இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது திராவிட சித்தாந்தத்தில் சமூக நீதிக் கோட்பாடு மிக முக்கியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது திராவிட தேசியத்தின் மிக முக்கியமான அம்சம்.

ஒரு காலகட்டத்தில் திராவிட தேசியத்திற்கான தேவை இருந்தது. அந்த காலகட்டத்தில் நாம் இருந்திருந்தால் அதைதான் பேசியிருப்போம். 

அந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கான சூழல் இல்லை. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான் மொழி அடிப்படையிலான தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறோம்.

ஆக, திராவிட தேசியம் என்ற களத்தில் இருந்துதான் தமிழ் தேசியம் என்ற அரசியல் உருவாகியிருக்கிறது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்துதான் தமிழ்நாடு உருவாகியிருக்கிறது.

ஆகவே, திராவிட தேசியத்தை பகையாக நிறுத்தி, தமிழ் தேசியத்தை அடைய முடியாது. இந்திய தேசியத்தை முதன்மை பகையாக நிறுத்தி, இந்து தேசியத்தை பகையாக நிறுத்தி போராடுவதில்தான் தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க முடியும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகளின்மீது ஒரு பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கின்றன. அதைத் தொடர்ந்து தமிழ்த்தேசியம் குறித்து நெடுங்காலமாக நடந்துவரும் விவாதமும் கூர்மையடைகிறது. காவிரி போராட்டங்களில் தமிழ்த்தேசியம் பேசுவோரைவிட திமுகவினரே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள்.

திமுக முன்னின்று நடத்திய கடையடைப்பும் கருப்புக்கொடிப் போராட்டமும் மக்கள்  மத்தியில் பேராதரவைப் பெற்றது. டிவிட்டர் பரப்புகளையும் (#IndiaBetraysTamilnadu, #GoBackModi), கருப்பு பலூன் போராட்டங்களிலும் இருதரப்பும் சமமாக கலந்துகொண்டார்கள். ஆனால் ஊடகங்களிலும் சமூக வெளியிலும் அதிகம் பேசப்பட்ட போராட்டங்களாக அமைந்தவை சுங்கச்சாவடிகளை நொறுக்கியது, நெய்வேலி போராட்டம், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டம், விமான நிலைய முற்றுகை போன்றவைதான்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகள் இவற்றுக்கு தலைமை தாங்கின. பல தமிழ்த்தேசிய, பெரியாரிய, தலித், இடதுசாரி அமைப்புகளும் இவற்றில் பங்கெடுத்தன.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவருக்கும் தமிழ்த்தேசிய ஆதரவு அணியினருக்கும் இடையிலான போராட்டம் என்பது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. முன்பு, குறிப்பாக 2009க்கு பின்பு, இவ்விரு தரப்பினரும் ஒரே போராட்டக்களத்தில் இணைந்து செயல்பட்டதில்லை என்பதோடு இரு வேறு துருவங்களாகவே இருந்தார்கள். எடுத்துக்காட்டாக ஈழம் தொடர்ந்த எந்த போராட்டக்களத்திலும் 2009 க்குப் பிறகு இவ்விரு தரப்பினரும் சேர்ந்திருந்ததில்லை. சமூகநீதி தொடர்பான பிரச்னைகளில்கூட, பெரும்பாலும், இவ்விரு தரப்பினரும் கைகோர்த்து களம் கண்டதில்லை. இரண்டு வாள்கள், இரண்டு உறைகளில் இருந்தன.

ஆனால், தற்போது நீட் தேர்வு, காவிரி, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட புதிய களங்களில் – குறிப்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குப் பிறகு – பாஜக-அதிமுக கூட்டு நடவடிக்கையின் எதிர்வினையாக – தற்போதெல்லாம் திமுகவும் அதன் ஆதரவு சக்திகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் முன்பு எப்போதையும்விட கூடுதலாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். இரண்டு வாள்கள், ஆனால் ஒரே உறை?

காவிரி போராட்டங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், திமுகவின் போராட்டங்களை நாங்கள் ஆதரித்து அவற்றில் கலந்துகொள்வோம் என தமிழ்த்தேசிய அணியின் முன்னணி தலைவர்கள் உறுதியளித்தார்கள். பெரியாரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த சில தமிழ்த்தேசியவாதிகள்கூட எச்.ராஜா பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று கூறியபோது, ராஜாவை எச்சரித்தார்கள்.

ஆனால் நடைமுறையில் காணப்படும் இந்த கள ஒத்துழைப்பு (?) என்பது இரு தரப்பினருக்கிடையிலான சித்தாந்த/நடைமுறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று சொல்லமுடியாது.

இன்றைய தேர்தல் சூழலில் ஒன்று நீ நண்பன், இல்லையென்றால் எதிரி. தமிழ்த்தேசிய அணி பலம் பெறப்பெற அது திராவிடக் கட்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறும். மாறாக, திராவிடக் கட்சிகள் தங்கள் பலத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் அல்லது நீட்டிப்பதில் வெற்றிபெறுமானால், தமிழ்த்தேசியக் கட்சிகள் காணாமல் போகும் அல்லது திராவிடக் கட்சிகளின் ஜூனியர் பார்ட்னர்களாகவே மாறும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு ஆழமானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஐபிஎல் போராட்ட விவகாரத்தில் திமுகவுக்கும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட விமர்சனங்கள், “போட்டி” சம்பந்தப்பட்டது அல்ல, இரு தரப்பிலும் பிரதானமாக அடங்கியிருக்கும் சமூகப் பிரிவுகளின் வர்க்க நலன்கள் அதில் தலைதூக்கின என்பதைப் பாரக்கவேண்டும்.

திமுகவின் புதிய மேட்டுக்குடியினருக்கும் தமிழ்த்தேசியக் கட்சியில் வேகமாக சேர்ந்துவரும் சமூகத்தின் அடித்தட்டு சமூகப்பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையிலான முரண்பாடு அது.

சில திமுகவினர் நாம் தமிழர் கட்சியின் இளம் உறுப்பினர்களை பொறுக்கிகள், லும்பன்கள் என்றெல்லாம் அழைத்தபோது, “கொள்கை” மட்டுமல்ல, சமூகப் பிளவும் இவ்விரு தரப்பினருக்கிடையிலான முரண்பாட்டை வரையறுக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் இளைஞர்களை தமிழ்நாட்டு மேட்டிமைச் சக்திகள் இதே சொற்களால்தான் அர்ச்சித்தன.

திராவிட, தமிழ்த்தேசிய அணிகளுக்கு இடையிலான இந்த உறவும் பிரிவும் உருவாக்கும் சூழல், இரு தரப்பினரின் வரம்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் தமிழ்த்தேசிய சக்திகளின் முன்னுள்ள தேர்வும் வாய்ப்பும் என்ன?

ஃபக்ருதீன் அலி – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *