பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டவர்களை உள்ளடக்கியுள்ள வானவில் கூட்டணியான தமிழ்த்தேசிய அரங்கில், அதிகம் கொடிகட்டிப் பறப்பது திராவிட எதிர்ப்பு பேசும் அணியினர்தான். திராவிட இயக்க அரசியலின் வழியிலேயே தமிழ்த்தேசியம் காணவிரும்புபவர்கள், திராவிட இயக்கத்தை அங்கீகரித்தனர்.

ஆனால், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்று சொல்பவர்கள், இடதுசாரிகள் என பல முனைகளிலிருந்து கிளம்பிவந்தவர்கள் தமிழ்த்தேசிய அரங்கில் குழுமியிருந்தாலும், பிரதானமான அணி என்பது திராவிட இயக்கத்தை நிராகரிக்கும் அணியாகவே இருக்கிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி. (இந்தக் கட்டுரையில் அவர்களை நிராகரிப்புவாத தமிழ்த்தேசியர்கள் என்றே அழைக்கவிரும்புகிறேன்).

நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியர்கள் இன்று ஒரு பெரிய முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்று முட்டுச்சந்து. இன்றைய திமுக, மதிமுக போன்ற கட்சிகளை எதிர்கொள்வதற்காக ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையுமே நிராகரித்த அந்த ஒருதரப்பு தமிழ்த்தேசியவாதிகள் அந்த முட்டுச்சந்தைவிட்டுவிலகி வரலாற்றின் சரியான பாதையில் பயணிக்கவேண்டும் என்றால் அது சுலபமானது அல்ல.

நீட் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் நீட் திட்டத்தை எல்லாத் தமிழ்த்தேசியவாதிகளும் எதிர்க்கிறார்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாட்டிலேயே மருத்துவக் கல்வியும் சுகாதாரத் துறையும் மிகச்சிறப்பாக இருந்துவருகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எனவேதான் இன்று ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

ஆனால், யார் அந்த மிகச்சிறந்த மருத்துவக் கல்வி, சுகாதாரக் கல்வி முறையை இங்கே உருவாக்கினார்கள், அதற்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அரசியல் செல்நெறிகளுக்கும் இடையில் என்ன உறவு என்பதைப் பற்றி நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியவாதிகள் வாய்திறக்க மறுக்கிறார்கள்.

வரலாற்று நிராகரிப்பு தமிழ்த்தேசியவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் இந்துத்துவவாதிகளின் மனம் குளிரும் வண்ணம் திராவிட இயக்கத்தவரை வெளுத்துக்கட்டுகிறார்கள். ஆனால், இந்த வரலாற்றுப் பிழையால் தங்களுடைய இயக்கம் வளராமல் போகிறதே என்பதைக்கூட புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். புதிய இயக்கம் என்பது இளைஞர்களின் சூடான ரத்தமும் வரலாறு தருகிற “வெற்றிடமும்” மட்டுமல்ல.

நிராகரிப்புவாதிகள் சரியான திசையில் செல்லவில்லை. பெரும்பாலான இளைஞர்களை அவர்கள் ஏற்கனவே தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள். அதன் காரணமாக தமிழ்த்தேசிய இயக்கம் தனக்குக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள இயலாமல் தவிக்கிறது.

ஆனால் தமிழ்த்தேசியம் என்பது அந்த நிராகரிப்புவாதிகள் மட்டுமல்ல. நூற்றாண்டு அரசியல் மரபு கொண்ட தமிழ்த்தேசிய அரசியலில் எப்போதுமே இரு சரடுகள் உண்டு. ஒரு சரடு முற்போக்கு முகாமினுடையது, மற்றொன்று பிற்போக்குத்தன்மையுடையது.

தேசியவாத அரசியல் என்பதே பல்வேறு முகாம்களைக் கொண்டதுதான் என்பதை புரிந்துகொண்டால் இதைப் புரிந்துகொள்ளமுடியும். இதில் தற்போது பிற்போக்கு முகாமின் நிராகரிப்பு அரசியல் அம்பலப்பட்டு நிற்கிறது. முற்போக்கு முகாமோ பலவீனமான நிலையில் இருக்கிறது.

முற்போக்கு முகாம் திராவிட இயக்கத்தை அங்கீகரித்து, ஆனால் அதைக் கடந்து செல்லக்கூடிய சாத்தியங்களைக் கொண்டது. பிற்போக்கு முகாமோ திராவிட இயக்கத்தை வீழ்த்துவதே தன் கடமை என நினைத்து, அதன்காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ தில்லிப் பேரரசின் அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவும் மாறுவது குறித்து கவலைகூடப்படாத ஒன்றாக இருக்கிறது.

முற்போக்கு முகாம் வரலாற்றின் திசைவழியில் நடைபோடக்கூடியது. பிற்போக்கு முகாம் தமிழ்நாட்டை ஒரு நூற்றாண்டுக்கு பின்தள்ளி நகர்த்திவிடத் துடிக்கிறது.

இந்த இரு முகாம்களுக்கு இடையிலான போராட்டமே தமிழ்த்தேசிய அரங்கில் அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். தேர்தல் ரீதியில் திராவிடக் கட்சிகளுக்கு இன்னும் ஓரிரு தேர்தல்களுக்கு எந்த பெரிய சிக்கலும் இருக்கப்போவதில்லை.

ஆனால், தமிழ்த்தேசிய முகாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த முரண்பாடு எப்படித் தீர்க்கப்படுகிறதோ அதைப் பொறுத்துதான் தமிழ்நாட்டின் எதிர்காலமும் அமையப்போகிறது. முற்போக்கு தமிழ்த்தேசியம் வெற்றிபெற்றால் சுயமரியாதை இயக்கத்தின் சுடர் புதிய கரங்களுக்கு கைமாறும். பிற்போக்கு தமிழ்த்தேசியம் வெற்றிபெற்றால், அது தேர்தல் களத்தில் இந்துத்துவ, தமிழர் விரோத சக்திகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

2009 – ம் ஆண்டுக்கு பின்னர் உருவான தமிழ்த்தேசிய இயக்கங்கள்

2009 -ம் ஆண்டுக்கு பின்னர் உருவான தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவைகளால் தமிழகத்தின் தமிழ்த்தேசிய வரலாறு தொடர்ந்து புறக்கணிப்படுவது ஏன்? என்ற புதிருக்கு விடை காண வேண்டும்.

அது அவ்வளவு கடினமானதல்ல.

இத்தகைய தமிழ் தேசியஅமைப்புகள், கட்சிகள், ‘தமிழ் தேசிய அரசியலை தவிர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசிய இலட்சியங்களை திரித்தும், மடைமாற்றியும் இந்திய அரசின் ஆதிக்கத்திற்கும், இந்துத்துவத்திற்கும் சேவை செய்கின்றன. அதன் பொருட்டு இளைஞர்களுக்கு தமிழ்த்தேசியம் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழிமுறைகளையும் கற்பிக்கின்றனர்.

இத்தகைய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்த் தேசியத்தை அகற்றிவிட்டு அதனிடத்தில் இந்துத்துவ, இனவெறி, சாதிவெறி தேசியத்தை முன்வைப்பதற்காக சில பிரதான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அவற்றையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து பரப்பியும் வருகிறார்கள்.

இது போன்ற பிற்போக்கான தமிழ் தேசிய அமைப்புகளை அடையாளம் காண்பதும், அம்பலப்படுத்துவதும் தமிழ்த்தேசியத்தின் உண்மையான இலட்சியங்களை, இலக்குகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்று நமது தவிர்க்க இயலாத கடமையாக மாறி நிற்கிறது.

பிற்போக்கு தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயல்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

  1. தமிழ்த்தேசியத்தின் தத்துவத்தை சிதைப்பது.
  2. ஈழவிடுதலை குறித்த தவறான நம்பிக்கையை விதைப்பது.
  3. தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது மூலம் தமிழ் தேசியத்தின் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்பது.
  4. தமிழ்ச்சாதிகளை உயர்த்தி பிடிப்பது.
  5. திராவிடத்தை வேரறுப்போம் என்று செயல்படுவது
  6. வெளியாரை வெளியேற்றுவதாக பிரச்சாரம் செய்வது

இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா?

மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

அதேபோல, மொழிஞாயிறு தேவநேயபாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11 ஆவது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார்? என்பதில் 27 பேரை வரிசைப்படுத்துவதில் 11 ஆவது இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவாணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களைவிட, பாவணர் என்பவர் தந்தை பெரியாரை அறியாதவரா?

அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்குவனார் அவர்கள்.

மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர் தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக்குவனார்.

இலக்குவனாரைவிட, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

ஃபக்ருதீன் அலி – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *