LOADING

Type to search

திரைப்படம் விமர்சனம்

வல்லாதிக்கத்திற்கெதிரான போராட்டம் கோலி சோடா 2

Share

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் காலா படத்தை காண சென்றோம். ஆனால் அந்த படத்திற்க்கான டிக்கெட் இல்லாததால் வேறு வழியின்றி கோலி சோடா 2 படத்தை பார்ப்போம் என திரையரங்கிற்குள் சென்றோம்.முதல் 15 நிமிடங்கள் முடிந்த பின்பு உள்ளே சென்றாலும் இதனால் பெரிய நட்டம் இல்லை, அப்படி என்ன இந்த படத்தில் இருக்க போகிறது என எண்ணிக்கொண்டு தான்  படத்தை பார்க்க அமர்ந்தோம். ஆனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது அதன் திரைக்கதை,வசனம் என எல்லாம் என்னை கட்டிப் போட்டு விட்டது.

மூன்று கதை களம், அந்த மூன்று பேருக்கும் வழிகாட்டி ஆலோசனை வழங்குபவராக ஒருவர் என படம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்றில் ஒருவர் நேர்மையாக உழைக்க வேண்டும் என்று வாழக்கூடியவர், அவரது நேர்மைக்கு பல பரிசுகள் கிடைத்துள்ளன. மேலும் தான் வாழ்வில் உயர வேண்டும், அதுவும் நேர்மையான முறையில் பொருளீட்டி என்கிற இலட்சியத்தோடு இருக்கிறார்.வட்டி வாங்கி தன் தொழிலை மேம்படுத்துவதில் அவருக்கு விருப்பமில்லை.வட்டி வாங்குவதும்,கொடுப்பதும் தவறு என்கிற நல்லெண்ணம் அவருக்கு. வட்டி மிகப்பெரிய சுரண்டல். அது வாங்குவதும் கொடுப்பதும் நேர்மையற்றது என வாதிடும் அவருக்கு அரசியலையும்,வட்டியையும் தொழிலாக செய்யும் ஒருவரால் பிரச்சனை ஏற்படுகிறது, அதற்கெதிராக போராடுகிறார்.

கீழ் சாதி இளைஞனை இடைநிலை சாதியை சேர்ந்த பெண் காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு அந்த பெண் சார்ந்த ஆதிக்க சாதியினரால் எதிர்ப்பு வருகிறது. ஒரு கட்டத்தில் பெரியார்,அம்பேத்கர், காந்தியை சாட்சியாக வைத்து காவல் நிலையத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருந்த வேலையில் சாதி ஆதிக்கவாதிகள் அங்கும் அவர்களை பிரிக்கிறார்கள். நம் சாதிக்காக உயிரை விட்டவன் உன் அப்பன் என்கிற கேவலத்தை அந்த பெண்ணிடம் கூறி காவல் நிலையத்திலிருந்து அடித்து இழுத்து செல்கிறார்கள். மனதால் இணைந்தவர்களை பிரிக்கிறது சாதி ஆணவம். அந்த  சாதியத்தை எதிர்த்து போராடுகிறான் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த இளைஞன். இது இரண்டாம் கதை.

மூன்றாவதாக காட்டப்படும் இளைஞன் மிகப்பெரிய ரவுடி ஒருவனிடம் அடி ஆளாக வேலை பார்க்கிறார். அவருக்கு ஒரு பெண்ணிடம் காதல் மலரவே இந்த தொழிலை விட்டு ஒரு நல்ல தொழிலை செய்ய வேண்டும் என ஒருமனதாக அந்த ரவுடி கூட்டத்தினரிடமிருந்து பிரிந்து வேறு ஒரு வேலையை தேடிக் கொண்டிருக்கையில் அந்த ரவுடி கும்பலால் ஒரு சிறுமி அநியாயமாக படுகொலை செய்யப்படுவதை பார்த்த அவர் அந்த கும்பலுக்கெதிராக கிளர்ந்தெழுகிறார்.

இவர்கள் மூன்று பேரின் போராட்டம் தனி தனியாக தொடங்கினாலும் முடிவில் ஒன்றாகவே முடிகிறது. அவர்கள் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றார்களா அல்லது வெற்றி பெற தொடர்ந்து போராடினார்களா என்பதை படம் தெளிவாக காட்டியுள்ளது.

பணத்தாலும் சாதியாலும் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு கீழ் தான் இருக்க வேண்டும்,அவர்கள் மேலே வரக்கூடாது, அவ்வாறு வர நினைத்தால் அவர்களை ஒடுக்குவோம் என்கிற வல்லாதிக்க சக்திகளை எதிர்த்து போராட வேண்டும். அது ஒன்றுப்பட்ட போராட்டமாக இருக்க வேண்டும் என்கிற கதை அம்சத்தோடு உருவாகப்பட்டுள்ளது கோலி சோடா 2.

மக்களை நசுக்கி வாழ வேண்டும் என நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தனி தனியாக இருந்தாலும் அவர்கள் நோக்கம்,கொள்கை எல்லாம் ஒன்று தான் என்பதை பார்வையாளர்களுக்கு புரிய வைக்கிறது. ஏழ்மையை அழிக்க சொன்னால் ஏழைகளை அழிக்கிறார்கள் போன்ற அரசை விமர்சிக்கும் வசனங்கள் படத்தில் ஆங்காங்கே தெளிக்கவிடப்பட்டுள்ளன. இது படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. சாதி உருவாக்கத்தையும்,அதன் பெயரால் உழைப்பாளிகள் குறிப்பாக விவசாயிகள் ஒடுக்கப்பட்டதையும்,அவர்கள் கோயிலுக்குள் நுழைவதை எப்படி தடுத்தார்கள்,அதை யார் செய்தார்கள் என்பதையும் அந்த ஒடுக்கப்பட்ட இளைஞனின் வாயிலாக இன்றைய இளைஞர்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

நல்ல கதை அம்சத்தோடு உருவாக்கப்பட்ட இப்படத்திலும் சர்வ சாதாரணமாக எல்லா படத்திலும் காட்டுவது போல அனைத்து தீமைகளுக்கும் தாயாகிய மதுவிடம் அந்த வழிகாட்டி  ஆலோசனை கேட்பது போன்ற காட்சிகள் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. சமூக தீமைக்கு எதிரான களத்தில் மதுவும் அவற்றுள் ஒன்று தான் என்பதை இப்படத்தின் இயக்குனர் உணர்ந்திருக்க வேண்டும். இனி அவருடைய படத்தில் மது காட்சிகளை சேர்க்காமல் விடுவதோடு மட்டுமல்லாமல் அதை அழிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்த வேண்டும்.

மிகப்பெரிய தவறான மதுவை ஆலோசகராக்கியது மற்றும் சில இடங்களில் தென்பட்ட சிறு பிழைகளை களைந்து விட்டு பார்த்தோமானால் கோலி சோடா 2 சமூக அக்கறையுள்ள அல்ல, சமூக அவலத்தை எடுத்து சொல்லும் மற்றொரு படம். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் .படத்தின் இயக்குனர் விஜய் மில்டனுக்கு வாழ்த்துக்கள். இவரை போன்றவர்கள் அதிகம் உருவாக வேண்டும் தமிழ் சினிமாவில்.

முஜாஹித்

Tags:

1 Comments

  1. ஒடுக்கப்படும் மக்கள் சினிமா போன்ற ஊடகங்களை கையிலெடுப்பது ஒரு ஆயுதமென்றால் அதனை விமர்சனத்திற்குள்ளாக்குவது இன்னொரு ஆயுதம்….ஆக்கப்பூர்வ ஆயுதங்கள் கையில் பேனா வடிவிலேயே சுழலட்டும்…..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *