ஸ்டார்ட் கேமரா! ஆக்சன்,ரோலிங்

தொடர் மழையாலும், வெள்ளத்தாலும் தனியொரு தீவை போல் பரிதாபமாக காட்சியளிக்கும் சென்னை மாநகரின் தற்போதைய நிலை பார்ப்போரை நிச்சயம் பதைபதைக்கச்செய்யும். வீதியெங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மக்கள், சிலபோது அத்தியாவசிய தேவையான உணவுக்கு கூட வெளியேற முடியாத அவலம் காட்சி ஊடகத்திலும், சமூக வலைத்தளத்திலும் பரவலாக பகிரப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், சில மக்கள் நலன் அரசியல் கட்சிகளும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சென்ற தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை, கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் செல்வதை போல் ஹாயாக போட்டோஷூட் நடத்தியது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் படும் கஷ்டங்களிலும், துயரங்களிலும் விளம்பரம் தேட அலையும் இவர்களை பார்க்கும் போது சிலருக்கு வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கலாம். ஆனால் பிஜேபியின் செயல்பாடுகளை தொடர்ந்து அவதானிக்கும் மக்களுக்கு இவர்கள் யாருக்கானவர்கள் என்பதும், இவர்கள் யாருக்கான அரசியல் செய்பவர்கள் என்பதும் மிகத்தெளிவாக தெரிந்திருக்கும்.

மோடியின் குஜராத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக தனது சொந்த நாட்டு மக்களை் ஏழை என்ற ஒரே காரணத்திற்காக சுவரெழுப்பி மறைக்கப்பட்டதும், விலைவாசி உயர்வால் ஒவ்வொரு நாளும் மக்கள் மூச்சுத்திணறி கொண்டிருக்கும் போது அவர்களை அவமானப்படுத்தும் விதமாக நாட்டின் தலைமை நிதியமைச்சர் நிர்மலா “நாங்கள் வெங்காயமோ, பூண்டோ சாப்பிடுபவர் அல்லர் ஆகவே விலையுயர்வை பற்றி எங்களுக்கு எந்த கவலையுமில்லை என ஏளனத்தோடும், திமிரோடும் பதிலளித்ததும் இவர்களின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கான சுயநல அரசியல் செய்பவர்கள் என்பதற்கு இப்போதைய அண்ணாமலை போதுமான சான்றாகும்.

உண்மை இவ்வாறிருக்க, இவர்கள்  தங்களை மக்களுக்கானவர் என்றும், மக்களின் கஷ்டங்களில் பங்கெடுப்பவர்கள் என்றும், எளிய குடும்பத்திலிருந்து வந்த ஏழை மக்களின் ஆதர்ச நாயகன் என்றும் தொடர்ந்து விளம்பரம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக தான் மழை நீரில் அண்ணாமலையின் உல்லாச படகு சவாரியையும், 2020ம் ஆண்டு வேறொரு   நிகழ்ச்சிக்காக உணவு தயாரித்த புகைப்படத்தை , இப்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயாரிக்கப்பட்டதை போல் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருப்பதையும் பார்க்க வேண்டி உள்ளது. வடமாநிலங்களில்  வெறும் போட்டோஷூட்டாலும், போட்டோஷாப்பாலும் ஆட்சியை பிடித்த பிஜேபி அதே பாணியை தமிழகத்திலும் செயல்படுத்தலாம் என நினைத்து திட்டமிட்ட அத்துணை பித்தலாட்டமும் இன்றைக்கு அம்பலப்பட்டு பல்லிளித்து நிற்பதானது, தமிழகம் ஊபியோ, பீகாரோ அல்ல என்பதை மீண்டுமொருமுறை  நிறுவியுள்ளது.

காஜா காதர் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *