தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாக்களிலும் கூட இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் நிலவி வருகின்றது என்று சொன்னவர்கள் எல்லாம் சீதாராமம் திரைபடத்தை காவியம் என்று புகழ்ந்து தள்ளியபோது சீதாராமம் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பார்க்கத் தொடங்கினோம். அவர்கள் சொன்ன அந்த அழுகிய காவியம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதற்கு.

இதன் கதைக்களம் 1960களில் நகர்கிறது. கதைக்களம் எந்த காலத்தில் நடந்தாலும் கதையின் ஆரம்ப 32 நிமிடங்களிலேயே தெரிந்து விடுகிறது இத்திரைப்படம் காஷ்மீர் பைல்ஸின் இரண்டாம் பாகமாக தான் இருக்கப் போகின்றது என்று…

கதையில் மேற்குறிப்பிட்ட அந்த 32 நிமிடங்கள் கடந்ததுமே முகமதியர்கள் போய்விடுகிறார்கள்…

அடுத்ததாக காண்பிக்கப்படும் அத்தியாயம் காதல் சார்ந்ததாக இருக்கப் போகிறது என எண்ணிக்கொண்டு நாமும் பார்க்கத் துவங்குவோம் அதன் பின்பு ச்சே என்ன Bro… இப்படி ஒரு காதலா… பிரமாதம்… வெங்காயம்.. என்று பேசவும் தொடங்கி விடுகின்றார்கள் இங்கு தான் பிரச்சனையே பத்தில் எட்டு பேருக்கு இந்த சீதாராமன் திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும் பின்னர் அந்த எட்டு பேரும் வாட்ஸ்ஆப்பில்  வைக்கும் ஸ்டேட்டஸ்களின் காரணத்தால் வேற வழியில்லாமல் பிடிக்காமல் போன அந்த இரண்டு பேருக்கும் கூட இந்த திரைப்படத்தை பிடிக்கும் மனப்பான்மையை அமைத்து விடுகிறது அவர்களின் ஸ்டேட்டஸ்கள்.

அருமையான காட்சி அமைப்பு திரைப்படம் எங்கும் வண்ணமயமாக தெரியும்.. அருமை..! இனிமையான இசை, அருமையான வரிகள் மற்றும் மென்மையான இசையையுடன்  வருகிற பாடல்கள், கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்களின் பிரமாதமான நடிப்பு மற்றும் திரைக்கதை என அனைத்திலும் பர்ஸ்ட் கிளாஸ் ஆக இத்திரைப்படம் நிற்கின்றது. என்னதான் இத்திரைப்படம் இவ்வளவு பாசிட்டிவ்களை கொண்டிருந்தாலும் இது செய்திருக்கும் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் இதன் பொய்களுக்காகவும் இதனை ஒரு குப்பை என்று தான் சொல்ல முடியும்.

கரும்பலகையில் உள்ள வெறும் இரண்டே இரண்டு வெள்ளை புள்ளிகள் மட்டுமே தான் நாம் மேற்குறிப்பிட்டவை.

முன்பு இஸ்லாமிய வெறுப்பை பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ராஸ்மிகா மந்தனாவின் ரசிகர்களோ? என்னமோ? தெரியவில்லை.. இயக்குனர் ராஸ்மிகாவை வைத்து மிகப்பெரிய காயை நகர்த்திருக்கிறார். திரைப்படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தின் அறிமுகமே இந்திய தேசியக்கொடி உள்ள ஒரு காரை தீ வைத்து கொளுத்துவதில் தான் தொடங்குகிறது. தீ வைக்கும் போது ஹிஜாப் அணிந்து வகிதாவாக இருக்கும் ராஷ்மிகா பின்பு வரும் காட்சிகளில் வரலட்சுமியாக மாறிவிடுகிறார். அதாவது  வன்முறை நிகராத காட்சிகளில் ஹிஜாப் இல்லாமலும் அரைக்கால் ஸ்கர்ட்டனும் வலம் வருகிறார் இத்திரைப்படத்தில்.

ராம் மற்றும் சீதா என்ற பெயராலேயே மட்டும் ஏன் இந்த திரைப்படத்தை வேறொரு கோணத்தில் பார்க்கின்றீர்கள் என்று முற்போக்கு பேசுபவர்களின் வாயில் இருந்து கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் நம்மால் கேட்க முடிகின்றது.

இத்படத்தின் கதையில் சில திருப்புமுனைகள் வருகின்றன அதில் முதன்மையானது கதாநாயகியின் சீதா (மிர்னால் தாகூர்) கதாபாத்திரமானது இளவரசி நூர்ஜஹான் என்பது. இந்த நூர்ஜகானின் கதாபாத்திரம் காலப்போக்கில் சீதாவாக மட்டுமே வாழ விரும்பும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகின்றது. உலக சினிமாக்கள் முதல் உள்ளூர் சினிமாக்கள் வரை கதாநாயகிகள் மட்டும்தான் இஸ்லாமியர்களாக இருப்பார்கள் ஆனால் கதாநாயகன் அப்படி இருக்க மாட்டார் எனும் விதிக்கேற்பவே இத்திரைப்படமும் நகர்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் 43 நிமிடங்கள் நகரும் இத்திரைப்படத்தில் சாதாரண விஷயங்கள் தானே என்று நாம் கடந்து செல்லும் காட்சிகளின் பின்னால் மிகப்பெரும் அரசியல் உள்ளது.

இத்திரைப்படத்தில் வரும் காஷ்மீர் காட்சிகள் அனைத்துமே தற்போது இந்திய அரசாங்கம் மற்றும் ராணுவம் காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வரும் துரோகத்தை சரியானது என்று நியாயப்படுத்துவதாகவே அமைகிறது. உதாரணமாக திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுவின் தலைவர் ஒரு திட்டம் தீட்டி காஷ்மீரி மக்களை அங்குள்ள இந்து பண்டித்களின் மீது வன்முறை நிகழ்த்துவதற்கு தூண்டிவிடும் செயலை செய்வார். சூழ்ச்சி வலையில் காஷ்மீரி முஸ்லிம்களும் வீழ்ந்து அந்த பண்டிதர்களை தாக்குவதற்கு செல்வதைப் போன்ற காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும்.

இது மட்டுமல்லாமல் மேலும் பல இஸ்லாமிய வெறுப்பை வெகுஜன மக்களின் மத்தியில் விதைக்கும் பல காட்சிகள் இப்திரைப்படத்தில் அமைகின்றன. அதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ராணுவ தளபதிகளாக வரும் கௌதம் வாசுதேவ் மேனனும் பிரகாஷ் ராஜும் பாகிஸ்தானிற்குள் சென்று ஒரு அசைன்மென்ட்டை முடிப்பதை குறித்து ராணுவ வீரர்களுக்கு அறிவுரை வழங்கும்போது “நீங்கள் அங்கு சென்று ஒருவேளை மாட்டிக் கொண்டால் அது இந்திய சிலை போல் அல்ல” என்று கூறி பாகிஸ்தான் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் புகைப்படங்களை எல்லாம் காட்டுவார்கள் மேலும் அதன் தொடர்ச்சியாக “நம்முடைய இந்திய சிறைச்சாலையில் மாட்டிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தற்போது உடல் எடை கூடி இருக்கிறார்” என்று கூறி இஸ்லாமிய வெறுப்பை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் தெளிவாக நம்மீது இக்காட்சியின் வாயிலாக ஏற்றிவிடுவார்கள்.

மற்றொரு காட்சியில் வகிதா (ராஷ்மிகா) கதாபாத்திரம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு தன்னுடைய உதவிக்கு யாராவது கிடைப்பார்களா? என்று தன்னுடைய தோழியிடம் அலைபேசி வழியாக கேட்கும் போது அத்தோழி அங்கு நம்முடைய சீனியர் பாலாஜி இருக்கிறார் அவர் உனக்கு உதவுவார் என்று கூறும் போது எனக்கு உதவுவதற்கு அவர்கள் தான் இருக்கின்றார்களா? “நம்ம ஆளுக யாரும் இல்லையா?” என்று கேட்கும் வசனத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்குள்ளே மட்டும்தான் உதவி செய்து கொள்வார்கள் மற்றும் இயல்பாகவே இந்துக்களின் மீது வெறுப்புணர்வை கொண்டவர்களாக சித்தரித்துள்ளார் இயக்குனர். இதே போல் ஒரு காட்சிதான் கடந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான மாலிக் – கிலும், கலவரம் நடக்கும் போது கிறிஸ்தவர்களை மஸ்ஜிதுக்குள் முஸ்லிம்கள் அனுமதிக்காமல் இருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் ஆனால் ஒவ்வொரு இயற்கை பேரிடர்கள் வரும்போதும் எப்படி முஸ்லிம்கள் முதல் வரிசையில் நின்று அனைத்து சமுதாய மக்களுக்கும் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் உதவுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது போன்ற காட்சிகள் எல்லாம் திரைப்படங்களில் வரும் போது அந்த உதவிகளை பெற்றவர்கள் கூட நம்முடைய சகோதர மதத்தினரின் மீதான வெறுப்பு விதைக்கப்கப்படுகின்றது என்பதை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை?

அந்த, இந்தியா – பாகிஸ்தானின் சிறைச்சாலைகளின் ஓப்பீட டு காட்சியை குறித்து சிந்திக்கும் போதுதான் ஒரு விஷயம் புலப்படுகிறது. அது என்னவென்றால் அயல்நாட்டுக்காரர்களை எல்லாம் நம் நாட்டில் கொள்ள மாட்டார்கள். ஆனால் நம் நாட்டிலேயே பிறந்து இங்கேய வாழும் பச்சை இந்தியர்களையே மாட்டுக்கறி உண்டார் எனும் காரணத்திற்காகவும் ஜெய்ஸ்ரீராம் கூறவில்லை என்னும் காரணத்திற்காகவும் கொல்வார்கள் என்பதுதான் அது.

இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை மிகவும் வெளிப்படையாக காதலோடு இணைத்து காட்சிப்படுத்தி இருப்பது என்பது புதிதொன்றும் இல்லை..

எவ்வளவுதான் இஸ்லாமாபோபியா திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது திரைப்படங்களின் வழியேதான் சாத்தியம் என்பது நமது கருத்து.

லெனின் கூறிய மிகவும் பிரபலமான சில வரிகள் நினைவுக்கு வருகின்றது.

“அரசியலில் நாம் இறங்கவில்லை என்றால் அரசியல் நம் மீது ஏறிச் சென்று விடும்” என்பதுதான் அது. இது போன்று தான் சினிமாவில் நாம் இறங்கவில்லை என்றால் சினிமாவும் நம் மீது ஏறி சென்றுவிடும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகவே இந்த சீதாராமம் திரைப்படம் திகழ்கிறது.

– மு. ஷக்கில் அகமது வேலந்தாவளம் – ஹபிபுர் ரஹ்மான் (ஊடகவியலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *