LOADING

Type to search

Why No BJP அரசியல் கல்வி மாணவர் அரசியல்

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக வந்தே மாதரம் பாடப்படுவதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி கடும் கண்டனம்

admin 3 months ago
Share

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்‘ பாடலா?

முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும்!

– திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வரிகளைக் கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது – சட்ட விரோதமானது – கண்டனத்துக்கு உரியது என்றும், இந்த நிலையை மாற்றி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட முடிவு செய்யாவிட்டால், நீதிமன்றத்தின் வழியாக முடிவு காணப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

சென்னையில் உள்ள ஐஐடி(Indian Institute of Technology) என்ற நிகர்நிலைக் கல்வி நிறுவனம் போன்ற ஒரு தனி அமைப்பு, ஜெர்மன் நாட்டு உதவி, மத்திய அரசு, மாநில அரசுகளின் நிதி உதவியாலும் பல்வேறு அனுமதிகளுடன் நடந்துவரும் நிறுவனம்!

பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடுத்தவர்கள்
நடைமுறையில் அது ஒரு தனி அக்கிரகாரம்போலத்தான் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் தலைமை, பேராசிரியர்கள் – தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துவருவது யதார்த்த நிலையாகும். பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் இயங்கிடக் கூடாது என்று முட்டுக்கட்டை போடப்படவில்லையா? ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏபிவிபி என்பதற்கே முழு ஆதரவு தந்து ஒரு சார்பு நிலையுடன் கூச்சநாச்சமின்றி நடைபெற்று வருகின்றது!

தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி ‘வந்தே மாதரம்!’ பாடுவதா?
அங்கே மொழி வாழ்த்தாகிய (தமிழ்த்தாய் வணக்கப் பாட்டு) ‘நீராரும் கடலுடுத்த’ என்பதைப் பாடாமல், ‘வந்தே மாதரம்‘ பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்குவது என்பது அண்மைக்காலமாக நடந்து வருகின்றது என்ற செய்தியும், நடைமுறையும் பெரிதும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு சார்பில் 1970-களிலேயே இதனைப் பாடித்தான் நிகழ்ச்சிகளைத் தொடங்கவேண்டும் என்ற சுற்றறிக்கை – ஆணை – வழங்கப்பட்டு எல்லா நிகழ்வுகளும், குறிப்பாக அரசு சார்பான கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் பாடுவது அவசியமானதாகும். இதனைப் புறக்கணிப்பது – தமிழைப் புறக்கணிப்பது மட்டுமல்ல; மாநில அரசின் ஆணையைப் பின்பற்றாத குற்றம் இழைத்ததாகவுமே கருதப்படும்.

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்!’
‘வந்தே மாதரம்‘ பாட்டு முழுமையாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை மிகக் கேவலப்படுத்தும் வரிகளைக் கொண்டது. 1938 இல் சி.இராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி) முதலமைச்சராக சென்னை மாகாணத்தில் இருந்தபோது, சட்டசபை தொடங்குவதற்குமுன் ‘வந்தே மாதரம்‘ பாட முடிவெடுத்தபோது, இஸ்லாமியர் உறுப்பினர்கள் ஆட்சேபித்து, எதிர்த்த காரணத்தால் அம்முறை நிறுத்தப்பட்டது.

அதை இப்போது பாடுவது முற்றிலும் மதச்சார்பின்மைக்கும் விரோதமாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் பெரிய கல்வி நிறுவனத்தில் தமிழ் மொழி வாழ்த்துக்கு இடம் கிடையாதா? போராட்டம் வெடிப்பது உறுதி!

நீதிமன்ற நடவடிக்கை – எச்சரிக்கை!
உடனடியாக இந்த முடிவினை மாற்றிட, நீதித்துறைமூலம் தக்க பரிகாரம் தேடிட நாம் முயற்சிப்போம் என்பதையும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
31.7.2019, சென்னை

Tags:

1 Comments

 1. Kyra September 4, 2019

  Hi, very nice website, cheers!
  ——————————————————
  Need cheap and reliable hosting? Our shared plans start at $10 for an year and VPS plans for $6/Mo.
  ——————————————————
  Check here: https://www.good-webhosting.com/

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *