காலத்தின் தேவைக்கேற்ப மறுமலர்ச்சியின் வெளிச்சத்தை ஏந்தி மானுட சமூகத்திற்கு நேர்வழி காட்டிட களம் கண்ட இஸ்லாமிய இயக்கம் உருவாக்கிய மகத்தான மாணவர் இயக்கம் தான் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO). ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்திய தலைவர் மர்ஹும் சிராஜுல் ஹசன் சாஹிப் கூறியதைப் போல இஸ்லாமிய இயக்கத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றுதான் எஸ் ஐ ஓ.

மாணவ – இளைஞர்களிடையே இஸ்லாமிய அழைப்பை எடுத்துரைப்பது, மாணவ – இளைஞர்களிடையே இஸ்லாமிய அறிவை- உணர்வை உருவாக்கி இஸ்லாமிய அச்சில் பார்த்தெடுப்பது, நன்மையை ஏவி தீமையை அளிக்கும் உயரிய போராட்டத்தில் எதிர்கால தலைமுறையின் ஆக்கபூர்வ பங்களிப்பை உறுதிப்படுத்துவது, கல்வித்துறையையும் கல்வி வளாகங்களையும் நுகர்வியல் – பொருளாதார கலாச்சாரம் சீரழிவுகளில் இருந்து மீட்டெடுப்பது, இஸ்லாமிய மறுமலர்ச்சியின் எதிர்கால தலைவர்களாக வழிகாட்டிகளாக உருவாக்குவது உள்ளிட்ட உயரிய லட்சியங்களோடுதான் எஸ் ஐ ஓ உருவாக்கப்பட்டது.

சர்வதேச அளவில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து முதலாளித்துவ கலாச்சாரம் உலகை – குறிப்பாக மாணவ தலைமுறையை – விழுங்கிக் கொண்டிருந்த காலகட்டம். இஸ்ரேலின் சயனிசமும் மேற்கத்திய சாம்ராஜ்த்துவமும் உலகை ஆக்கிரமிக்க துவங்கியிருந்த காலகட்டம். இந்திய மண்ணில் சமய நல்லுறவை சீர்குலைத்து பாசிச சக்திகள் தலை தூக்க துவங்கியிருந்த காலகட்டம். நுகர்வு கலாச்சாரத்தில் சிக்குண்டு காமத்தின் வன்முறையின் வழிகளில் மாணவ சமூகம் பயணிக்க ஆரம்பித்த காலகட்டம், கல்லூரி வளாகங்களில் புரட்சி கானங்கள் பாடித்திரிந்த மாணவ இயக்கங்கள் மெல்ல மெல்ல காணாமல் போன காலகட்டம், அதே நேரத்தில் முஸ்லிம் உலகில் இஸ்லாமிய எழுச்சி உருவாகத் துவங்கியிருந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் தான் எஸ்.ஐ.ஓ உருவானது. எந்த லட்சியத்தை முன்னிறுத்தி எஸ்.ஐ.ஓ உருவாக்கப்பட்டதோ அதை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி பயணித்துக் கொண்டிருக்கிறது எஸ்.ஐ.ஓ.

மாணவ தலைமுறையை ஒழுக்கம் மிக்கவர்களாகவும் உயரிய நோக்கம் கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டிய தேவை எல்லா காலகட்டத்திலும் உண்டு. குறிப்பாக நாட்டின் முன்னேற்றத்தில், வளர்ச்சியில், நீதியை நிலை நாட்டுவதில் அவர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். மாணவர் தலைமுறையை ஒழுக்க மிக்கவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் உருவாக்கக்கூடிய அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளுக்கு பின்னால் மாணவர் சமூகங்கள் இருந்ததை நம்மால் உணர முடியும். ஷா மன்னனுக்கு எதிராக நடைபெற்ற ஈரானிய புரட்சியும், அரபு உலகில் நடைபெற்ற மல்லிகை பூ மறுமலர்ச்சி போராட்டங்களும், சீன அரசுக்கு எதிராக நடைபெற்ற தியான்மென் சதுக்க போராட்டங்களும் மாணவர் எழுச்சியை உலகிற்கு பறைசாற்றும். நாட்டின் வருங்காலத்தை வழிநடத்த போகும் மாணவர் தலைமுறை அரசியல் விழிப்புணர்வற்று உருவாக்கப்படுமானால் அது எதிர்கால தேசத்தை பெருமளவு பாதிக்கும். அதை தெளிவாக புரிந்து கொண்டதன் காரணத்தினால்தான் பாசிச சங்பரிவார் சக்திகள் கல்வி வளாகங்களை குறி வைத்து செயல்படுகின்றன.

சமகாலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கைகளும் கல்வித் திட்டங்களும் மாணவர்களை திசை திருப்பும் முயற்சியில் தான் முனைப்பு காட்டுகின்றன. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குறித்தான புரிதலற்ற தலைமுறையாக மாணவத் தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலாளித்துவத்தின் பாசிசத்தின் நோக்கமாகும். நாட்டில் நிலவும் குரோனிக் முதலாளித்துவத்தின் பொருளாதார சுரண்டல்களை குறித்தும் சனாதன சாதிய ஏற்றத்தாழ்வுகளை குறித்தும் கவனம் அற்றவர்களாக வருங்கால தலைமுறை கடந்து செல்லக்கூடாது. நீட், ஐஐடி சாதி ஆதிக்கம், கல்வி நிறுவன படுகொலைகள், இந்துத்துவ கல்வித் திட்ட திணிப்பு, மதச்சார்பற்ற அறிஞர்களின் ஆய்வுகளின் நிராகரிப்பு போன்ற பேராபத்துகள் குறித்த விழிப்புணர்வற்ற தலைமுறையாக வருங்கால மாணவர் தலைமுறை உருவாகி விடக்கூடாது.

சுயசார்பற்ற குடிமக்களாக மாணவர்களும் தொழிலாளர்களும் உருவாக வேண்டும் எனில் அவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

இந்த இடத்தில்தான் எஸ்.ஐ.ஓ வின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நாட்டில் இன்று நிலவும் சிக்கலான சமூக, அரசியல் சூழல் இளைஞர்களை நிராசையின் பக்கமும் நம்பிக்கையின்மையின் பக்கமும் உந்தித் தள்ளுகிறது. இதிலிருந்து மாற்றமாக ஆக்கபூர்வமான சிந்தனையையும் செயல்துடிப்பு மிக்க மனநிலையையும் உருவாக்குவதில் எஸ்ஐஓ வெற்றி பெற்றுள்ளது. தெளிவான அரசியல் புரிதலை உருவாக்கி மாணவ, இளைஞர்களை ஆக்கபூர்வமான போராட்டப் பாதையில் எஸ்ஐஓ வழிநடத்திச் செல்கிறது.

கே. எஸ். அப்துர்ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *