குடியரசு தின அணிவகுப்பு தேவையில்லாத ஆணி, பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கிற ஒரு நாள் கூத்து என்பதை விளக்கி இரண்டு நாட்கள் முன்பு ஒரு பதிவு எழுதினேன்.

நாம் பண்டிகை கொண்டாடுவதில்லையா, அதுபோலத்தான் இதுவும் என்று வழக்கம்போல சில அரைவேக்காடுகள் வந்தன. பண்டிகை என்பது அவரவர் சொந்தக் காசில் (அல்லது சமூக நிர்ப்பந்தங்களால் கடன் வாங்கிய காசில்) அவரவர் விருப்பப்படி நாமே கொண்டாடுவது. ஆனால் இந்தக் குடியரசு தினம் என்பது நம் வரிப்பணத்தில், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தேவைகளுக்காகவும் நம் உழைப்பிலிருந்து பிடுங்கப்பட்ட பணம் சுயவிளம்பரங்களுக்காக வீணடிக்கப்படுவது. அப்படியும் அந்த அணிவகுப்பு விழாவினால் சாதித்தது / சாதிப்பது என்ன என்று பார்த்தால் ஒரு மயிரும் கிடையாது. அந்த அணிவகுப்பில் காட்சிப் படுத்தும் விஷயங்களுக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தாலும் எதுவும் கிடையாது. எப்படி என்பதை பிறகு பார்ப்போம். இப்போது ஊர்திகளைப் பற்றிப் பார்ப்போம்.

குடியரசு தின அணிவகுப்பே வேண்டாம் என்கிறபோது எந்த மாநிலத்தின் ஊர்தி இருந்தால் என்ன, எந்த மாநிலத்தின் ஊர்தி இல்லாவிட்டால் என்ன என்றும்கூட சில அரைவேக்காடுகள் கேட்கக்கூடும். அதற்காக ஒரே பதில் – குடியரசு தின அணிவகுப்பே வேண்டாம் என்று அறிவித்து விடட்டும், நானும் ஊர்திகள் குறித்துப் பேச மாட்டேன்.

முதலில், இந்த ஊர்திகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றன என்று பார்ப்போம். மைய அரசின் பாதுகாப்புத்துறைதான் ஊர்திகளைத் தேர்வு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்து (தீம்) முன்வைக்கப்படும். அதற்கேற்ப மாதிரிகளை அனுப்ப வேண்டும். பாதுகாப்பு அமைச்சகம் நியமிக்கும் வல்லுநர் (!) குழு அவற்றிலிருந்து தேர்வு செய்யும். இந்த ஆண்டுக்கான மையக் கருத்து – இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள். விடுதலைப் போராட்டம், விடுதலைப் போரில் பங்கேற்றவர்கள், சுதந்திரத்துக்குப் பிந்தைய முன்னேற்றங்கள், சாதனைகள் என காட்சிப்படுத்தலாம்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அனுமதிக்கப்படவில்லை என்பது சர்ச்சை ஆகியிருக்கிறது. அதற்குச் சொல்லப்படும் அபத்தக் காரணங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.29 மாநிலங்களிலிருந்து கோரிக்கைகள் வந்தன. அதிலிருந்து 12 மட்டுமே தேர்வு செய்தோம்.
• அலங்கார ஊர்திகள் பங்கேற்பது என்ன விழா? குடியரசு தின விழா! குடியரசு தினம் என்றால் என்ன? இந்தியா 1947இல் சுதந்திரம் பெற்றது. ஆயினும் அப்போதும் மவுன்ட்பேட்டன்தான் கவர்னர் ஜெனரலாக இருந்தார். 1935இல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம்தான் இந்தியாவின் சட்டமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு, இந்தியாவுக்கென ஓர் அரசியல் சட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் நிறைவேறுகிறது. பல மாநிலங்களையும் உள்ளடக்கிய கூட்டாட்சித் தத்துவத்தை இந்தியா ஏற்கிறது. ஆக, குடியரசு தினம் என்னும்போது மாநிலங்களின் பிரதிநிதித்துவத்துக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். 28 மாநிலங்களும் 9 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுமாக 37 இருக்கையில் அதில் பாதிகூட இல்லை – வெறும் 12 ஊர்திகளுக்கு மட்டுமே மட்டுமே அனுமதி என்று கூறுவது திமிர்த்தனம் அன்றி வேறென்ன?

கொரோனா காரணமாக அதிக ஊர்திகள் அனுமதிக்கப்படவில்லை.
• ஊர்திகள் காரணமாகத்தான் கொரோனா பரவுகிறதா? அந்த 12 ஊர்திகளும் இல்லாமல் இருந்திருந்தால் கொரோனாவே ஒழிந்திருக்கும் அல்லவா? அதிலும் இந்த ஆண்டின் மையக் கருத்து, இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள். இந்தியா முழுமையும்தானே விடுதலை பெற்றது? தேர்வு செய்யப்பட்ட 12 மாநிலங்கள் மட்டுமா விடுதலை பெற்றன? மற்ற ஆண்டுகளில் இல்லாவிட்டாலும்கூட, இந்த ஆண்டு எல்லா மாநிலங்களின் ஊர்திகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். விடுதலைக்காகப் போராடியது ஒன்றிய அரசல்ல, மக்கள். மக்கள் வசிப்பது பல மாநிலங்களில். விடுதலையின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுவது என்றால் எல்லா மாநிலங்களின் விடுதலைப் போராட்டத்தையும் காட்சிப்படுத்த வேண்டும். எங்களுக்குப் பிடித்த ஓரிரு மாநிலங்களை மட்டுமே காட்சிப்படுத்துவோம் என்று கூறுவது தடித்தனம்.

அத்தனை மாநிலங்களின் ஊர்திகளும் பங்கேற்பதானால் நீளமாகும், நேரம் போதாது.
• குடியரசு தினம் என்பதே மக்களின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தவே. ராணுவ ஊர்திகள் எல்லாம் தேவையே இல்லை. ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தினங்கள் இருக்கின்றன. அங்கே காட்டிக் கொள்ளலாம். கமிஷன் வாங்கிக்கொண்டு கொள்ளை விலையில் வெளிநாடுகளிடமிருந்து விலைக்கு வாங்கிய ஆயுதங்களை விளம்பரப்படுத்துவதில் என்ன பெருமை? அதேபோல, துறைசார் விளம்பர ஊர்திகளும் தேவையே இல்லை. அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு எல்லா மாநிலங்களுக்கும் இடம் தரலாம். சரி, அவையும் இடம் பெறுகின்றன என்றே வைத்துக் கொள்வோம். 50-60 ஊர்திகள் இருந்தாலும்கூட எல்லா ஊர்திகளும் ஒரே இடத்தில் நின்று கொண்டே இருப்பதில்லை, போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான ஊர்வலமாக இருந்தாலும் அத்தனைக்கும் இடம் தரும் அளவுக்கு நீ…..ள…..மான சாலைகள் அங்கே உண்டு. ராஜபாட்டையில் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே துவங்கி, இண்டியா கேட் அடைந்து, சுற்றிக்கொண்டு சுப்ரீம் கோர்ட் வழியாக பிரகதி மைதான் வரை 50 மட்டுமல்ல, எத்தனை ஊர்திகள் இருந்தாலும் அத்தனையும் இடம்பெற முடியும்.

கலை, நாட்டியம், சிற்பம் போன்ற பல துறை வல்லுநர்களைக் கொண்ட குழுதான் தேர்வு செய்கிறது.
• தேர்வுக் குழுவின் லட்சணம்தான் பல்லிளிக்கிறதே! இந்த ஆண்டுக்கான மையக் கருத்து – இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள். ஆங்கிலத்தில் India@75. இதனை ‘ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்று கொண்டாடுகிறார்களாம். (அது என்ன ‘அம்ரித் மகோத்சவ்’ என்று தெரியவில்லை. இந்தி!) அப்படியானால், இந்தக் குடியரசு தினத்துக்கு விடுதலைப் போராட்ட வீர்ர்களை, விடுதலைப் போராட்டத்தை, சுதந்திர இந்தியாவின் சாதனைகளை காட்சிப்படுத்துவது சரிதானே? தமிழ்நாட்டு ஊர்தியில் பாரதியார், வ.உ.சி, வேலு நாச்சியார் இருந்தார்கள். பிறகு ஏன் தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிக்க வேண்டும்?


பிரிட்டிஷாருக்கு எதிரான இந்த மூவரின் வீரத்தையும் பாராட்டி மோடியே ட்வீட்டுகள் போட்டிருக்கிறார். அப்புறம் என்ன பிரச்சினை? மேற்கு வங்க ஊர்தியில் நேதாஜி இருந்திருக்கிறார். அதை ஏன் நிராகரிக்க வேண்டும். ஆக, தேர்வுக் குழுவுக்கு இவர்கள் யார் என்றே தெரியாது என்றுதான் அர்த்தமாகிறது. ஆட்சியில் இருக்கும் பாஜகவினருக்கு, அவர்களின் பிறப்பிடமான ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு சுதந்திரப் போராட்டமோ, தியாகங்களோ தெரியாது என்பதில் வியப்பில்லை. அவர்கள் மன்னிப்புக்கடித மன்னர்கள் ஆயிற்றே! ஆனால் தேர்வுக் குழுவினரும் அவ்வளவு தத்திகள்தான் என்பது தெளிவாகிறது

வ.உ.சி. ஒரு வியாபாரி. அவர் சுதந்திரப்போராட்ட வீரர் அல்ல.
• தேர்வுக் குழுவில் இப்படிச் சொன்னவன் யாரென்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். அவனை எங்கே பார்த்தாலும் தமிழர்கள் செருப்புமாலை அணிவித்து கௌரவிக்க வேண்டும்.
தமிழர்களில் குறைந்தபட்சக் கல்வி கற்றவர்களுக்கும்கூட இந்தியாவின் முக்கியமான விடுதலை வீரர்களைத் தெரியும். அவர்கள் வட இந்தியர்களா தென்இந்தியர்களா என்றெல்லாம் தமிழர்கள் பார்த்ததில்லை. இன்றும் தமிழகத்தில் திலகர், நௌரோஜி, காந்தி, படேல், பகத் சிங், அபுல் கலாம் ஆசாத், நேதாஜி என எந்தப் பிரமுகர் பேரைச் சொன்னாலும் தெரியும். இவர்கள் பெயரில் சாலைகள் உண்டு, குடியிருப்புப் பகுதிகள் உண்டு. ஆனால் தமிழகத்துக்கு வெளியே (தில்லியின் சில சாலைகள் தவிர) எந்த ஊரிலும் ராஜாஜி சாலை, வ.உ.சி. சாலை, சத்தியமூர்த்தி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர் என்று வைப்பதில்லை. ஏனென்றால், இவர்களுக்குத் தெரியவே தெரியாது. அவ்வளவு ஏன், தெற்கே நான்கு மாநிலங்கள் உள்ளன, நான்கு மொழிகள் உள்ளன என்பதே வடக்கத்தியர்களுக்குத் தெரியாது. எல்லாமே சவுத், எல்லாமே மதராசி. இப்படிப்பட்ட கூமுட்டைகள்தான் தேர்வுக் குழுவில் இருந்திருப்பார்கள். அதனால்தான் வ.உ.சி. ஒரு வியாபாரி என்று சொல்லியிருக்கிறார்கள்.

மையக்கருத்துக்குப் பொருத்தமான ஊர்திகளைத்தான் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும். தமிழ்நாட்டு ஊர்தி அதை நிறைவு செய்யவில்லை.
• தேர்வுக்குழு எப்படிப்பட்ட தத்திகளைக் கொண்டதாக இருந்திருக்கும் என்பதற்கு உதாரணம், தேர்வு செய்யப்பட்ட சில மாநிலங்களின் ஊர்திகள். இந்த ஆண்டுக்கான கருத்து என்ன? இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள். கர்நாடக மாநில ஊர்தியில் இடம்பெற்றிருக்கும் அனுமாருக்கும் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? உத்திரப்பிரதேச மாநில ஊர்தியில் இருப்பது காசி விஸ்வநாதர் கோயில். உத்தராகண்ட் மாநில ஊர்தியில் பத்ரிநாத் கோயில். சத்தீஸ்கர் ஊர்தியில் மாடு! ஒடிஷா முன்வைத்தது 1817இல் பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற பைக்கா புரட்சி. வங்கம் முன்வைத்தது நேதாஜி. தமிழ்நாட்டின் வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார், ஒடிஷாவின் பைக்கா புரட்சி, வங்கத்தின் நேதாஜி இவர்களுக்கும் இந்திய விடுதலைக்கும் தொடர்பு இல்லை என்றால் – விடுதலைக்கும் மாட்டுக்கும் கோயில்களுக்கும் அனுமாருக்கும் என்ன தொடர்பு?

வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களை எல்லாம் மக்களுக்குத் தெரியாது.
• அட கூமுட்டைகளே… யாரைத் தெரியாதோ அவர்களைத் தெரிய வைப்பதுதானே முக்கியம். வ.உ.சி.யையும் வேலு நாச்சியாரையும் தெரியாது, சரி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸையுமா மக்களுக்குத் தெரியாது? ஆக தேர்வுக் குழுவில் இருந்த தத்திகளுக்குத்தான் இவர்களைத் தெரியாது என்று தெரிகிறது. பேஸ்புக்கின் காபி-பேஸ்ட் சங்கிகளைப் போன்றவர்கள்தான் தேர்வுக் குழுவிலும் இருந்திருப்பார்கள்.

தேர்வுக்குழுதான் முடிவு செய்தது, இதில் அரசியல் ஏதும் கிடையாது.
• தேர்வுக்குழு எப்பேர்ப்பட்ட தத்திகள் குழு என்பதை முந்தைய பத்தியில் பார்த்து விட்டோம். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஊர்திகள் எவை? குஜராத், உத்திரப் பிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு கஷ்மீர், ஹரியாணா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், கர்நாடகா, அருணாசலப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா. இவற்றில் பஞ்சாப், மகாராஷ்டிரா தவிர மற்ற எல்லாம் பாஜக ஆளும் மாநிலங்கள். அதிலும் சில விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்கள்.


நிராகரிக்கப்பட்டவை எவை? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், தில்லி, ஒடிஷா. இவை எல்லாமே பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள். இந்த ஆண்டுக்கான மையக் கருத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாத – கோவில்களும் மாடும் அனுமாரும் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களின் ஊர்திகளுக்கு இடம் உண்டு. பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வீர்ர்களை சித்திரிக்கும் ஊர்திகளுக்கு இடமில்லை என்றால், இது அரசியல் இல்லாமல் வேறென்ன?

தமிழ்நாடு அரசின் வாகனங்கள் கடந்த ஆண்டில் இடம்பெற்றுள்ளன. இதில் அரசியல் ஏதும் கிடையாது. ஆம், கடந்த ஆண்டுகளில் சிலவற்றில் பங்கேற்றது உண்மைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகள் என்று குறிப்பிட்டதில் எல்லாமே தமிழ்நாட்டில் மறைமுகமாக பாஜகவின் கைப்பொம்மையாக இருந்த எடப்பாடி கும்பலின் ஆட்சியில்தான். 2015இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் தமிழ்நாட்டு ஊர்திக்கு இடமிருக்கவில்லை.

காங்கிரஸ் காலத்திலும் சில ஊர்திகளுக்கு அனுமதி இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இப்போது இருப்பதுபோல காழ்ப்புணர்ச்சிகளுடன் நடக்கவில்லை. (2014க்கு முந்தைய தரவுகள் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் அதைப்பற்றி கருத்துச் சொல்ல முடியாது.) ஆனால் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்த 2015 முதலாகவே இந்த சர்ச்சை துவங்கி விட்டது. 2015இல் அரசியல் சார்ந்த பார்வையுடன் மோடி அரசின் புறக்கணிப்புக் குளறுபடிகள் துவங்கியபோதே இதைக் கண்டித்துப் பதிவு எழுதியிருந்தேன். (அதன் சுருக்கம் மூன்று நாட்களுக்கு முன்னால் தமிழ் ஹிண்டு நாளிதழில் வந்த கட்டுரையில் இடம்பெற்றது.) 2015இல் என்ன நடந்தது?
2015-ல் தமிழ்நாட்டு ஊர்தி இருக்கவில்லை. பாஜக ஆட்சியில் இல்லாத எந்த மாநிலத்தின் ஊர்தியும் அப்போது இடம்பெறவில்லை. பிஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு, கேரளம், இமாச்சல பிரதேசம், நாகாலந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய எந்த மாநிலங்களின் ஊர்திகளும் இடம்பெறவில்லை. டெல்லி உட்பட எந்த ஒன்றியப் பிரதேசமும் இடம்பெறவில்லை. 16 மாநிலங்களின் ஊர்திகள் மட்டுமே பங்கேற்ற அணிவகுப்பை இந்தியக் குடியரசின் முழுமையான பங்கேற்பாகக் கருத முடியுமா? இது கூட்டாட்சியின் தத்துவத்தை பிரதிபலிக்கவில்லை.

2015இல் இதுபோல எதிர்ப்புக் கிளம்பியபிறகு, 2016இல் சில மாநிலங்களுக்கு இடம் தரப்பட்டது. இப்போது மீண்டும் ஒன்றிய அரசின் நாட்டாமைத்தனம் கூடி விட்டது.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 12 மாநிலங்களின் ஊர்திகள் தவிர, ஒன்றிய அரசுத் துறை சார்ந்த ஊர்திகளும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 1. பண்பாட்டுத்துறை ஊர்தி விவேகானந்தரை முன்னிறுத்தும். 2. பொதுப்பணித்துறை நேதாஜியை சித்திரிக்கும். (நேதாஜி பிறந்தது மேற்கு வங்கம். அந்த மாநிலம் முன்வைத்தது நேதாஜி. ஆனால் அது கூடாதாம்! பொதுப்பணித்துறைக்கும் நேதாஜிக்கும் என்ன தொடர்பு?) 3. கல்வித்துறை முன்வைப்பது புதிய காவிக் கொள்கை.

ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ் – விடுதலையின் 75 ஆண்டுகள் என்ற பெயரில் வரப்போவது எல்லாம் என்னவென்று தெரிகிறதா? கடந்த ஆண்டும் உத்திரப்பிரதசம் வந்தது – ராமர் கோவிலுடன். இந்த ஆண்டு மீண்டும் வருகிறது காசி விஸ்வநாதர் கோவிலுடன். காரணம் தேர்தல் அரசியல். இத்துடன் பத்ரிநாத் கோயில், ஜம்மு-கஷ்மீர் ஊர்தில் மாதா வைஷ்ணவிதேவி கோயில், கோமாதா, அனுமார், காவிக்கொள்கை எல்லாம் சேர்த்துக்கொண்டால் …. இது குடியரசு தினமா இந்துத்துவ தினமா?

இந்தத் தேர்வு முறை எப்போதுமே குளறுபடிதான். குடியரசு தினம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டதைக் கொண்டாடும் தினம். அதாவது, இந்தியா என்னும் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்டாடும் தினம், ஆனால் அத்தகைய ஒரு விழாவில் எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகளை அனுமதிக்கலாம் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஒன்றிய அரசு கருதுவது கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்க மாட்டோம் என்ற திமிர்த்தனம்தான் என்பதே இதன் பொருள்.

வேறெந்த மாநிலம் பாஜகவினரின் திமிரை அடக்குகிறதோ இல்லையோ, தமிழ்நாடு அடக்கும். அடக்குவோம்.

பி.கு. – எனக்குத் தெரிந்த வரையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளில் தமிழ்நாட்டின் ஊர்தி இன்றுவரை முதல் பரிசு பெற்றதே இல்லை.

நன்றி : ஷாஜஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *