யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் .

பாலஸ்தீனம் ! மனித குலம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே, உலக வரலாறு ஒரு தனிப்பட்ட நாட்டைப் பற்றியும் தனிப்பட்ட இனத்தைப் பற்றியும் தனிப்பட்ட ஒரு நகரைப் பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது என்றால் அவை பாலஸ்தீனம், பாலஸ்தீனர்கள் , ஜெருசலம் ஆகியவைகளைப் பற்றியதாகும்.

இந்த மூன்று காரணிகளையும் ஒதுக்கிவிட்டு உலகசரித்திரத்தின் எந்த காலக்கட்டத்தையும் எவராலும் எழுத இயலாது. எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்லாமல் இறைவேதங்களிலும் குறிப்பிடப்படும் சிறப்புக்கள் பெற்றவைதான் நாம் குறிப்பிடும் இந்த நிலமும் இனமும் நன்நகரும்.
இந்த அடிப்படையில் இவை பற்றி பல்வேறு நூல்களைப் படித்து இருக்கிறோம்.

உலகப் படத்தைப் பார்த்தால் , அந்தக்கால 501 நிறுவனத்தின் நீண்ட பார் சோப் அளவுக்கு மட்டுமே தென்படுகிற இந்த நிலப் பகுதி, உலக அரசியலின் ஒவ்வொரு நகர்விலும் தனது தாக்கத்தை செலுத்தி இருக்கிறது.

யூத , கிருத்தவ, இஸ்லாமிய மார்க்கங்களில் இறைவனின் தூதர்கள் என்று நம்பப்படுகிற பெரும்பான்மையான தூதர்கள் வாழ்ந்து மறைந்த பூமியாகவும் அவர்கள் அடங்கப் பெற்ற புனிதபூமியாகவும் இந்த நிலப் பரப்பு இருக்கிறது. இதனால்தான் இந்த பூமிக்கு அனைவரும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த உரிமைக் கொண்டாடலுக்குப் பின்புலத்தில் அரசியல் சதிகளும், போர்களும், மனிதகுலத்துக்கு எதிரான கொடுமைகளும் இந்த நிமிடம் வரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணமாக இரத்த ஆறுகளும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த இரத்தத்துளிகளை சிந்தும் போட்டியில் தாயின் கருவறையில் இருக்கும் – இன்னும் இந்த உலகையே பார்த்திராத கருக்குழந்தைகளும் தப்பவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

1948 ஆம் ஆண்டு அன்றிருந்த உலக அரசியல் சூழலைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாடு என்ற ஒன்று பாலஸ்தீன மக்கள் மீதும் உலகத்தின் மீதும் திணிக்கப்பட்டபோது, அதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாகவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகவுமே நாம் புரிந்து கொண்டு இருக்கிறோம்.

இந்த அநீதியை எதிர்த்து மனதைரியத்துடன் இன்றுவரை , இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்த உயிரைத்தவிர என்ற உணர்வோடு தலைமுறை இடைவெளி இல்லாமல் போராடுகிற மக்களுடைய வரலாறே பாலஸ்தீனத்தின் பேராட்ட வரலாறு ஆகும்.

இத்தகைய ஒரு எழுதக் கடினமான , நயவஞ்சகமான வரலாற்று சம்பவங்களை தொகுத்து ஜனரஞ்சகமாக அனைவருக்கும் புரியும் வகையில் எழுதுவதென்பது மிகக் கடினமான ஒரு பணி.

ஆயினும், “ரத்த சரிதம்” என்று பொருத்தமாக பெயரிடப் பட்ட, இந்த நூல், பாலஸ்தீன மக்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு போராட்ட வடிவங்களின் ஒவ்வொரு அடிகளையும் அசைவுகளையும் ஒன்று விடாமல் தொகுத்து அழகுதமிழில் வடித்துத் தரப் பட்டு இருக்கிறது. இந்த அரும்பணியைச் செய்தவர், எழுத்துலகில் வளர்ந்து வரும் எங்கள் தம்பி அபூ ஷேக் முகம்மத் ஆவார்கள்.

ஒரு வரலாற்றுப் போராட்டத்தை படிக்கட்டுகளாக வகைப் படுத்திய இந்த நூல் எனது கரங்களில் தரப்பட்டபோது இந்த வரலாற்றை ஆவணப் படுத்த இதன் நூலாசிரியர் எவ்வளவு உழைத்து இருப்பார் என்பதையே என் மனம் எண்ணிப் பார்த்தது. சிலர் நினைப்பதுபோல் வரலாற்று சம்பவங்களை ஆவணப் படுத்துவது ஒன்றும் துப்பறியும் புதினங்கள் எழுதுவதுபோல் இலகுவான காரியமல்ல. அது ஒரு கம்பியின் மேல் நடக்கும் வித்தை. அந்த வித்தையை மிகச்சரியாக செய்து பலரின் பாராட்டைப் பெற்று இருக்கிறார் அன்புத்தம்பி அபூ ஷேக் முஹம்மத்.

வரலாற்றை நேசிப்பவர்களும் பாலஸ்தீன மக்களின் உண்மையான போராட்ட வடிவங்களை அறிந்து கொள்ளும் ஆவல் கொண்டவர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஆவண நூல் இரத்த சரிதம் ஆகும்.

இந்த நூலை மிக அழகிய முறையில் அச்சிட்டு , காலம் காலமாக இந்த நூல் காப்பாற்றப் படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கனத்த அட்டை போட்டு வெளியிட்ட சென்னை சாஜிதா புக் சென்டரின் நிறுவனர் ஹாஜி. முகமது ஜெக்கரியா அவர்களுக்கு அல்லாஹ் மேலும் அருள்புரிவானாக!

“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” . அனைவரும் இந்நூலை வாங்கித் தாங்கள் படிப்பதுடன் தங்களின் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பதே இந்த நூலாசிரிய இளைஞருக்கு நாம் தெரிவிக்கும் ஆக்கபூர்வமான பாராட்டாக அமையும்.

  • இப்ராஹீம் அன்சாரி மஸ்தான் சமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *