கர்நாடகாவில் உருவான ஹிஜாப்  பிரச்சனையொட்டி இந்தியாவில் நடந்து வரும் செயல்பாடுகளை கண்டித்தும் விமர்சித்தும் டிவிட் இட்ட அமெரிக்க தூதரை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.  இயல்பானதும் கூட. மதச்சுதந்திரம் தொடர்பான விஷயத்தில் அமெரிக்காவின் சர்வதேச தூதராக இருக்கும் ரசாத் ஹுசைன், ஹிஜாப் தடை என்பது மதச் சுதந்திரத்தின் மீதும் பெண்களின் மீதும் நடைபெறும் வரம்பு மீறல் என குறிப்பிட்டிருந்தார். இதைக் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி அரிந்தம் பக்ஷி, விஷயம் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது என்றும் இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளும் அமைப்புச் சட்டமும் இவ்விஷயத்தை உரியமுறையில் கையாளும் என்றும் பதிலளித்தார்.

 இந்திய நாட்டின் உட் பிரச்சினைகளை குறித்து வெளியிலிருந்து அறிக்கைகள் அளிப்பது சரியானதல்ல என்றும் அவர் கூறினார். அதிகாரப்பூர்வமான இடத்தில் இருந்துகொண்டு அளிக்கும் பதில் என்பதால் அது இப்படித்தான் இருக்கும். அதே நேரத்தில் அந்த அலுவலரின் பதிலில் பல முரண்பாடுகளும் உள்ளதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரியானாவின் ட்வீட்டும் மத துவேஷ பிரச்சாரங்களுக்கு எதிராக அமெரிக்க தூதர் போட்ட ட்வீட்டும் வெளியுறவுத்துறை அமைச்சரின் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளானதன் காரணம் புரியாத ஒன்றல்ல.

இங்கே பிரச்சனைகளைத் தீர்ப்பதை விட நாட்டிற்கும் ஆளும் கட்சிக்கும் இழிபெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்தான் இவர்களுடைய அக்கறை உள்ளது. வெளிநாடுகளின் தலையிடல் தேவையற்றது என்று நாம் வாதிக்கும் அதே வேளையில், சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலும் ஐநா சபை சார்ட்டரிலும் நாம் கையெழுத்திட்டுள்ளதையும், அவற்றை மீறக்கூடிய வகையில் நமது செயல்பாடுகள் அமையக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது நாட்டின் உள்விவகாரங்களில் அந்நியர்கள் தலையிடக்கூடாது என்று சொல்வதற்கு நமக்கு உரிமை உள்ளதைப் போன்று, சர்வதேச அளவில் நடைபெறும் விஷயங்களைக் குறித்து தங்களது மறுப்பையும் கருத்தையும் சொல்லுவதற்கு யாருக்கும் தடையில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு அமெரிக்காவில் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிராக மத வெறுப்பு பிரச்சாரங்களும் தாக்குதல்களும் நடந்தபோது நாமும் அதை விமர்சித்துள்ளோம்.

அதே நேரத்தில், தனது குடிமக்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுகளும் அநியாயங்களும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை அந்தந்த நாடுகளுக்கு உண்டு. விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழாத வண்ணம் கவனத்துடன் நாம்தான் செயல்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக சமீப காலமாக சர்வதேச அமைப்புகளும் ஊடகங்களும் ஏன் நமது நட்பு நாடுகளும் கூட நம்மை  விமர்சிக்கின்ற போது, அதில் உள்ள உண்மைகளை குறித்து சுய ஆய்வு செய்து  திருத்தங்கள் செய்வதற்கு பதில் அவர்களை குற்றம் சொல்லி மௌனிகளாக்குவதற்கான  வேலையைத்தான் செய்கிறோம். இதன்மூலம் விமர்சனங்களை மேலும் அதிகப்படுத்துவதற்கான வேலைகளை தான் இந்திய அரசு செய்கிறது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 2020இல் தான் மத வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் FBI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சதர்ன் பாவர்டி லா சென்டர், குளோபல் இன்வெஸ்டிகேட் ஜர்ணலிசம் நெட்வொர்க், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ரிபோர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ், ஜனசைட் வாட்ச் போன்ற பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இயக்கங்களும் தங்களுடைய அறிக்கைகளில் இந்தியாவில் உள்ள சூழலை சுட்டிக் காட்டுகின்றது.  அதை வெறும் அறிக்கைகளின் மூலமாக மட்டுமே நம்மால் எதிர்கொள்ள இயலாது.  சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்திற்காக வேண்டி ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஜன சைட் வாட்ச் உட்பட 17 அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் நோம் சாம்ஸ்கி உட்பட பல்வேறு பிரமுகர்கள் புள்ளி விவரங்களோடு இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கின்ற உண்மைகளை விவரித்துக்  கூறினார்கள்.

இந்தியா தனது அடையாளங்களையும் அமைப்பு சட்டத்தையும் இழந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இதனுடைய பொருள். இந்திய அரசின் மனசாட்சியை தட்டி எழுப்புவதுதான் எங்களின் நோக்கமே ஒழிய வெற்றுத் தலையிடல் அல்ல என அவர்கள் கூறுகிறார்கள். பலரும் அச்சப்படக் கூடிய சூழல் இந்தியாவில் இல்லை என்று நிறுவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்குதான் உண்டு.  அதற்குத் சுயதிருத்தங்களும் அமைப்புச் சட்ட நடவடிக்கைகளும் அத்தியாவசியத் தேவையாகும். அநீதிகளும் அக்கிரமங்களும் அநியாயங்களும் நடைபெறுகின்ற பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் அக்கிரமக்காரர்களுக்கு உரிய தண்டனையும் அளிக்கப்படுகின்ற போதுதான் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதை அங்கீகரிக்க முடியும். ஹரித்துவாரில் இனப்படுகொலைக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களையும் ஒன்றிய அமைச்சர்களும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் கண்டிக்கவில்லை என நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் குற்றம் சாட்டுகிறது.  இந்த நிலையில் நம்முடைய ஜனநாயக அமைப்புகளை குறித்த வெளியுறவுத்துறை அதிகாரிகளின் வாய்ப்பந்தல் பேச்சுக்கள் வெற்றுத்தனமானவையே. நிச்சயமாக நம்முடைய அமைப்பு சட்டத்திற்கும் நீதிமுறைமைகளுக்கும் மற்ற அமைப்புச் சட்ட நிறுவனங்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தேவையான ஆற்றல் உண்டு. நாட்டின் தலைமை அவற்றிற்குள் தலையீடு செய்யாமல், அதற்கு அனுமதி அளித்தால் போதும்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *