“தமிழர்கள் எந்நாளும் ஒற்றை மத அடையாளத்தில் தம்மை முடக்கிக் கொண்டது இல்லை!”


சீமானின் “நாம் தமிழர்” கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் முஸ்லிம் இளைஞர் முருகக் கடவுள் புகழ் பாடி ஷரியத்திற்கு முரணாகத் திருமணம் செய்து கொண்டது குறித்து இப்போது ஒரு சர்ச்சை நிலவுகிறது. சீமானைக் கண்டிப்பவர்கள் ஒருபுறம். அப்படிக் கடுமையாகத் தம் சமூகத்தினர் அவரைக் கண்டித்ததற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்கும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்னொரு புறம் என இரு போக்குகளைக் காண்கிறோம்..

இந்தப் பதிவு அது குறித்து அல்ல. நான் சீமானின் அரசியல் நகர்வுகளை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவனனும் அல்ல. இங்கு தினம் ஒரு வடிவில் வெளிப்படும் பாசிசத் தாக்குதல்களை எதிர் கொள்வதற்கே நமக்கு நேரம் போதவில்லை.

இருந்த போதிலும் இந்த சர்ச்சையை ஒட்டி சீமானின் கடந்த இரண்டாண்டுகால அரசியல் நகர்வுகள் குறித்து மேலோட்டமாகச் சமூக ஊடகப் பதிவுகளில் தேடிப் பார்த்தேன்.

சீமானின் செயல்பாடுகள் ஒரு பக்கம் “லூசுத்தனம்” எனச் சொல்லும் அளவிற்கும் இன்னொரு பக்கம் மிகவும் ஆபத்தான திசையில் செல்வதாகவும் உள்ளது. “நாம் தமிழர் கட்சி” என்பதைத் தாண்டி “வீரத் தமிழர் முன்னணி” என்றொரு அமைப்பையும் “தமிழம்” என்றொரு மதத்தையும் (!?) இவர் உருவாக்கியுள்ளதை அறிந்தபோது எனக்கு வியப்புத் தாளவில்லை.

இவரது “வீரத் தமிழர் முன்னணி” என்பது முழுக்க முழுக்க இந்து மத அடையாளங்களுடன் கட்டமைக்கப்படுகிறது. முருகக் கடவுள் – அவரது – தண்டு கொண்டு இங்குற்றோர் ஆண்டி – வேடத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஒரு அடையாளமாக சீமானால் கட்டமைக்கப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருவதை அறிவேன் ஆனால் இந்தக் கட்டமைப்புக்குப் புதிய பரிமாணங்களை அவர் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே போவது தெரிகிறது.. “முருகன்” என்பதை நாங்கள் ஒரு மத அடையாளமாகக் கருதவில்லை, தமிழர்களின் ஒட்டு மொத்த அடையாளமாகக் கருதுகிறோம் என அவர் சொல்வதற்கெல்லாம் எந்த அடிப்படையும் இல்லை. இந்த நோக்கிலிருந்து அவர்களின் அமைப்பு ரீதியான”அரசியல்” செயல்பாடுகள் சிலவற்றைக் காணலாம்.

“அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திரத் தேரோட்டத்திற்கு வருவோர்க்கு அன்னதானம்” வழங்குதல், பழனி, சுவாமிமலை முதலான ஆகம வழிப்படி வழிபாடுகள் நடக்கும் கோவில் திருவிழாக்களின்போது பக்தர்களை வரவேற்று சுவரொட்டிகள் வெளியிடுவது, தண்ணீர்ப்பந்தல் நடத்துவது, அன்னதானம் செய்வது முதலானவைதான் அவர்களின் பிரதான செயல்பாடுகளாக உள்ளன. எல்லா அரசியல் கட்சிகளும்தான் தண்ணீர்ப்பந்தல்கள் வைக்கிறார்கள் எனச் சொல்லி இதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இவர்கள் ‘ஓம்’, ‘வேல்’ முதலான அடையாளங்களைத் தம் அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுடன் இணைக்கிறார்கள். எல்லாவிதமான ஆகம வழிபாடுகளையும் அவர்கள் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொண்டு அவற்றில் பங்கு பெறுகின்றனர். அவற்ரைத் தவிர வேறு பெரிய அரசியல் செயல்பாடுகள எதையும் அவர்கள் செய்வதும் இல்லை.

சுவாமிமலை ‘திருமுருகப் பெருவிழாக் கொண்டாட்டம்’ மட்டுமல்ல, தஞ்சை ‘பெரு உடையார் குடமுழுக்கு’ போன்ற லிங்க வழிபாடு மேற்கொள்ளப்படும் ஆலய நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்குபெறுவது, கொண்டாடுவது ஆகியவற்றையும் பார்க்கிறோம். இவர்கள் நடத்துகிற கிராமப் பூசாரிகள் மாநாடு என்பதற்கெல்லாம் இவர்களுக்கு முன்னோடிகளாகவும் வழிக்காட்டிகளாகவும் உள்ளது இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகள்தான் என்பது இங்கே கவனத்துக்குரியது. அவர்கள் பலகாலமாகச் செய்து வருவதி இவர் இப்போது சுவீகரித்துக் கொண்டுள்ளார்.

“சென்ற ஜனவரி 2019ல் தமிழர் நிலமெங்கும் மூன்று நாட்கள் வேலுடன் கூடிய முருகன் குடில் –சீமான் அதிரடி” என்றெல்லாம் ஊடகங்கள் இவரது அரசியல் செயல்பாடுகள் குறித்துச் செய்திகள் வெளியிட்டு உள்ளதைதையும் பார்க்கிறோம்.

“தமிழ்க் கடவுள் முருகன்” – என விஜய் டி.வி ஏதோ நிகழ்ச்சி ஒன்றை அறிவித்தபோது அதை சீமான் கட்சியினர் எதிர்த்துள்ளனர். அதாவது முருகன் அவர்களின் சொத்தாம். தனி உடைமையாம்.

சீமானும் அவரது ரசிகர்களும் விரைவில் ஏதாவது ஒரு முருகன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டாலும் வியப்பில்லை.

இவை எல்லாவற்றையும் விட அவர் அறிவித்துள்ள இன்னும் பெரிய அதிரடி “நடவேடிக்கை” “தமிழம்” என்றொரு மதத்தை அவர் தொடங்கியுள்ளதுதான்.

சதாம் உசேன் என்கிற ஒரு முஸ்லிம் இளஞர் முருகக் கடவுள் புகழ்பாடி ஷரியத்திற்கு விரோதமாகஇன்று இப்படி ஒரு ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றால் அது ஏதோ திடீரென நடந்த ஒன்றல்ல. அதன்பின் இத்தனை பின்புலங்கள் உள்ளன..

சீமான் இன்னும் மிச்சம் வைத்திருப்பது ஒன்றே ஒன்றுதான். அது “கர்வாபசி” அறிவிப்புத்தான்! சீமானின் கோமாளித் தனங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தால் அவர் இதையும் செய்யமாட்டார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அப்படியான ஏதாவது ஒரு சடங்கை இவர் தனது “தமிழம்” மதத்திற்காக அறிவித்தாலும் வியப்பில்லை

குமரன் தமிழ்க் கடவுள் என்றெல்லாம் இவர்கள் சொல்லும் விளக்கத்தில் பொருளில்லை. “ஸ்கந்தன்” என எல்லாமே ஏற்கனவே இந்துத்துவத்திற்குள் கொண்டு வரப்பட்டவைதான். இவர்கள் முருகக் கடவுளுடன் நிறுத்திக் கொள்வதும் இல்லை, “குழலூதும் கண்ணன்” என்றும் இவர்கள் அவ்வப்போது முழக்குவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கெப்படி விளக்கம் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. “அதெல்லாம் ஏற்கனவே விளக்கம் சொல்லியாச்சு சார். தமிழில் ‘மாயோன்’ எனச் சொன்னதுதான் கிருஷ்ணராம்” -என ஒரு நண்பர் பதிவு செய்கிறார்.

“குலதெய்வ வழிபாடு மீட்பு” என இவர் செய்யும் புரட்சியும்கூட ஏற்கனவே இந்துத்துவ அமைப்புகளால் மேற்கொள்ளப் பட்டவைதாம். மொத்தத்தில் இவருக்கு ‘ரோல் மாடல்’ இந்துத்துவாதான்.

தமிழரின் தனித்துவத்தை மீட்பது எனச் சீமான் பேசுவதெல்லாம் மிகப் பெரிய அபத்தம். முருகன்தான் தமிழர்களின் தனித்துவம் என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை. இவர் பேசுகிற எல்லாமே ஆமைக்கறி, இட்லிக்கறி கதைதான். இவர் எல்லாவற்றிலுமே அரைகுறைதான்.

சாதிக் கொடுமைகளுக்கு எதிரான பிரச்சினைகளில் நீங்கள் ஏன் தலையிடுவதில்லை என ‘விகடன்’ இதழ் சார்பாக ஒரு நேர்காணலில் கேட்டபோது, “அடித்துக் கொள்ளும் இருவருமே என் ரத்தம்தான். அங்கே போய் நான் யார் பக்கம் நிற்பது” எனச் சொல்லி ஆதிக்க சாதிக் கொடுமைகளைத் தான் கண்டு கொள்ளாததைப் பூசி மெழுகியவர்தான் சீமான் என்பதையும் நாம் எளிதில் மறந்துவிட முடியாது. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி வகையறாக்கள் கூட இப்படி தலித்கள் மீதான வன்முறைகள் எல்லாம் பெரிய பிரச்சினை இல்லை என வெளிப்படையாகச் சொன்னதில்லை.

ஒரு வரலாற்று உண்மையை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியவர்களாக உள்ளோம். முருகன் என்றோ கண்ணன் என்றோ தமிழர்கள் என்றைக்கும் ஒற்றை நம்பிக்கை எதற்குள்ளும் சிறைப்பட்டதில்லை. அனைத்துக் கருத்துக்கள், வழிபாடுகள், பண்பாடுகள் எல்லாவற்றிற்கும் உரிய இடத்தை அளிப்பதுதான் தமிழ்ப் பண்பாடாகவும் தமிழர்களின் வரலாறாகவும் இருந்து வந்துள்ளது.. சமணம், பௌத்தம், ஆருகதம் என ஒரே நேரத்தில் பல மதங்களுக்கும் தமிழகத்தில் இடம் இருந்தது.

தமிழ் இலக்கணங்கள் பெரும்பாலும் சமண, புத்த மதத்தவரால் இயற்றப்பட்டவைதான். ஐம்பெருங் காப்பியங்கள் அனைத்தும் சமண பௌத்த மதத்தவரால் இயற்றப்பட்டவையே. இன்றளவும் தமிழகத்தில் தோண்டும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகள் கிடைக்கின்றன. பீடர் ஷால்க், ஆனே மோனியஸ் போன்ற அறிஞர்கள் இன்று “தமிழ் பௌத்தம்” என்றொரு வகைமையையே வரையறுக்கின்றனர். பீட்டர் ஷால்க் பிரபாகரனுக்கு ஆதரவாக உலக அளவில் பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழின் ஆகச் சிறந்த இலக்கியமான திருக்குறளை உலகறியச் செய்தவர்கள் கிறிஸ்தவப் பாதிரிமார்கள். தமிழுக்கு அச்சுக்கலையைக் கொண்டு வந்தவர்களும் அவர்களே. “பெஸ்கி” முதலான கிறிஸ்தவப் பெயர்களை எல்லாம் “வீரமாமுனிவர்” என்பதுபோலத் தமிழாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். தமிழகமெங்கும் அடித்தளத் தமிழர்களுக்குக் கல்வி வெளிச்சம் அவர்கள் மூலமாகத்தான் கிட்டியது.

இந்தக் கிறிஸ்தவ அறிஞர்களின் வருகைக்கு முன்னர் தமிழை “நீச மொழி” என்றுதான் இங்கிருந்த பார்ப்பனீயம் வரையறுத்தது. சமஸ்கிருதத்தை அவர்கள் வேதங்களுக்கு உரிய மொழி “தேவ பாஷை” என்றார்கள். எல்லிஸ், கால்டுவெல் எனும் இரு கிறிஸ்தவ அறிஞர்கள்தான் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், துளு முதலானவை தனித்துவமானவை, அவற்றிற்கும் வடபுலத்தில் வழங்கப்படும் சமஸ்கிருத மொழிக் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிறுவியவர்கள். ஒப்பீட்டு மொழி இயல் ஆய்வு என்பதை அவர்கள் இதன் மூலம் உலகிற்கு அளித்தனர். இன்னொருபக்கம் வில்லியம் ஜோன்ஸ் போன்ற அறிஞர்கள்தான் சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என நிறுவி ஆரியம் வெளியிலிருந்து வந்த வரலாற்றை உலகிற்கு அறிவித்தனர். சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ் மற்Fறும் தென்னிந்தியப் பின்புலத்தை ஹீராஸ் பாதிரியார் முதலானோர்தான் முதன் முதலில் வெளிக் கொணர்ந்தனர்.

‘(மிகுராசு) மாலை’, ‘படைப்போர்’, “முனாசாத்து”, “மசாலா”, “கண்ணி”, “நொண்டி நாடகம்” என்பதுபோலப் பல புத்திலக்கிய வடிவங்களைத் தமிழுக்குத் தந்தவர்கள் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கை ஐந்துபெருந் தொகுப்புகளாக மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தெல்லாம் சீமானுக்கோ அவரது தம்பிகளுக்கோ தெரியாது. அடித்தளத் தமிழ் மக்கள், தலித்கள் முதலானோர் பெரிய அளவில் உயர் கல்வி வாய்ப்புகள் பெற்றது இளையான்குடி, திருச்சி, சென்னை, வாணியம்பாடி முதலான இடங்களில் நிறுவப்பட்டுள்ள முஸ்லிம் கல்லூரிகளால்தான் என்பதை சீமானோ இல்லை யாருமோ தமிழக வரலாற்றில் இருந்து அழித்துவிட முடியாது.

இவர் காவடி எடுக்கும் தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டொன்றில் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அக் கோவிலுக்குக் கொடை அளித்த இஸ்லாமிய வணிகனின் கல்வெட்டு இருப்பதை யாராவது சீமானுக்கும் அவரது தம்பிகளுக்கும் சொல்ல வேண்டும். திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு மசூதி பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சேரமான் பெருமாள் எனும் சேரமன்னன் நபிகள் நாயகத்தின் காலத்திலேயே (ஏழாம் நூற்றாண்டு) மெக்கா சென்று இஸ்லாத்தைத் தழுவினார் என்பது வரலாறு. ஆம் இஸ்லாத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு பதிமூன்று நூற்றாண்டு காலத்தியது. கீழக்கரையில் உள்ள ஒரு மசூதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இன்றளவும், மத வெறுப்பு தீவிரமாக ஆக்கப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் நாகூர், முத்துப்பேட்டை முதலான தர்ஹாக்களில் வந்து வழிபாடு செய்வோர்களில் அதிகம் பேர் இந்து அடித்தள மக்கள்தான் என்பதை சீமானுக்கும் அவரது தம்பிகளுக்கும் யாராவது சொல்லுங்கள்.

இப்படியான அனைத்து வரலாற்று அடையாளங்களையும் அழித்து ஸ்கந்த வழிபாடொன்றே தமிழின் அடையாளம் என நகைச்சுவை செய்து கொண்டு திரிபவர்தான் சீமான்.

வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்றுவரை சமயப் பொறை என்பதே தமிழர்களின் அடையாளம். அதுவே தமிழ்ப் பண்பாட்டின் ஆகச்சிறந்த பெருமை. இடைக் காலத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதெல்லாம் வரலாற்றின் சில வழி பிசகல்கள் தவிர அவை மட்டுமே தமிழர்களின் வரலாறு இல்லை. அதுவும்கூட எண்ணாயிரம்பேர் கழுவேற்றப் பட்டதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கதையாடல்களே. இன்றளவும் தமிழகம் முழுமையும்சுமார் நூறுக்கும் மேற்பட்ட சமண ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன. வடநாட்டு சேட்டுகள் கட்டியுள்ள நவீன ஆலயங்களை நான் சொல்லவில்லை. தமிழ்க் கோவிற் கலை வடிவில் கட்டப்பட்டு இந்து அறநிலையத்துறை பொறுப்பில் உள்ள சமண ஆலயங்களைச் சொல்கிறேன். உலகப் பெர்மறை எனக் கொண்டாடப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவ ரின் பாதகமலங்களை வந்தவாசிக்கு அருகுல் உள்ள பொன்னூர் மலையில் தமிழ்ச் சமணர்கள் வழிபட்டு வரும் வரலாறு சீமானுக்குத் தெரியுமா?

இந்தப் பாரம்பரியத்தை எல்லாம் ஆமைக் கறி, இட்லிக் கறி என்று தமிழின் தலைசிறந்த நகைச்சுவைப் பேர்வழியாகத் திரியும் சீமானின் இந்த “தமிழம்” – போன்ற நகைச்சுவைக் கதையாடல்களின் ஊடாக அழித்துவிட முடியாது. தமிழர்களின் அடையாளம் பன்முகப்பட்டது. ஒரு நெடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

இந்திய வரலாற்றின் இந்தப் பன்மைத்தன்மையை அழிப்பது ஒரு இந்துத்துவச் சதி. அதன் ஓரங்கமே சீமானின் இந்த ஆபத்தான அபத்தங்கள்.

சென்ற நூற்றாண்டு தமிழ் வரலாற்றில் இரு போக்குகள் உண்டு. ஒன்றின் எடுத்துக்காட்டு திரு.வி.க. நெற்றியில் விபூதியுடன் தோன்றும் உறுதியான சைவரான திரு.வி.க அவர்கள் தமிழின் பன்மைத்தன்மையை ஏற்றுக் கொண்டவர், திருக்குறளின் சமணப்பின்புலத்தை அங்கீகரித்தவர். ம.பொ.சி தான் இந்து எனச் சொல்வதற்குப் பெருமைப்படுவதாகச் சொல்லித் திரிந்தவர். தமிழன் என்பதைக் காட்டிலும் இந்து என்பது விரிந்த அடையாளம் என இந்துமத மாநாடொன்றில் அறிவித்தவர். சீமான் ம.பொ.சியை முன்நிறுத்துபவர் என்பது நினைவிருக்கட்டும்.

-அ.மார்க்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *