நமக்கு வழிகாட்டுகின்றன வழிமுறைகளின் அடிப்படையிலேயே இதைப் பூரணமாக சரி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அடிமைப்பட்டு போய் இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய தேவையுமில்லை. போராட்ட வடிவம் என்கிற பெயரில் இருக்கக்கூடிய அனைவரின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டு சாதிக்க வேண்டிய தேவையும் நமக்கு இல்லை!

சரி என்ன செய்வது என்கிறீர்களா? இதோ எனது ஒரு முகநூல் நண்பர் ஒருவர் இத்தகைய வாய்ச்சவடால் பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்பு குறித்து பதிவிடும் பொழுது இப்படிக் கூறுகின்றார்.

“H. ராஜாக்களுக்கும், நாராயனங்களுக்கும் ஆதரவாக எங்கள் ஊரில் உங்களால் 100 பேரை திரட்டிவிட முடியும். ஆனால் பூணூல் அறுப்பு என்கிற இந்த வெறுப்பரசியல் போராட்டத்திற்கு ஆதரவாக உங்களால் 10 முஸ்லீம்களை கூட எங்களுடைய ஊரில் திரட்ட முடியாது. ஏனென்றால் இதுதான் நாங்கள் வளர்த்து, வாழ்ந்து வருகின்ற ஊர்”.

சமூகம், கலாச்சாரம் என்கிற ரீதியில் இதைத்தான் நாம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளவர்களாக இருக்கின்றோம். அரசியல் அமைப்பு சட்டமும், மக்களின் மனநிலையும் நமக்கு இன்றைக்கும் ஓர் நம்பிக்கை ஒளியை கொடுக்கின்றது. கருத்துக்களை கருத்துக்களால் தான் வெல்ல வேண்டும். தவறான கர்ப்பிதங்களை கலந்துரையாடல்களின் வழியாக மட்டும் தான் களையமுடியும்.

இதற்கான தீர்வு இருக்கின்றது.காலம் காலமாக, வரலாற்று ரீதியாக மூடுண்ட சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்ததன் பயன் இன்று இந்த தலைமுறை நெருக்கடிகளின் பெயரால் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு மாற்றாக, நாம் நம்மோடு சேர்ந்து வாழ்கின்ற எல்லா சமூகத்து மக்களிடமும் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவோம். கலந்துரையாடுவதற்கான காலங்களும், நேரங்களும், வாய்ப்புகளும் நமக்கு கொட்டிக்கிடக்கின்றன. வாய்ப்புகளை பயன்படுத்துவதில் வெற்றி உறுதி செய்யப்படும். வாய்ப்பு கை நழுவி விடும் ஒவ்வொரு நேரமும் நாம் நமக்கான அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நெருக்கடிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து நாம் கலந்துரையாட மனம் திறப்போம். இனியும் தவறவிட்டால் பலநூறு தடாரஹீம்களும், நாராயனன்களும் நிச்சயம் உருவெடுப்பார்கள். முஸ்லிம் சமூகத்தின் அடிமை – சரணாகதி மனநிலையும் ஆழமாய் வேர்கொள்ளும்.

வல்ல அல்லாஹ் நம்முடைய மனங்களை திறந்து வைக்க போதுமானவன்!

ஃபக்ருதீன் அலி அஹமது – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *