1.தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்திலிருந்து கோட்பாட்டு வரையறைகளின் அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டது ஆகும். இந்தியத் தேசியம் பிரிட்டிசு குடியேற்றக் காலத்தில் உருவான அரசியல் கருத்தாக்கமாகும். தமிழ்த்தேசியம் அதே குடியேற்றக் காலத்தில் உருவானதாக இருப்பினும் அடிப்படையில் மொழியினச் சமூக அடிப்படையில் உருவானதாகும்.

2.இந்தியத்தேசியம் பிரிட்டிசு எதிர்ப்பில் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களின் கூட்டிணைவின் விளைவாக உருப்பெற்றது. பிரிட்டிசு ஆட்சிக்குப் பின் இந்தியத்தேசியம் பிரிட்டிசு இந்தியாவை பல மாறுதல்களுடன் தனதாக்கிக்கொண்டது. வரையறைகள் ஏதுமற்று, தமது குடியேற்ற நலனுக்கும் சுரண்டல் வசதிக்கும் ஏற்ப பல்தேசிய மக்களை வலுக்கட்டாயமாக இணைத்து பிரிட்டிசார் இந்தியா எனும் அரசுக்கட்டமைப்பை உருவாக்கினர். அதனூடாக வளர்ந்த இந்தியத் தேசியம் தன் பெயர் உட்பட அனைத்திற்கும் பிரிட்டிசாரையே சார்ந்து நின்றது. பாகிஸ்தானும் பங்களாதேசும் இலங்கையும் பர்மாவும் பிரிட்டீசு இந்தியாவில் உள்ளடங்கியிருந்தன. அவை தனித்தனியே பிரிந்துசென்றுவிட்ட போதிலும் இந்தியா எனும் கட்டமைப்பு தொடர்கிறது. இதுவே, வரையறையற்ற, கற்பிதமான இந்தியத்தேசியக் கருத்தாக்கத்தின் தன்மைக்கான சான்றாக உள்ளது.

3.தமிழ்த்தேசியம் என்பது மொழியினம் மற்றும் நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதால் நிலமும் மொழியும் இதன் அடிப்படைகளாக அமைகின்றன. இவ்விரு வரையறைகளை நீக்கிவிட்டால் தமிழ்த்தேசியம் இல்லை.

4.அதற்கு மாறாக இந்தியத்தேசியத்திற்கு நிலமும் மொழியும் வரையறையாக இல்லை. அரசுக் கட்டமைப்பே அதன் இருத்தலுக்கான ஆதாரமாக உள்ளது. அதாவது, இந்தியத்தேசியம் இந்திய அரசுத்தேசியம் என்ற அளவிலேயே அமைகிறது.

5.பிரிட்டிசு அரசு தோற்றங்கொண்டபிறகே இந்தியா எனும் தேசியக் கட்டமைப்புக்கான கருத்தியலுக்கான வரையறைகள் தோற்றங்கொண்டன.

6.தமிழ்த்தேசியத்தின் சாரமான வரையறைகள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உருவாகி நிலைபெற்றவையாகும். தொல்காப்பியரின் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் எனும் வரையறுப்பு தொடங்கி தமிழர் சமூகம் தன் நிலத்தையும் மொழியையும் தன் சமூக அறிந்துணர்வில் (பிரக்ஞையில்) தொடர்ச்சியாகப் பெற்றுவந்துள்ளது. இதுகுறித்து ஏற்படும் புரிதலை வைத்து இந்திய தேசியம் வலியுறுத்தும் “வேற்றுமையில் ஒற்றுமையையும், தமிழ்த்தேசியம் வலியுறுத்தும் “சாதியம் களைந்த ஒற்றுமையையும்” பெருமளவு விளங்கிக்கொள்ளலாம்.

7.தமிழ் தேசியம் இந்திய தேசியத்துக்கும் அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளி, காசுமீரி, பஞ்சாபி, அசாமி முதலிய தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடு பகை முரண்பாடாக அவ்வப்பொழுது வெளிப்படுகின்றது.

8.இத்தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக வெளிப்பட காரணம், ஒடுக்கப்படும் இந்த தேசிய இனங்கள் தமது எதிரியாக, பகைச் சக்தியாக இந்திய தேசியத்தையே கருதுகின்றன, இந்திய தேசியத்தைத்தானே தவிர தங்களைப் போன்ற நிலையிலுள்ள பிற தேசிய இனங்களை எதிரியாக, பகை சக்தியாகக் இவை பார்ப்பதில்லை.

9.ஆக, தமிழ்த்தேசியத்தின் புறப்பகையாக இருப்பது இந்தியத் தேசியம் என்ற பெயரிலான தில்லி ஏகாதிபத்தியம். அகப்பகையாக இருப்பது சாதியம் தானே தவிர, அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு தேசிய இனங்கள் இல்லை!

10.இந்த அண்டை இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியாது!

தமிழ்த்தேசிய கருத்துரு

தமிழ் தேசிய சிந்தனைக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஆனால், அது நேற்று பெய்த மழையில் மழையில் இன்று முளைத்த காளான் என்று புறந்தள்ளி விடவும் இயலாது.

தமிழ்த் தேசியத்தை எப்படி புரிந்துகொள்வது?

தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரிடம் அது குறித்த ஒத்த கருத்து இல்லை. இதனால் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படும் குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏராளம். இந்நிலையில் தமிழ்த்தேசியம் என்பதன் சாரம் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது.

தமிழ்த்தேசிய அரசியல் கருத்துரு

நவீனத் தமிழ்த்தேசியம் ஓர் அரசியல் கருத்துருவாக உருவாகி ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகின்றன. தமிழரின் அடையாளங்கள் எவை? தமிழ்மொழியே தமிழரின் முதன்மையான அடையாளம் என்ற ஒரு பதிலை 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்தே உருவாக்கி வந்தனர்.

வேதங்களே இந்தியரின் அடையாளம். வேதாந்தமே இந்தியரின் ஆகப்பெரும் தத்துவம், இந்து மதமே இந்தியரின் பேரடையாளம் என்ற அலை வேகமாக வீசி அடித்த காலத்தில் சமயம் சாராத, சாதி சாராத, மொழியை அடையாளமாக்கியவர்கள் தமிழர்கள் என்பது ஒரு சாதனையாகும்.

எனினும் தமிழ் தேசியம் என்று பலராலும் வரையறுக்கப்படும் கட்டுமானம் தனது அடிப்படை கொள்கைகள், அரசியல் தேவைகள், போதாமைகள், மனோவியல் மாற்றங்கள், சமூகவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு தளங்களில் தனது நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்க்கவும் உறுதி செய்யவேண்டிய நிலையிலுமே இயங்கிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

தமிழ் தேசியம் சாத்தியமா என கேட்டால் நிகழ்சூழலை கவனிப்பவர்களுக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றும். இந்திய அரசின் அதிகாரம், பன்னாடுகளுடனான இந்தியாவின் உறவு, உலக மூலதனத்துக்கான பெருஞ்சந்தையாக இந்தியா இருத்தல் போன்ற விஷயங்களை அவதானித்தால் தமிழ்தேசியம் சாத்தியமில்லை என்றே படும்.

உண்மை என்னவெனில், இந்தியா போன்ற ஒரு பெரும் அசாத்தியமே சாத்தியப்பட்டிருக்கையில், இங்கு எதுவுமே சாத்தியம் என்பதுதான். தமிழ்தேசியம் என்னும் அசாத்தியம் மட்டும் சாத்தியப்படாதா என்ன? தமிழ்தேசியத்துக்கான பலவகை கருத்தியல்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எந்த கருத்தியலை போலவும் தமிழ்தேசியத்துக்கும் இடது, வலது உண்டு.

எது தமிழ் தேசியம்?

தீவிர ஆதரவுக்கும் பலத்த எதிர்ப்புக்கும் நடுவில் சிக்கி மக்களின் கவனத்தை பெற்றிருந்தாலும், தமிழ் தேசியத்தை ஒரு வழக்கமான உணர்ச்சிமிகு அரசியல் சிந்தனை சார்ந்த செயல்பாடாக அலட்சியபடுத்தமுடியாது. அது மிக முக்கியமான நுண் அரசியலையும், வர்க்க பேத விடுதலை உணர்வையும், குழு அரசியல் சார்ந்த பாசீசத்தையும் ஒருங்கே கொண்டு எதிர்கால தமிழ்ச்சமுதாயத்தை மறு உருவாக்கம் செய்ய முனைவதாயும், நிரந்தர பதற்ற சூழலுக்குள் இருத்தி வைக்கக் கூடியதாயும் அமைந்திருக்கிறது.

ம.பொ. சிவஞானம் தனது தமிழ் குடியரசு இயக்கத்தை தமிழக எல்லைகளை அமைக்கும் போராட்ட இயக்கமாக முன்னெடுத்த வரலாறு தமிழ் தேசியம் சிந்தனையின் ஆரம்ப நிலையாக கூறப்படுகிறது. என்றாலும் ம.பொ.சி யின் போராட்டத்தின் சாரம் இன்றைய தமிழ் தேசியம் முன்வைக்கும் போராட்டத்தின் சாரத்தினின்று மிகவும் வேறுபட்டே இருக்கிறது. அதேப் போன்று பெரியாரும் பெரியார் முன்வைத்த திராவிட கோட்பாடும் இன்று தமிழ் தேசியம் பேசுவோரின் கடுமையான தாக்குதலுக்கு நிலையாவதும் தொடர்கின்றது.

அதோடு தமிழ் தேசியம் குறித்த பலமான சிந்தனை அலை தமிழீல விடுதலை போராட்டத்தோடும் இலங்கை தமிழினப் படுகொலை அரசியலோடும் மிக நெருங்கிய தொடர்பு உடையதாக உள்ளது. 2007 முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகான தமிழ் தேசியம் குறித்த பேச்சுகளில் புது வேகமும் விசையும் தென்படுவதை மறுக்க முடியாது. எனினும், பல்வேறு வரலாற்று சான்றுகளோடும் திரிபுகளோடும் தமிழ் தேசியம் பலமுறை பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *