இஸ்லாம் அல்லது முஸ்லிம் சமூகம் தன் நிலையிருந்து கீழ் நோக்கி பயணிக்கின்ற போது அதனை அதனுடைய உண்மையான இடத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த உலகத்தில் பல்வேறு அறிஞர்களும் தலைவர்களும் பாடுபட்டுள்ளனர். உமர் இப்னு அப்துல் அஜீஸ் துவங்கி சஹீத் ஹசனுல் பன்னா, சைய்யது அபுல் அஃலா மௌதூதி வரை அந்த பட்டியல் மிக நீளமானது. இந்த முஜத்திதுகள் மேற்கொண்ட தஜ்தீத் வேலைகளின் காரணத்தினால்தான் இஸ்லாம் இன்னமும் உயிர்த்துடிப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சஹீத் ஹசனுல் பன்னா, சைய்யது அபுல் அஃலா மௌதூதி மற்றும் சஹீத் செய்யது குதுபின் சிந்தனை நீட்சிகள்தான் இன்றைய நவீன இஸ்லாமிய உலகை, அறிஞர்களை ஆட்கொண்டுள்ளது.

                                                                                                          இன்று உலகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தஜ்தீத் – மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தேசச் சூழல்களுக்கு தக்கவாறு அவைகள் திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. ராஷிதுல் கனூஷி, சயீது ரமலான், சங்கீதி, எர்துகான் போன்ற மூன்றாம் தலைமுறை இஸ்லாமிய அறிஞர்களையும் தலைவர்களையும் கொண்டுதான் இன்றைய முஸ்லிம் உலகம் இயங்குகிறது..

மறுமலர்ச்சி என்பது ஒரு அமைப்பின் பெயரல்ல. அது ஒரு இயக்கம். ஒரு சித்தாந்தம், மனோநிலை. தாம் வாழும் காலகட்டத்தின் மனிதர்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் தீரமான போராட்டம். உள்ளீடான மாற்றத்தின் அடையாளம். சமரசமில்லாத சுயவிமர்சனம். தயக்கமும் தடையுமில்லாத சுய ஆய்வு.

தாங்கள் வாழும் காலகட்டத்தில் மறுமலர்ச்சி பணிகளுக்கு தலைமை தாங்கிய  முன்னோர்களான முஜத்திதுகள் அவர்களுடைய காலகட்டத்தில் கிடைத்த உபகரணங்களை பயன்படுத்திக் கொண்டுதான் மாற்றத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள். அச்சடி இயந்திரங்களும் நவீனக்கல்வியும் மெகா போனும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த சமூகத்தில் இருளை விரட்டி வெளிச்சத்தை பரப்ப பயன்பட்ட உபகரணங்கள். அதற்காக அதை மட்டுமே என்றும் பின் தொடர்வோம் என்ற நிலை கூடாது. நவீன காலத்தில் நாம் நேரிடும் பிரச்சனைகளை நவீன காலத்தின் மொழியில் நம்மால் பேச முடியவில்லையெனில் நம்மால் மறுமலர்ச்சியை ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது. 

நவீன உலகில் வாழும் மனிதர்கள் நேரிடும் பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் குர்ஆனையும் நபி மொழிகளையும் வழிகளையும் அடிப்படையாக் கொண்டு தீர்வுகளை காண்பதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய மறுமலர்ச்சிப்பணி. நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட வழிமுறைகளும் தீர்வுகளும் சமகாலப் பிரச்சனைகளுக்கு பலபோதும் தீர்வாக அமையாது. முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளும் அளிக்கப்படும் தீர்வுகளும் நீதி, நன்மை, தார்மீகங்களை  அளவுகோலாக கொண்டிருக்க வேண்டும். மதத்தின் மேலாடைகளை அணிந்து கொண்டு சமூகத்தில் நடக்கும் சுரண்டல்களையும் அக்கிரமங்களையும் எதிர்க்க வேண்டும். ஆனால் அதையும் தாண்டி செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்கேற்றபடி இயக்கத்திற்குள் அமைப்பியல் சூழலை மாற்றியமைக்க வேண்டும்.

காலகட்டத்தின் மாற்றங்களையும் மாறிவரும் சூழ்நிலைகளையும் ஒரு சமூக ஆய்வாளரின் நிபுணத்துவத்துடன் பார்த்து மனித வாழ்க்கையின் சுமைகளை குறைப்பதுதான் மறுமலர்ச்சிப்பணிகளின் அடிப்படை. காலமும் உலகமும் மாறியதை அறிந்துகொள்ளாமல் முன்பு சொன்னதையும் செய்ததையும் தொடர்வோமானால் அதை மறுமலர்ச்சி என்று அழைக்க இயலாது. மதத்தின் அடிப்படைகள் மாற்றமில்லாதவைகளே. ஆனால் அதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வேளையில் நாம் எதிர்கொள்ளும் சமூகம் அடைந்துள்ள மாற்றங்களையும் பழக்கங்களையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். வாழும் மண்ணின், காலகட்டத்தின் இயல்புகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்

                                                                                                        ஒரு இயக்கம் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப தன்னை தகவமைக்க வேண்டுமெனில் அது முதலில் தன்னைத்தானே சுய ஆய்விற்கு உட்படுத்தியே ஆகவேண்டும். பொதுவாக கடந்த காலங்களில் இயங்கிய இயக்கங்கள் குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு இறுகிய கட்டமைப்பிற்குள்ளேயே செயல்பட்டு வந்துள்ளன. சிலரது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு ஏன், சில நேரங்களில் புனிதப்படுத்தப்பட்டு பின்பற்றப்படு கின்றன. அப்படியான நடவடிக்கைகள் இன்னமும் சில தூய்மைவாத அமைப்புகளில் கடைபிடிக்கப்படுகின்றன அல்லது அந்த தலைவர்களால்  கட்டமைக்கப்பட்டுள்ளன.

எந்த இயக்கத்தில் தலைமையும் தலைமையின் கருத்துக்களும் புனிதப்படுத்தப்படுகிறதோ அங்கு எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த இயலாது.

ஷேக் ராஷிதுல் கனூஷி போன்ற நவீன இஸ்லாமிய இயக்கத்தலைவர்களும் அறிஞர்களும் இறுகிய இயக்கச் சூழலை உடைத்து தங்களது இயக்கங்களை வெளிப்படையான விமர்சனங்களுக்கும் ஆய்வுகளுக்கும் தொடந்து உட்படுத்துகின்றனர். அதனால் காலகட்டத்தின் மாற்றங்களை உட்கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றியமைத்து முன்னேறிக்கொண்டிருக்கிறனர். இன்றைய ஜனநாயக காலத்தில் இது மிகவும் அவசியமானது. நாட்டில் ஜனநாயக நடைமுறைகளின் அவசியத்தை உரத்து முழங்கும் இயக்கங்கள் தங்களுக்குள் விமர்சனங்கள் வருகின்ற போது அதை தடை செய்யாமல் வரவேற்க வேண்டும். தங்களது அமைப்பை ஜனநாயகப்படுத்த வேண்டும்.

கொள்கைகள் எந்த அளவிற்கு முக்கியத்துவமோ அதே அளவிற்கு அதை நடைமுறைபடுத்துவதற்கான யுக்திகளும் மிக முக்கியத்துவம் மிக்கதாகும். குறிப்பாக இன்றைய அரசியல் சார்ந்த அணுகுமுறைகளில் இதை நாம் கடைபிடித்தே ஆக வேண்டும். எல்லா எதிரிகளும் ஒன்றல்ல. யாரை முதலில் வீழ்த்த வேண்டும், எவரை வீழ்த்த எவருடன் கைகோர்க்கப் போகிறோம் என்பது மிக முக்கியம். குறைஷிகளை வீழ்த்த யூதர்களுடன் ஒப்பந்தம் போட்டார் நபி(ஸல்). அல்லாஹுவினால் சபிக்கப்பட்ட சமூகமான யூதர்களுடன் இணைந்து செயல்பட நபி(ஸல்) தயாரானது அதி முக்கியமான யுக்தியாகும்.  இதைத்தான் இன்றைக்கு அரசியல் களத்தில் கனூஷி, எர்துகான் போன்றவர்கள் கவனத்துடன் கைமேற்கொள்கின்றனர்.

அனைவரையும் ஒருங்கினைத்து கொண்டுள்ள செயல்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். பல்வேறு கொள்கை முரண்பாடுகளும் கருத்து மாறுபாடுகளும் இருந்தாலும்  அவற்றை ஒப்புக்கொண்டும் அதைக் கடந்தும் அரவணைத்தும் செல்லும் பக்குவம் வேண்டும். கருத்து முரண்படுகிறார்கள் எனபதற்காக மதத்தை விட்டும் அமைப்பை விட்டும் வெளியேற்றும் தீர்ப்புகளை தருவதை தடுக்க வேண்டும். ஆலோசனைகள் செய்தும் அரவணைத்தும் செல்கின்ற ஒரு சகோதரத்துவ மனப்பான்மையின் யதார்த்த வடிவம்தான் “முஸ்லிம் உம்மத்” என்பது.  பல்வேறு சிந்தனைகள் உலாவரும் இக்காலகட்டத்தில் முழுமையான  ஒற்றுமையை உருவாக்க இயலாது. எனினும் கருத்து முரண்பாடுகளை கடந்து காலத்தின் தேவைகளை உணர்ந்து ஒருங்கிணைந்த குறைந்தபட்ச செயல்திட்டங்களையாவது முன்னெடுக்க வேண்டும்.

முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையை குறித்து பேசுகின்ற வேளையில் அச்சிந்தனை “இனவாதம்” என்ற கிணற்றை நோக்கி சென்றுவிடக்கூடாது. நீதியின் அடிப்பட்டையில் நிலைப்பாடுகள் இருக்க வேண்டும். வகுப்புவாதத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக செயல்படும் அனைவரையும், ஏன் ஒட்டுமொத்த ஜனநாயகவாதிகளையும்  ஒருங்கிணைத்து முன்னேற வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உண்டு. அதற்கும் ஒருபடி மேலாக சமூக ஒற்றுமையை விட மானுட ஒற்றுமைக்கு முன்னுரிமை தரவேண்டும். மண்ணில் நிலவும் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் ஜனநாயக விழுமங்களை உறுதிப்படுத்த வேண்டும். பன்முகத்தன்மையையும் ஜனநாயக மாண்புகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு உன்னத மார்க்கம்தான் இஸ்லாம் என்ற உண்மையை உலகிற்கும் சமூகத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு  இஸ்லாமிய இயக்கத்திற்கு உண்டு.

மறுமலர்ச்சியை குறித்து விவாதிக்கின்ற போது அதில் எங்கேயும் இடம்பெறாத ஒரு பிரிவு முஸ்லிம் சமூகத்தில் பாதியாக உள்ள பெண்கள்தான். அதுமட்டுமின்றி முந்தைய காலத்தைவிட இன்றைக்கு பெண்களின் மீது அதிகமான தடைகள் விதிக்கப்படுகிறது. அறிவைத் தேடுவதிலோ உயர்கல்வி நிலையங்களுக்கு படிக்கச் செல்வதிலோ ஒருதடையுமில்லை. ஆனால் அரசியல்-சமூக பொறுப்புக்களின் விஷயத்தில் அவர்களின் நிலை பரிதாபகரமானது.  சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நமது பெண்களின் அந்தஸ்து எங்கே?  எதற்கு, இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்தும் அமைப்புகள், இயக்கங்களில் கூட எத்துனை பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று ஆய்ந்தால் விடை பூஜ்யம்தான். மத அமைப்புகளில் சொல்லவே வேண்டாம். பெண்களின் விஷயத்தை பேசும் ஷரியத் மாநாடுகளின் மேடைகளில் பெண்களுக்கு இடம் கொடுங்கள் என்று சொன்னதிற்காக கொதித்து எழுந்து விட்டது உலமா கூட்டம்.

மார்க்கத்தின் பெயரால் மார்க்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக அவர்கள் சுரண்டப்படுகின்ற போது கூட அதை அவர்களால் எதிர்க்க முடிவதில்லை. முஸ்லிம் பெண்களின் நியாயமான உரிமைகளை சுட்டிக்காட்டுகின்ற போதெல்லாம் மற்ற சமுதாயங்களில், அமைப்புகளில் உள்ள  பெண்களின் நிலையை ஒப்பீடு செய்து நழுவிக் கொள்கின்றனர். பெண்களை அதிகாரப்படுத்துவது என்று பேசுகின்ற போது பழமைவாதிகளும் முற்போக்காளர்களும் ஆணாதிகாரத்துடனே செயல்படுகின்றனர். இஸ்லாம் வழங்கிய உரிமைகளையும் அதிகாரங்களையும் முழுமையாக வழங்காமல் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஒருபோதும் சாத்தியமல்ல. நபி(ஸல்) காலத்திற்கு பிறகு முஸ்லிம் உலகில் தவிர்க்கவியாலாத இஸ்லாமிய ஆளுமையாக அன்னை ஆயிஷா(ரழி) திகழ்ந்தார்கள். மிகச்சிறந்த குர்ஆனிய அறிஞர்களாக திகழ்ந்த இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு உமர்(ரழி) போன்றவர்கள் ஆலோசனை கேட்கும் அளவிற்கு அறிவுப்புலமையும், ஓட்டகப் போருக்கு தலைமை ஏற்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்களாக  அன்னை ஆயிஷா(ரழி) திகழ்ந்தார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் உலகில் எடுத்துச் சொல்லக் கூடிய பெண் அறிஞர்களும் இல்லை. ஆளுமைத் திறன் மிக்க தலைவர்களும் இல்லை. பெண்களை அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆண் தலைவர்களும் இல்லை. இஸ்லாமிய இயக்கங்களும் இந்த நிலைமைக்கு விதிவிலக்கல்ல. முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை பற்றி வானளாவ பேசுபவர்கள் தங்கள் இயக்க கட்டமைப்பிற்குள்ளே எந்த அந்தஸ்தையும் தர முனைவதில்லை. துருக்கியிலும் துனீஷியாவிலும் அதிகமான பெண்கள்  இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  தற்போதுதான் சிறிய மாற்றங்கள் இந்தியாவிலும் துளிர்விட ஆரம்பித்துள்ளன. ஜமாஅத்தே இஸ்லாமி கேரளா கிளையில் பெண்களை செயலாளர்களாக நியமித்துள்ளனர்.                                                                       

பொதுவாக இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் சமூக சேவைகளில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். நிச்சயமாக இது வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும். சமூக சேவையின் அனைத்து தளங்களிலும் முன்னேறிச்செல்ல வேண்டும். ஆனால் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னுரிமை சமூக சேவையா என்று கேள்வி எழுப்பினால் நபிமார்களின் வழியில் நின்று கொண்டு இல்லை என்றே பதிலளிக்க முடியும்.

சமூக சேவையை கடந்து சமூக நீதிக்கான போராட்டமே இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமையாக இருக்க முடியும். வாழ்வுரிமைகள் அபகரிக்கப்பட்ட,  நீதி மறுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளையும் நீதியையும் பெற்றுத் தருவதற்கான போராட்டம். அதை நோக்கிய செயல்திட்டம். அதற்குத்தான் இஸ்லாமிய இயக்கங்கள் முழுதான முன்னுரிமையை தரவேண்டும்.  சமூக சேவைகளை செய்வதற்கு ஆயிரமாயிரம் அமைப்புகள் வரும். ஆனால் சமூக நீதிக்கான போராட்டத்தை குர்ஆனின் பூமியில் நின்று நபி வழியின் வெளிச்சத்தை கையிலேந்தி இஸ்லாமிய இயக்கங்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மறுமலர்ச்சிக்காக உலகமும் நமது சமூகமும் ஏங்கிக் கொண்டிருக்கும் காலமிது.

சின்னச்சின்ன விஷயங்களிலும் உப்புச்சப்பில்லாத விவாதங்களிலும் கவனத்தை பறிகொடுத்து விடாமல் தொலை நோக்கு பார்வையும் இலட்சியத்தின் பக்கம் நம்மை வழி நடத்தும் ஆற்றலும் கொண்ட தலைமைதான் நமது இப்போதைய தேவை. காலத்தின் அழைப்பை கவனித்து  அவர்கள்தான் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க இப்பொறுப்பை  ஏற்றெடுக்க வேண்டும். 

மக்களுக்காக எழுந்து நிற்கும், நீதிக்கு சாட்சிகளாக அவதரிக்கும் ஒரு சமூகத்திலிருந்துதான் அந்த புரட்சிப்படை புறப்படும் என்ற புனித இறைவேதத்தின் விதி நமது காலத்திலும் நிஜமாகட்டும் என்று பிரார்த்திப்போம். எதிர்பார்ப்போம்.

கே.எஸ்.அப்துல் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *