இந்திய சுதந்திரத்திற்காக தங்களுடைய இருப்பின் சதவீதத்தை விட மிக அதிகமான உயிர், பொருள் தியாகங்களை செய்தவர்கள் முஸ்லிம்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் சூழல் மிக மோசமான ஒன்றாக மாறிவிட்டது. பிரிவினையும் பிரிவினையை தொடர்ந்து நடந்த கலவரங்களும்
சரியான தூர நோக்கில்லாத தலைமைத்துவமும் முஸ்லிம்கள் வாழ்க்கையை மிகப் பெரும் சிக்கலுக்கு ஆளாகி விட்டன.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசாங்கமானாலும் மற்ற அரசுகளும் முஸ்லிம்களை ஒரு வாக்கு வங்கிகளாகவே பார்த்தார்கள். அவர்கள் வாழ்க்கைச் சூழலை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதை குறித்தான கவலை அவர்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் 2005இல் மன்மோகன்சிங் தலைமையிலான ஒன்றிய அரசு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை குறித்து ஆய்வு செய்வதற்காக வேண்டி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில்
2005 மார்ச் 9 அன்று ஒரு ஆணையத்தை அமைத்தது.

ராஜேந்திர சச்சார் அவர்கள் இதற்காக வேண்டி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கூடிய 90 மாவட்டங்கள், 338 நகரங்களில் ஊடாக ஆய்வுகளை செய்து 2006 நவம்பர் 17 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 2006 நவம்பர் 30 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

அதில் முஸ்லிம்களுடைய வாழ்க்கைச் சூழலை குறித்தான மிக தெளிவான விரிவான அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் பதிவு செய்திருந்தார்.

கல்வி நிலையை பொருத்தளவில் இந்தியாவினுடைய தேசிய படிப்பறிவு 64.8 என்கின்ற பொழுது முஸ்லிம்களுடைய கல்வி நிலை 59.1% ஆக இருக்கிறது. பட்டப்படிப்பை பொருத்தளவில்
20 வயதுக்கு உட்பட்டவர்களில் தேசிய அளவில் 7% எனில் முஸ்லிம்களில் அது
4% மட்டுமே உயர் கல்வியைப் பெறுகிறார்கள்.

கிராமங்களிலே 31% முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். நகரங்களைப் பொறுத்தவரை 27 சதவீதம் பேர் வறுமையில் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலே உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. குடிநீர், பள்ளிக்கூடங்கள், கழிப்பிடங்கள், சாக்கடை வசதிகள் என்று எதுவும் போதிய அளவில் செய்யப்படவில்லை என்பதையும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய அதிகார மையங்களை பொறுத்தளவில் வெறும் 4 சதவீத முஸ்லிம்கள்தான் அதிகார மையங்களில் பதவிகளைப் பெற்று இருக்கிறார்கள் என்பது உள்பட
மிக விரிவான அறிக்கையை அவர்கள் பதிவு செய்தார்கள். அதுமட்டுமின்றி அந்த அறிக்கையின் ஊடாக தீர்வாக பல்வேறு ஆலோசனைகளையும் அவர் முன்வைத்திருந்தார். முஸ்லிம்கள் வாழக்கூடிய பகுதிகளில் திறமை வளர்ப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் வாழக்கூடிய மையங்களில் வங்கிகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் ஊடாக கல்விக்கடன், வியாபாரக் கடன்கள் தாராளமாக வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் பெண் குழந்தைகளுக்காக தனியாக கல்விக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும், விடுதிகள் நடத்தப்பட வேண்டும். கல்வி உதவித்தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டும். வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக தனியாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்கள் உரிமை மையங்கள், வழக்காடு மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் காவலர்கள் அதிகமாக நியமிக்கப்பட வேண்டும் போன்ற ஆலோசனைகளை நீதிபதி இராஜேந்திர சச்சார் வழங்கியிருந்தார்.

துரதிருஷ்டவசமாக அமைக்கப்படும் ஆணையங்களின் அறிக்கைகள் எல்லாம் வெற்றுத் தாள்களில் அடங்கிவிடுகிறது. எப்போதும் போலவே ராஜேந்திர சச்சார் உடைய ஆலோசனைகளையும் ஒன்றிய அரசு வெற்றுத் தாள்களில் மட்டும்தான் ஒதுக்கி வைத்திருக்கிறது.

சில மாநிலங்களில் நீதிபதி ராஜேந்திர சச்சாருடைய அறிக்கையை தொடர்ந்து குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கேரளாவில் மூத்த அரசியல்வாதி பாலோலி முகமது குட்டியின் தலைமையிலே குழு அமைக்கப்பட்டு கேரளாவில் முஸ்லிம்களுடைய வாழ்வியல் சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒரு சில சலுகைகளும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் மற்ற மாநிலங்களில் அதற்கான முன்னெடுப்புகளோ நகர்வுகளோ பெரிய அளவிலே செய்யப்படவில்லை.

நீதிபதி ராஜேந்திர சச்சார் அறிக்கையை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் ஒரு விவாதம் நடந்தது. ஆனால் அதற்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. அன்றைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி இந்திய ஒன்றியத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்கள் இது குறித்து மிகுந்த கவலை பட்டு இதற்காக வேண்டி பேராசிரியர் சித்தீக் ஹசன் தலைமையிலே ஒரு பாரிய திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். இன்றைக்கும் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்குவங்காளத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை வசிக்கும் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தார்சாலைகள், ஏன், கழிப்பிட வசதிகள் கூட செய்யப்படவில்லை என்பதுதான் சித்திக் ஹஸன் தலைமையிலான குழு ஆய்வு செய்த பொழுது கிடைத்த அறிக்கைகள். 30 வருடத்திற்கும் மேலாக அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது என்பது கவனத்திற்குரியது.

நீதிபதி ராஜேந்திர சச்சார் உடைய அறிக்கையை, ஆலோசனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் ஓரளவு முன்னேற்றத்தை முஸ்லிம் சமூகம் பெற்றிருக்க முடியும். ஆனால் அவற்றை குறித்து எந்த ஒன்றிய, மாநில அரசுகள் பெரியதாக கவனிக்கவில்லை.

இன்றைக்கு கேரளாவில் பாலோலி அறிக்கையைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் கிருத்தவர்களை
திருப்திப்படுத்துவதற்காக வேண்டி முஸ்லிம்களுடைய சலுகைகளை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக கம்யூனிஸ்டுகள் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் தான் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். இந்த நாட்டிலே சலுகைகள் என்பது வெறுமனே பொருளாதாரத்தை அடிப்படையாக மட்டுமே செயல்படுத்தக்கூடாது என்பதுதான் அம்பேத்கர் உள்ளிட்டோர் உடைய ஆலோசனையாக இருந்தது. காரணம் ஆண்டாண்டு காலமாக பல்வேறு அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளான மக்களுக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே நாம் சலுகைகளை தீர்மானிக்க கூடாது. அவற்றை சமூகவியல் பார்வையில் முன்னெடுக்க வேண்டும். சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துவதற்குண்டான வழிமுறைகள், செயல்பாட்டு திட்டங்கள், பொறிமுறைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றுதான் சமூகவியல் நிபுணர்கள் கருத்து.

அந்த அடிப்படையில் இன்றைக்கு முஸ்லிம்களுடைய சமூகவியல் பங்களிப்பு என்பது பெரிய அளவில் பின்தங்கி இருப்பது என்பது எதார்த்தமான உண்மை. அரசு பதவிகளில், பெரும்பான்மையான நிறுவனங்களில் முஸ்லிம்களுடைய சதவீதங்கள் குறைந்த அளவில்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே அவற்றை தீர்மானிப்பதில் பொருளாதார ரீதியான அடிப்படையை முன்வைக்கக்கூடாது. சமூக ரீதியாக பின்னடைவை தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

அதற்கு நேரெதிராக முஸ்லிம்களுடைய இருப்பை இன்னும் குறைக்கக்கூடிய விதத்திலே கம்யூனிஸ்டுகள் போன்றவர்களே செயல்படுவது என்பது பெரும் வருத்தத்தை உருவாக்கக்கூடிய ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது. இவ்விஷயத்தில் சச்சார் ஆணைய அறிக்கையும் ஆலோசனைகளையும் முனைப்போடு செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முஸ்லிம் சமூகம் விரைவுபடுத்த வேண்டும்.

ஒன்றிய அரசு முஸ்லீம் விரோத அரசு என்பதால் அவர்கள் அதைக் குறித்து கவலை கொள்ள மாட்டார்கள். ஆகவே மாநிலங்களில் இருக்கக்கூடிய அரசுகளை இவற்றுக்காக வேண்டி நிர்ப்பந்தப்படுத்தி வேண்டும். உரிய செயல் திட்டங்களோடு முஸ்லிம்கள் முன்னே செல்லவில்லை என்று சொன்னால் அடுத்த இருபது வருடங்களுக்கு பிறகு இன்னொரு நீதிபதியின் தலைமையிலான குழு சச்சார் ஆணைய அறிக்கையையே மீண்டும் பிரசுரிக்க வேண்டிய ஒரு சூழல்தான் ஏற்படும் என்பதை முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் சமூகங்களுடைய வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்த அரசுகளும் சிந்திக்க வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டும்.

K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *