“நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட,

மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி; எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;

மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.

இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.”

இதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையாகும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக என்ற வார்த்தைகளில் சமூகத்துவ, சமய சார்பற்ற (socialism and secularism) ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமியும் வழக்கறிஞர் சத்ய சபர்வாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அவ்வழக்கானது தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  அமைப்புச் சட்டத்தின், நாட்டின் எதிர்காலத்தின் திசையை தீர்மானிக்கக்கூடிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. மேற்சொன்ன இரு வார்த்தைகளும் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு 45 ஆண்டுகள் கழிந்த நிலையில், தார்மீகமாக அமைப்புச் சட்டத்தை அங்கீகரிக்காத சித்தாந்தம் கொண்டவர்கள் இந்நாட்டை ஆளும் நேரத்தில் இவ்வாறு ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பது அந்த வார்த்தைகளை விட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது

இறையாண்மை ஜனநாயக குடியரசு என்பதை இறையாண்மை சமூகத்துவ சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு என மாற்றியமைத்தது இந்திரா காந்தியின் அரசாகும்.  அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவால் நீண்ட விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட அமைப்புச் சட்டத்தில் மேற்படி வார்த்தைகளை எவ்வித விவாதமும் இன்றி அன்றைக்கு இந்திரா காந்தி இணைத்தார். “சமூகத்துவ” (socialist) மற்றும் “சமயசார்பற்ற” (secular) என்றச்  சொற்கள் முகப்புரையில் அரசியலமைப்பு (42-வது திருத்தச் சட்டத்தின்) 1976 (The Constitution (42nd Amendment) Act, 1976) -ன் வாயிலாக உட்படுத்தப்பட்டதாகும். அமைப்புச் சட்டத்தின் 368 வது பிரிவின்படி முகப்புரையில் நாடாளுமன்றத்தின் மூலம் திருத்தங்களை செய்ய  முடியாது. ஆகவே 1976 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லாது என்ற வாதம் தவறான ஒன்றல்ல. ஆனால் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் நோக்கம் அதுதானா என எல்லோருக்கும் ஐயப்பாடு உள்ளது.

சமூகத்துவம் என்றச் சொல் உற்பத்தி, விநியோகம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் நடத்திப்பு நாட்டுடமை ஆக்கப்பட்ட அரசியல் முறையைக் குறிக்கும் என்றும் இந்தியாவில் சமூகத்துவ என்றச் சொல் ‘வாய்ப்பு சமத்துவம்’ அல்லது ‘மக்களுக்கு ஒரு மேலான வாழ்க்கை’ என்ற நாட்டின் குறிக்கோளை குறிக்கிறது என்றும் விளக்கியுள்ளனர். ஜனநாயகத்தைப் போன்று சமூகத்துவமும் மாறுபட்ட நாடுகளில் மாறுபட்ட ரீதியில் பொருள் விளக்கக் கூடியதாகும்.  இதனால் தெளிவுபடுத்துவது என்னவென்றால் சமூகத்துவத்தை பற்றி இந்தியாவிற்கு சொந்த கருத்துள்ளது என்பதேயாகும்.

சமய சார்பற்ற என்று சொல்லாடலின் மூலம் குறிப்பிடப்படுவது என்னவெனில், நாடு எந்தவொரு சமயத்தையும் நாட்டு சமயமாக அங்கிகரிக்காது, மற்றும் தனிநபர்களின் சமய, நம்பிக்கை அல்லது வழிபாடு உரிமையில் எந்தவிதத்திலும் தலையிடாமல் சமமாக மதித்தலே இதன் விளக்கமாகும்.  இதன் பொருள் நாடு சமயமற்றது என்றோ அல்லது இந்தியா சமயத்திற்கு எதிரானது என்றோ பொருள் இல்லை. சமயத்தின் காரியத்தில் நாடு நடுநிலையானதாகும். இது எந்தவொரு சமயத்தை பின்பற்றவோ பரப்பவோ செய்யாது, சமய நடத்திப்புகளில் தலையிடவும் செய்யாது. அதாவது, நாடு மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்புக்கு உட்பட்டதாகது. இது மனிதனுக்கும் மனிதனுக்கும் தொடர்புடன் உட்பட்டதாகும்.

மேற்சொள்ளப்பட்டுள்ள பொருளின்படி சமய சார்பற்ற  என்ற சொல் ஆரம்ப கட்டத்தில் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சேர்க்கப்படாவிட்டாலும் அமைப்புச் சட்டத்தின் ஆத்மாவில் அது உள்ளது என பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1973இல் கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும். அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பினும் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மாற்ற அதிகாரம் இல்லை என்பதுதான் அந்த தீர்ப்பாகும். திருத்தங்களை செய்வதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீக்கங்கள் செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படைகள் என்ன என்பது வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும் அமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்திலும் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளிலும் சமய சார்பற்ற நிலை அமைப்பு சட்டத்தின் ஒரு பாகமாகவே அமைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மினர்வா மில்ஸ் வழக்கில் 42வது திருத்தத்தை ரத்து செய்ய மறுத்தது உச்சநீதிமன்றம். 1976-ல் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் சமூகத்துவமும் சமய சார்பற்ற நிலையும் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளாகவே உள்ளது என்றுதான் உச்சநீதிமன்றம் அன்றைக்கு சுட்டிக்காட்டியது. நீதிக்கான இந்து நண்பர்கள் (Hindu friend for justice)  கொடுத்த வழக்கிலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இதையேதான் வலியுறுத்தியது. ஆகவே சமூகத்துவம், சமய சார்பற்ற என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டாலும் நீக்கப்படாவிட்டாலும் அவைகள் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைகளாகவே இருக்கும்.

ஆனால் சுப்பிரமணிய சுவாமியின் வாதம் வேறொன்றாகும். அமைப்புச் சட்ட சிற்பிகளின் சிந்தனையிலேயே சமூகத்துவமும் சமயச்சார்பற்ற கருத்தியலும் இருக்கவில்லை என்பதுதான் அவரது வாதமாகும். மேற்படி சொற்களை இணைத்ததன் மூலம் தேர்வு செய்வதற்கு உண்டான சுதந்திரம் குடிமக்களுக்கு  மறுக்கப்படுகிறது என அவர் வாதிடுகிறார். மேற்கத்திய கருத்தியலின் அடிப்படையில் செக்யூலரிசம் – சமயச்சார்பற்ற என்ற சொல்லாடலுக்கு அந்த பொருள் அளிக்கப்படலாம். ஆனால் குடிமக்களுக்கு முழுமையான சிந்தனை சுதந்திரத்தையும் நம்பிக்கை, வழிபாடு, நம்பிக்கை பரப்புரை ஆகியவற்றின் மீதான சுதந்திரத்தை மிகத் தெள்ளத் தெளிவான முறையில் உறுதி அளிக்கிறது நமது அமைப்புச் சட்டம். சமகால ஜனநாயக, நாடாளுமன்ற முறைமைகளில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கங்களில் இருந்து சிறுபான்மை சமூகங்களை பாதுகாப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களும் அதில் உண்டு. நாம் முன்னெடுக்கும் சமய சார்பற்ற நிலை என்பது மத நிராகரிப்பு அல்ல மாறாக மதச்சார்பின்மை தான். அரசுக்கு சுயமே எவ்வித மதமும் இல்லை என்பது தான் அதன் அடிப்படை. எந்த ஒரு மதத்தை ஏற்றுக் கொள்வதற்கும் மத நம்பிக்கை இல்லாமல் வாழ்வதற்கும் உண்டான உரிமையை அது அனைவருக்கும் அளிக்கிறது.

42வது சட்ட திருத்தம் தேவையா தேவையில்லையா என்பதை கடந்து அமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவங்கள் அதில் உள்ளபடியே காப்பாற்றப்பட வேண்டும். நாட்டில் நாம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சனை என்பது அமைப்புச் சட்டம் அல்ல, அதை இல்லாமல் ஆக்குவதற்கு உண்டான முயற்சிகள் தான். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற பிரெஞ்சு புரட்சியின் அடிப்படைகளை உள் கொண்டு அண்ணல் அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்திய அமைப்புச் சட்டம் இந்த நாட்டில் குறிப்பாக தலித்துகளுக்கு பெருமளவு பாதுகாப்பையும் உரிமையையும் அளித்துள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இல்லாமல் ஆக்குவதன் மூலமாக மட்டுமே இந்தியாவில் இந்து ராஷ்டிராவை கட்டமைக்க முடியும் என சனாதன கும்பல் உறுதியாக நம்புகிறது. இந்தியாவை இந்துராஷ்டிராவாக அறிவித்து அதன் அமைப்புச் சட்டமாக மனு சாஸ்திரத்தை கொண்டு வருவது தான் அவர்களின் உச்சகட்ட நோக்கமாகும். அவர்கள் உருவாக்க நினைக்கும் மண்ணில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமைகள் உட்பட எவ்வித உரிமைகளும் இருக்காது. தலித்துகள் சனாதன காலகட்டத்தை போல அடிமைகளாக மாற்றப்படுவார்கள்.

அதைச் செய்வதற்கு தடையாக இருக்கும் இந்திய அமைப்புச் சட்டத்தை, மெல்ல மெல்ல அதன் அடிப்படைத் தன்மைகளை மாற்றியமைத்து பலவீனப்படுத்துவதன் மூலமாக இறுதியில் அதை குழி தோண்டி புதைப்பதற்குண்டான முயற்சியில்தான் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த நாட்டை அதன் அடிப்படைத் தன்மைகள் இருந்து மாற்றியமைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து நின்று பாசிச பாஜக சங்பரிவார் கும்பலை துணியுடன் களத்தில் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்.

2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு செயல்பட வேண்டும்.

K.S. அப்துல் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *