ஃபக்கீர்கள், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினையும், முந்தைய நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றினையும், பின்வந்த அலிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், இஸ்லாமிய சமயத்தில் உள்ள பல சமயப் பெரியார்கள் கூறிய கருத்துக்களையும் , அவர் தம் பெருமைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்துபவர்களாக உள்ளனர். அவர்கள் தெருக்களில் வீடு வீடாகச் சென்று ‘தாயிரா’ என்ற தோற்கருவியால் இசை எழுப்பியவாறு சமயப் பாடல்களைப் பாடிப் பொருட்களைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்ற இரவலர் என்ற நிலையிலேயே இன்றளவும் காணப்படுகின்றனர். தமிழக முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம் ஃபக்கீர்களின் இசைப்பாடல்கள் விளங்குகின்றன என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

முஸ்லீம் ஃபக்கீர்களின் தமிழகத்தின் ஃபக்கீர்கள்

ஆன்மீகத்துறையில் சனநாயகத்தை வெளிப்படுத்திய ஃபக்கீர்கள் மரியாதைக்குரியவர்கள் ஆவர். இஸ்லாமியச் சமயம் சார்ந்த இரவலர்கள் தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகின்றனர். இதில் ஒரு பிரிவினர் ஃபக்கீர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய இரவலர்கள் பொதுவாக மிஸ்கீன், முஸாஃபா, ஃபக்கீர் ஆகிய பிரிவுகளாகக் காணப்படுகின்றனர். மதுரை வட்டாரத்தில் வாழ்கின்ற ஃபக்கீர்களைப் போன்று, மற்ற இரு பிரிவினர்களும் அவர்களுக்கே உரிய நெறிமுறைகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

ஃபக்கீர் என்ற பாரசீக சொல்லிற்கு தமிழில் ‘இரப்பவர்’ அல்லது ‘இரவலர்’ என்பது பொருள். ஃபக்கீர்கள் வீடு வீடாகச் சென்று யாசிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், தெருக்களில் சென்று வாய்விட்டு பிச்சை கேட்டு வாங்கி உண்ணுகின்ற மற்ற இரவலர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றனர். மதுரை வட்டாரத்தில் வாழ்கின்ற ஃபக்கீர்கள் சாதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் மற்ற மனிதர்களுடன் கலந்து பழகுபவர்களாக காணப்படுகின்றனர்.

ஃபக்கீர்களின் ஆடை அணிகலன்கள்

ஃபக்கீர்கள் தெருக்களில் சென்று யாசிக்கின்ற பொழுது அவர்களுக்கே உரிய ஆடை அணிகலன்களை அணிந்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவ்வாறு அணிந்து செல்லக் கூடிய அணிகலன்களில் ஏதேனும் ஒன்று அவர்கள் சார்ந்த தரீகா முன்னோடிகள் பயன்படுத்திய அடையாளப் பொருட்களுள் ஒன்றாக இருக்கும்.

ஃ பக்கீர்கள் தலையில் பச்சை அல்லது வெள்ளை நிறத்தினை தலைப்பாகையும், கழுத்தில் ‘கண்டமாலை’ எனப்படும் பல வண்ணத்திலான பாசிமணி மாலைகளுள் ஒன்று அல்லது இரண்டு அணிந்தும் ‘ஜிப்பா’ என்ற முழுக்கை சட்டையும் அணிந்தவராக காணப்படுவர். ஃ பக்கீர்களை மற்ற இரவலர்களிலிருந்து பெரிதும் வேறுபடுத்தி காட்டுவது அவர்கள் கையில் வைத்திருக்கும் ‘தாயிரா’ என்ற இசைக்கருவியாகும்.

ஃபக்கீர்கள் ஒவ்வொரு பிரிவினரும் அவர்கெளுக்கென்று தனிப்பட்ட வழிமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினர். ‘ஷேக்’ என்பவர்கள் வெள்ளை நிற நீண்ட அங்கியை அணிந்தனர். ‘காதிரிஸ்’ என்பவர்கள் கருப்புநிற ஆடைகளை அணிவதோடு தங்களுடைய காலணிகளுக்கும் கருப்பு நிற ரோமங்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஃபக்கீர்களின் இசைக்கருவி

‘தாயிரா’ என்ற தோல் பறையினைக் கொண்டு இசை எழுப்பி இஸ்லாமியச் சமயப்பாடல்களைப் பாடுவர், இசை எழுப்புவதற்காகக் கைவிரல்களில் (தவில் வித்வானைப் போன்று) குப்பிகள் சொருகி இருப்பர். தோளின் ஒரு புறத்தில் யாசகமாகப் பெறுகின்ற பொருட்களை வைப்பதற்கு ‘ஜோல்னா’ என்ற துணிப்பையும் தொங்கும் . அதில் மந்தரித்தல் தொழிலுக்காக மயிலிறகை வைத்திருப்பவர்.

ஃபக்கீர்களின் சமூக அமைப்பு

ஃபக்கீர் என்ற அமைப்பு தொடக்க காலத்தில் சமயப்பணி செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. சமய அறிஞர்கள் ஃபக்கீர்களைச் சமயப் பணியாளர்களாகவே கருதி வந்தனர். ஃபக்கீர்கள் பாடுவதை முதன்மைத் தொழிலாகவும், மந்திரிப்பதை துணைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர்.

ஃபக்கீர்களின் கண்ணேறு கழித்தல் முறை

ஃபக்கீர்கள் தங்கள் முன்னோடிகளை சூஃபிகள், சுல்தான் செய்யது அகமதுகபீர் , முகைதீன் அப்துல் காதர் ஜீலானி முதலானோர் பெயர் தொடங்கி, புகழ்பெற்ற தர்காக்களில் அடங்கப்பட்டுள்ள அவுலியாக்களின் பெயராலும் மந்திருக்கும் பொழுது , திருக்குர்ஆனில் உள்ள வேதவரிகளுள் தமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு வரிகளை அக்கருப்பு கயிற்றின் மேலாக ஓதி, விரும்பிக் கேட்கின்ற மக்களிடத்தில் கொடுப்பர். மந்திரித்து கருப்புக் கயிற்றினைக் கொடுத்த பிறகு தங்கள் கையில் உள்ள மயிலிறகினால் மந்திரித்துப் பார்க்கின்றவர்களின் முகத்தில் வேதம் ஓதி தடவி விடுவர். தங்கள் கொடுக்கின்ற கருப்பு கயிற்றுக்கு மாற்றாக மக்களிடத்திலிருந்து சிறிதளவு பணம் மட்டுமே பெறுகின்றனர்.

இது தவிர, ‘கண்ணேறு கழித்தல் ’ என்ற முறையில் பயந்து போன குழந்தைகளின் முகத்தில் தம்ளரில் தண்ணீர் வாங்கி தெளித்து வேதவரிகளை ஓதுவர். மக்கள், தாங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறாமல் தடைப்பட்டு நிற்கும் பொழுது, அதற்குரிய காரணங்களில் ஒன்றாக மற்றவர்களின் தீய பார்வை அல்லது பொறாமைப் பார்வையைக் கருதுகின்றனர். இதனால் வரும் கேடுகளைக் கண்பார்வை கழித்தல் ( கண் திஷ்டி) என்ற முறையில் நீக்குவதாக மக்கள் நம்புகின்றனர்.

தங்களையோ, தங்கள் குழந்தைகளையோ காற்றுக் கருப்பு எனப்படும் தீய ஆவிகள் தீண்டிவிட்டதாக மக்கள் எண்ணினால் ஃபக்கிர்களிடம் மந்திரித்துக் கொள்கின்றனர். ஃபக்கீர்களிடமிருந்து மந்திரித்த கருப்புக் கயிறு அல்லது தாயத்துக்கயிறு வாங்கிக் கட்டிக் கொண்டால், தம்மைச் சூழ்ந்துள்ள தீய ஆவிகள் நீங்கிவிடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

தமிழ்நாட்டுச் சித்தர்கள் சூஃபிகளைப் போன்றவர்கள். சூஃபிகளின் வழிமுறையைப் பின்பற்றுபவர்களாக ஃபக்கீர்கள் விளங்குகின்றனர். ஃபக்கீர்கள் மசூதிகளைவிட இறை நேசர்களின் அடக்கத் தலங்களான தர்காக்களையே பெரிதும் விரும்புகின்றனர். அவற்றின் மீதே அதிக ஈடுபாடும் கொள்கின்றனர். இவர்களுடைய பாடல்கள் பெரும்பான்மையானவை அவுலியாக்களின் புகழைப்பாடி சமய உணர்வுகளை ஊட்டுவனாக அமைந்து விளங்குகின்றன.

ஃபக்கீர்களின் சடங்கு

‘முரீத்’ சடங்கு ஒரு திருவிழாவைப் போல் ஃபக்கீர்களிடத்தில் கொண்டாடப்படுகிறது. இச்சடங்கு நடத்தப்படுவதன் மூலம் ‘முரீத்’ வாங்குபவர்கள் தன்னுடையப் பிறப்பினை அவர் இழந்தவராகவும் கருதப்படுகிறார். அன்று முதல் அவர் தன்னைப் பெற்ற தாய் தந்தையின் உறவை இழந்தவராகத் தலைவரின் ( உஸ்தாது) பிள்ளையாகக் கருதப்படுவார்.

ஃபக்கீர்களின் இரவல் தன்மை

ஃபக்கீர்கள் பொருட்களைப் பெறுகிற விதத்திலும் மற்ற இரவலர்களிலிருந்து வேறுபடுகின்றனர். அதாவது, இரண்டு கையையும் ஏந்தி நின்று அல்லது பாத்திரத்தை நீட்டி வாங்காமல், பொருள் வந்து கொடுக்கின்ற பாத்திரத்தைப் ஃபக்கீர்களே வாங்கி தங்கள் பையில் போட்டுவிட்டுப் பாத்திரத்தைத் திருப்பிக் கொடுக்கின்றனர். இதன்மூலம் இவர்கள் இரவலர்களாக இருந்த போதிலும் சமுதாயத்தில் மதிப்புப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஃபக்கீர்களின் பாடல், கதைப்பாடல்

ஃபக்கீர்கள் பாடும் பாடல்கள் தனிப்பாடல்களாகவும், நெடும் பாடல்களாகவும் அமைகின்றன. தனிப்பாடல்கள் கேட்பவர்களுக்கு நேரடியாக நீதி சொல்பவனாகவும், கடமைகளை நினைவூட்டும் வகையிலும் அமைந்துள்ளன. நெடும் பாடல்கள் இஸ்லாமியச் சமய வரலாற்றில் ஏதேனும் ஒரு கதை நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு விளக்கும் பாடல்களாக அமைந்துள்ளன.

ஃபக்கீர் பாடல்களில் தனிப்பாடல்கள் போற்றிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், நீதிப்பாடல்கள், சித்தர் பாடல்கள் என்ற நான்கு வகையான நிலைகளை உடையதாக அமைந்துள்ளன. தத்துவப் பாடல்கள் இஸ்லாம் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளான வினை, உயிர், ஒழுக்கம் பற்றிய கருத்துக்களைக் கூறுவதாகவும், சமயக் கடமைகளை மக்களுக்கு நினைவூட்டுவனாகவும் அமைகின்றன.

சித்தர்கள் எழுதிய தத்துவம் சார்ந்த கருத்துக்களை மையமாகக் கொண்ட பாடல்களையும் ஃபக்கீர்கள் பாடுகின்றனர். அவற்றுள் இஸ்லாமியச் சித்தரான குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய பாடல்களையும், பதிணெண் சித்தர்களில் ஒருவராகிய இடைக்காட்டூர் சித்தர் எழுதிய பாடல்களையும் இவர்கள் விரும்பிப் பாடுகின்றனர்.

ஃபக்கீர்கள் திரைப்படப் பாடல்களின் மெட்டில் இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை அடியொற்றியதான தத்துவப் பாடல்களையும் பாடுகின்றனர்.

முஸ்லீம் ஃபக்கீர்கள்

ஃபக்கீர்களின் கதையுடன் கூடிய பாடல்கள்

ஃபக்கீர்கள் கதையுடன் கூடிய பாடல்களைத் தனிப்பாடல், பாடல்-உரை விளக்கம், உரைவிளக்கம் – இடையிடையே பாடல், வினாவிடை பாடல் என நான்கு விதமாக முறைகளில் பாடுகின்றனர்.

தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அம்மானைப் பாடல்களைப் போன்று ‘வினாவிடை’ போக்கில் அமைந்து ‘நூறுமசாலா ’ என்ற பாடல் வகையினையும் பாடுகின்றனர். இதில் முதற் பகுதி ‘பாடல் உரை விளக்கம்’ என்ற அமைப்பிலும், பிற்பகுதியே ‘வினா விடை ’ போக்கிலும் அமைந்து காணப்படுகின்றது.

இசைப் பாடல் பயிற்சி மேற்கொள்ளும் முறை

ஃபக்கீர்களுக்கு இசைப்பயிற்சி ஆசிரியர்கள் அவர்கள் தம் முன்னோடிகளான தந்தை அல்லது சுற்றத்தார்களுமே ஆவார்கள். தமது சிறுவயது முதற்கொண்டே பாடுவதற்கு பழகத் தொடங்கி விடுகின்றனர். தங்கள் வீடுகளில் உள்ள பெரியவர்கள் தொழிலுக்குச் சென்று வந்த பிறகு ஓய்வான நேரங்களில் தங்கள் பிள்ளைகளை அழைத்து தங்கள் முன்னால் உட்கார வைத்து ‘தாயிரா ’ என்ற இசைக்கருவியில் இசை எழுப்பியவாறு , ஏதாவது ஒரு பாடலில் இருந்து இரண்டு வரிகளில் பாடிக்காட்டுவர். அதனைத் தொடர்ந்து அவர்களும் பாடுவர். இவ்வாறே தொடக்க நிலையில் பாடல், இசைப் பயிற்சியைக் கற்றுக் கொண்ட பிறகே தெருக்களுக்குப் பாடச் செல்கின்றனர்.

ஃபக்கீர்கள் தெருக்களில் மக்களிடத்தில் பாடுகின்ற பொழுது கேட்பவர்களின் விருப்பத்திற்கிணங்க அல்லது இடத்தின் சூழ்நிலைக் கேற்றவாறு பாடும் முறையை அல்லது பாடல் வகையை மாற்றிப் பாடுகின்றனர்.

ஃபக்கீர்கள் மக்களுக்கு இசை இன்பத்தைப் புகட்டுவதைவிட, தங்கள் பாடல்களில் உள்ள சமயக் கருத்துக்கள் மக்களிடம் எளிதாக சென்றடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஃபக்கீர்கள் பாடுவதற்கென்று தனி அரங்கம் கிடையாது, மக்களிடத்தில் இரந்து நின்று சமயப்பாடலகளைப் பாடி விளக்கம் பெறக் கூடிய நிலையில் இன்றும் இருப்பதால், ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடக்கூடிய அளவிற்குரிய பழக்கம் இவர்களிடத்தில் இல்லை. ஃ பக்கீர்கள் பாடுவதற்குரிய அரங்கமாக தெருக்கள் ஒன்றே சிறப்பிடம் பெறுகின்றன. ஃபக்கீர் பாடும் பாடல்களுக்கு ஆண்களை காட்டிலும் கல்வியறிவு இல்லாத பெண்களிடத்தில் அதிக வரவேற்பு உண்டு.

ஃபக்கீர்களின் வாழ்நிலை

ஃபக்கீர்கள் வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையிலேயே உள்ளது. இன்றைய நிலையில் இவர்கள் தம் அன்றாடத் தேவைகளை யாசித்தல் தொழில் மூலமே பெற்று வாழ்ந்து விருகின்றனர்.

ஃபக்கீர் குடும்பங்களில் பெரும்பான்மையோர் பாடுவதைத் தொழிலாகவும், சிலர் கடைகளுக்குச் சென்று சாம்பிராணிப் புகை காட்டுவதையும் தொழிலாகக் கொண்டு உளளனர். அதன் மூலம் பெறுகின்ற வருமானத்தால் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் பூட்டு, குடை போன்ற பொருட்களைப் பழுது நீக்கிக் கொடுக்கின்ற தொழிலையும், பலூன் விற்கிற தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஃபக்கீர்கள் தனித்தனி குடும்பமாக மிகச் சிறிய குடிசை மற்றும் ஓட்டு வீடுகளிலேயே வாழ்கின்றனர். ஃபக்கீர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கு உட்பட்ட நிகழ்ச்சியாயினும் அல்லது எந்தவொரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், ‘கூடி முடிவு எடுத்தல்’ என்ற ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட முறையிலேயே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். ஃபக்கீர்கள் தங்கள் பக்கீர் குடும்பத்திற்குள்ளேயே பெண் எடுத்து பெண் கொடுக்கின்ற திருமண முறையைக் கடைபிடிக்கின்றனர். ஃபக்கீர்கள் தங்களுடைய குடும்ப திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர்களே ‘தாயிரா’ அடித்து மணமக்களை வாழ்த்திப்பாடுகின்றனர்.

பொருளாதார நிலை

ஃபக்கீர்கள் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். பாடல், தொழில், மந்திரித்தல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம். கடைதோறும் சென்று சாம்பிராணிப் புகை காட்டுவதில் கிடைக்கும் வருமானம் முதலியவற்றை கொண்டே வாழ்கின்றனர் அவர்களது தினசரி வருமானமும் குறைவு.

ஃஇஸ்லாமியர்கள் அதிகாலைப் பொழுதில் நோன்பு நோற்று, அந்திப் பொழுதில் முடிப்பது வழக்கம், அந்நிலையில் மக்கள் தமது சமயக்கடமைகளை மறந்திடாது இருக்க, அவர்களுக்கு நினைவூட்டும் முறையில் , ஃபக்கீர்கள் அதிகாலைப் பொழுதில் ‘தாயிரா’ என்ற இசைக் கருவியைக் கொண்டு இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் பாடல்களைப் பாடியவாறு வந்து மக்களை எழுப்புவர், நோன்பு நோற்கிற முப்பது நாட்களும் ஃபக்கீர்கள் இதனை ஒரு சமயப்பணியாக ஏற்று தம் முன்னோர்களின் வழி நடக்கின்றனர். இதற்கு யாசகமாக ரம்ஜான் பண்டிகையன்று அவரவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் அல்லது பொருட்களைப் ஃபக்கீர்களுக்கு வழங்குவர். மக்கள் இதனைத் தங்களுக்குரிய ஜக்காத் ( ஏழை வரி) என்ற முறையில் கொடுக்கின்றனர்.

இஸ்லாமியர் வீடுகளில் நடைபெறுகின்ற திருமண விழாக்களில் கலந்து கொண்டு ‘மௌலூது’ எனும் புகழ்மாலைப் பாடல்கள் பாடுவர். மணமக்கள் பல்வேறு சிறப்பினைப் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்திப்பாடுவர். திருமண வீட்டார் இவர்களுக்கு பணம் அல்லது பொருள் அளிப்பார்கள்.

ஃபக்கீர்கள் வறுமையில் வாழ்க்கை நடத்தினாலும், இன்றளவும் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை எந்தவொரு சிறு கைத்தொழிலுக்குக் கூட அனுப்புவதில்லை.

ஃபக்கீர்கள் தங்களுடைய குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பிக் கல்வியறிவைப் பெறச் செய்வதில்லை. தங்களுடைய தொழிலுக்குச் சென்று சம்பாதிக்கின்ற மனப்பக்குவ நிலையை அடைகின்ற வரைக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அதனால் ஐந்து அல்லது ஆறாம் வகுப்புக்கு மேல் ஃபக்கீர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. அரபிப் பள்ளிகளுக்குச் ( மதரஸா) சென்று கற்றுக் கொள்ள இயலாத நிலையிலும் உள்ளனர்.

முடிவுரை

தமிழகத்தில் மிகவும் வறுமை நிலையில் வாழும் ஃபக்கீர்களுக்கு கல்வி , குடியிருப்பதற்கு வீடு , சுயதொழில் செய்வதற்கு அரசு நிதி உதவி முதலியவைகள் செய்யப்பட வேண்டும். மேலும் ஃபக்கீர் பாடல்கள் அனைத்தையும் தொகுத்து வெளியீட இஸ்லாமியர்கள் முயற்சி செய்திட வேண்டும்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்

இஸ்லாமிய ஃபக்கீர்கள் – ஆசிரியர் வ. ரஹமத்துல்லா, மதுரை.

  • பி.தயாளன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *