சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஆர் பிரியா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண்   மேயராக பதவி ஏற்றுள்ளார். முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேயராக இருந்த நாற்காலியில் புராதன வட சென்னை பகுதியைச் சார்ந்த சகோதரி அமரப் போகிறார். இந்திய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மேயராக ஒரு தலித் பெண் பொறுப்பு ஏற்பது என்பது நிச்சயமாக திராவிட அரசியலின் மிகச்சிறந்த பங்களிப்புதான். இன்றைக்கு இந்தியாவில் விவாதத்திற்கு ஆளாகி வரும் திராவிட அரசியல் அஜண்டாவின் முன்னெடுப்பாகத்தான் இவற்றை காண வேண்டும்.  முரண்களும் விவாதங்களும் இருப்பினும் தமிழ்நாட்டில் முன்னிலைப்படுத்தப்படும் சமூக நீதியின் தொடர்ச்சியாகத்தான் ஆர். பிரியா உள்ளிட்ட தலித் சமூக மக்களின் முன்னேற்றத்தை நாம் அவதானிக்க வேண்டும். தீவிர வலதுசாரி அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல் முன்னெடுப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதற்குண்டான செய்தியும் இதில் அடங்கியிருக்கிறது.

அனைத்து சமூக மக்களுக்கும் அரசியல் பங்களிப்பும் அதிகாரப் பகிர்வும் என்பது வெறும் ஒரு தேர்தல் பிரச்சார மேடை பேச்சாக மற்றுமின்றி செயற் களத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்கு மக்கள் எந்தளவு ஆதரவு அளிப்பார்கள் என்பதன் வெளிப்பாடுதான் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெற்ற வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கூட கொங்கு மண்டலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை என கொண்டாடப்பட்ட நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் அதை மாற்றி அமைத்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் பகுதிகளில் கூட பெரும் தோல்வியை அதிமுக பெற்றிருக்கிறது. நிழல் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருந்த எஸ் பி வேலுமணியின் வீடு அமைந்திருக்கும் வார்டு கூட திமுக வசமாகி உள்ளது. தேர்தல் ஜனநாயகம் பணத்தால் வேட்டையாடப்பட்டது என்ற குற்றச்சாட்டு பொய் இல்லை என்றாலும், அதிமுகவும் அதிலிருந்து விதிவிலக்கான அல்ல என்பது எல்லோரும் அறிந்தது. அதனடிப்படையில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அடைந்துள்ள வெற்றி கடந்த 10 மாதங்களில் அவர்கள் முன்னெடுத்த செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் கூட.  சலசலப்புகள் இருப்பினும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வதில் மு க ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாசிச பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இந்தியாவில் உள்ள பிற மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களுக்கு மு க ஸ்டாலின் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். இந்த முன்மாதிரி ஒருங்கிணைப்பு அகில இந்திய அளவிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேவேளையில் இந்த வெற்றி திமுகவினரின் அகம்பாவத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடாது. இந்த வெற்றியை பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அடாவடிகளில், பெரும் ஊழல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனில் கொடுத்த வெற்றியை அடுத்த முறை பறிக்கவும் மக்களுக்கு தெரியும்.

தலித் சமூக மக்களை மேயர்களாகவும் துணை மேயர்களாகவும் உட்கார வைத்து அழகு பார்க்கும் திரு மு க ஸ்டாலின் அந்த அதிகாரத்தை சிறுபான்மை சமூக மக்களுக்கும் வழங்கியிருந்தால் சமூகநீதி கண்ணோட்டம் முழுமை அடைந்திருக்கும். தமிழ்நாட்டில் உள்ள 148 நகராட்சிகளில் 13 நகராட்சிகளிலும் 487 பேரூராட்சிகளில் 24 ஊராட்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு தலைவர்களாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகிறோம். வரவேற்கிறோம். முஸ்லிம் கட்சிகளில் உள்ள நபர்களை விட திமுகவில் உள்ள முஸ்லிம்களுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற குரல்களின் தொடர்ச்சியாகத்தான் இதை பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் இருபத்தியோரு மாநகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட மேயராகவும் துணை மேயராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டாதது பெரும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். பாசிச  பாஜகவிற்கு எதிராக முஸ்லிம் கட்சிகளைக் கூடப் புறக்கணித்து திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமான ஆதரவை முஸ்லிம் சமூகம் அளித்து வருவதை மு க ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவிலிருந்து விலகி நின்றும், அதே நேரத்தில் சிறுபான்மை சமூகங்களின் ஒரு பகுதி ஆதரவையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெற்றதன் காரணத்தினால்தான் திமுக தோல்வியை சந்தித்தது. இதை கவனத்தில் கொண்டு முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் திமுக அளிக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளும் திமுகவின் கூட்டணியில் இடம்பெறும் அதேவேளையில் அவர்கள் திமுகவின் சிறுபான்மைப் அணிகளாக மாறிவிடக்கூடாது.  எந்த விதத்திலும் அடிமைப்பட்டுவிடாமலும் தங்களுடைய தனித்தன்மைகளை இழந்துவிடாமலும் காயிதே மில்லத்தைப் போல உறுதியுடன் துணிச்சலுடன் நம்பிக்கையுடன் களமாட வேண்டும். தத்தமது தனித்தன்மைகளை இழந்துவிடுவோம் எனில் பிறகு தமக்கான அங்கீகாரம், அடையாளம் எதுவும் இல்லாமல் போகும். பிறகு முதன்மை கட்சிகள் போடும் பிச்சைகளை பொறுக்கிக் கொண்டு வரும் நிலைமைதான் முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்படும். துரைமுருகன் போன்ற அகங்காரிகளின் மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

எனவே, திரு மு க ஸ்டாலின் தனது திராவிட மாடல் முன்னெடுப்பில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்களையும் உள்ளடக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். சிறுபான்மை சமூக தலைவர்களும் தங்களுக்கான அரசியலை ஒருங்கிணைந்து, திட்டமிட்டு முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

கே.எஸ் அப்துல் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *