5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த கவலையை விட அந்த முடிவுக்கு பிறகு நாட்டில் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்துதான் மக்கள் கவலைப்படுகிறார்கள். தேர்தலை ஒட்டி  பெட்ரோல் டீசல் விலை சிறிதளவு கூட அதிகரிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு என்னவாகும் என்பது பெரும் கவலையாக மாறியுள்ளது.

நாளை முதல் அதிகரிக்கப் போகும்  பெட்ரோல் டீசல் விலையும் வரிகளும் பெரும் சிக்கலை இந்திய மக்களின் வாழ்க்கையில் உருவாக்கப் போகிறது.   பெட்ரோல் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார்கள் இடம் கொடுத்ததன் மூலம் சதத்தை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது பெட்ரோல் டீசல் விலை.   இதன்மூலம் தனியார் நிறுவனங்களும் அரசும்  மக்களிடத்தில் பெரும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதில் தலையிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என ஒன்றிய அரசு கூறினாலும் தேர்தல் காலங்களில் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டது எவ்வாறு என்ற கேள்விக்கு ஒன்றிய அரசிடம் இதுவரை விடை இல்லை.

தற்போதைய நிலையில் இந்தியா 85 சதவீதம் இறக்குமதியை நம்பித்தான் இருக்கிறது. உக்ரைன் –  ரஷ்யா போரை தொடர்ந்து  கடந்த வாரம் பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 டாலராக உயர்ந்தது. அது மேலும் பேரலுக்கு 140 டாலராக உயர வாய்ப்புள்ளது. 

போரைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. எனினும் ரஷ்யாவிடம் இருந்து இந்திய இறக்குமதி செய்வது வெறும் 5 சதவீதமே.  போரின் தொடர்ச்சியாக ரஷ்ய இறக்குமதி பாதிக்கப்பட்டாலும் அது பெரிய அளவிலான பாதிப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்தாது. ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த ஒன்றியம் அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லை. ஆகவே தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சுமார் பதினைந்தில் இருந்து இருபது ரூபாய் வரைக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புண்டு. ஒரேயடியாக உயர்த்தப்படாவிட்டாலும் சிறிது சிறிதாக அந்த விலை உயர்வை நோக்கி  எண்ணெய் நிறுவனங்கள் செல்லும் என்பது நிச்சயம். அதன் மூலம் பெரிய பொருளாதார பாதிப்பை இந்திய மக்கள் அடைவார்கள்.  விலை உயர்வால்  சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை சந்திக்கும். ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிக்கலில் சிக்கி இருக்கும் சிறு குறு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை பெருமளவு அதிகரிக்கும். அதன் மூலம் மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயரும்.   ஒட்டுமொத்தமாக இந்த அத்தனை சுமைகளும் நாட்டினுடைய பொதுமக்கள் மீதுதான் விழும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களும்  இவ்விலை உயர்வுக்கு பலியாகத்தான் போகிறார்கள்.  வகுப்புவாத வெறியையும் போலி கவர்ச்சி பேச்சுக்களையும் வைத்து தொடர்ந்து மக்களை ஏமாற்றும் வித்தை தெரிந்தவர்களாக பாசிச பாஜகவினர் உள்ளனர்.  ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தும். 

பாரதிய ஜனதா கட்சியை அகற்ற வேண்டும் என்று கூறும் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளிடம் தீர்க்கமான முடிவுகளை எதுவும் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.  மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஒருங்கிணைப்பதற்கான சக்தியும் ஆற்றலும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்பதன் வெளிப்பாடகத்தான் தேர்தல் முடிவுகள் உள்ளன.  கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பாக வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது.

மிதவாத இந்துதுவாவை பின்பற்றும் ஆம் ஆத்மிக் கட்சி தேசிய அளவில் முக்கியத்துவமும் வெற்றியும் பெற்று வருகிறது. 

ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்திருக்கும் வெற்றியின் மூலமாக பாசிச பாஜக தனது இந்துத்துவ அஜெண்டாவை இன்னும் வேகமாக முன்னெடுத்து கொண்டு செல்லும். ஒரு நாடு ஒரு தேர்தல், அதிபர் ஆட்சி முறை, மையப்படுத்தப்பட்ட அதிகாரம்… என சங்பரிவார் சமயலறையில் தயார் செய்யப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்படும். ஆர்எஸ்எஸ் இந்துத்துவாவின் அடிப்படை அஜண்டாவான பார்ப்பனிய மேலாதிக்கம் வலுப்பெறும். சிறுபான்மைச் சமூகமும் தலித்துகளும் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மைவாதத்தின் பெரும் தாக்குதலுக்கு ஆளாவார்கள். நாடாளுமன்றத்திற்கான அரையிறுதி தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி பலரது கண்களையும் மறைக்கும். தங்களது அடிப்படைக் கொள்கைகளை மறந்து அவர்களோடு கைகோர்க்கும் நிலை ஏற்படும்.

இது குறித்து தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம்  பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்க்கட்சிகள் பெயரளவில் எதிர்க்கட்சிகளாக இல்லாமல் பாஜகவின் பாசிச அரசியலையும் மக்கள் விரோத திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தீர்க்கமாக திட்டமிட வேண்டும்.

பாசிசத்திற்கு எதிரான வாக்குகளை   ஒருங்கினைக்காமல் அவர்களை வீழ்த்த இயலாது. அறைகளுக்குள் அமர்ந்து ஆலோசனையை கூறுவதாலும் கட்டுரைகள் எழுதுவதாலும் தேர்தல் காலங்களில் மட்டும் ஆலோசனைகள் செய்வதாலும் எந்த மாற்றங்களையும் நம்மால் ஏற்படுத்த முடியாது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் கூறுகிறது. எனவே பாசிசத்தை விரட்டியடிக்க தெருவில் இறங்கி அரசியல் செய்வோம்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *