இந்தியா என்பது பல்வேறு இனங்களும், மதங்களும், மாறுபட்ட  நம்பிக்கைகளும் கொண்ட  மக்களால் ஆன தேசம். இங்கிருக்கும் பலதரப்பட்ட  பண்பாட்டு, கலாச்சார வித்தியாசங்களும், பன்முகத்தன்மையும் தான் இந்நாட்டை மிகவும்  தனித்துவமிக்கதாக  ஆக்குகிறது.அதே நேரம் இந்த மாறுபட்ட கலாச்சாரமும், வேறுபாடுகளும்   பாசிச சக்திகளின் நாசகர திட்டங்களுக்கும், இந்து என்ற அடையாளத்தின் கீழ் அணிதிரட்டவும் இன்னும்  ஒற்றை கலாச்சார திணிப்புக்கும்  பெரும் இடையூறாக இருந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு தான் தேசிய கல்வி கொள்கை, நீட் உட்பட கல்வி சார்ந்த பல எதேச்சதிகார போக்கை ஒன்றிய  அரசு கையில் எடுத்தது. அதன் நீட்சியாக தான் சமீபத்தில் குஜராத் மற்றும் கர்நாடக அரசு வரும் கல்வியாண்டு முதல்  பள்ளியினபாடத்திட்டத்தில் பகவத் கீதை என்ற இந்து மத வேத புத்தகம் போதிக்க பட இருப்பதாக அறிவித்திருப்பதை பார்க்க வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் பெங்களூருவில் முஸ்லீம் பெண்கள்  ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து “பள்ளியில் மத அடையாளம் இருக்க கூடாது”கல்வி கற்கும் இடத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும்  பாகுபாடு(?)இல்லாமல் இருக்க வேண்டாமா?” “பள்ளி கல்லூரியில் ஏன் மத அடையாளம் ” என்றெல்லாம்  வாய் கிழிய பேசியவர்கள் எல்லாம் இன்று நேரடியாக மத நூலை இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சாதிய பாகுபாட்டை நியாயப்படுத்தும் பகவத் கீதையை  பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சங்களில்  கல்வி என்ற பெயரால்  திணிக்கபடும் போது எங்கே போய்  ஒளிந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

ஹிஜாப் என்பது இந்திய அரசியல் சாசனமே  உறுதிப்படுத்திய தனி மனித உரிமையாக இருந்த போதும் கூட  அதை அணிவதற்கு இந்த நாட்டில் அனுமதி இல்லை, ஆனால் இந்திய அரசியல் சாசனம் 28வது பிரிவில் “மதம் சார்ந்த எந்த அறிவுறுத்தல்களும் அரசு பள்ளியில் இருக்க கூடாது” என தடை செய்திருக்கும் போதும்  ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூலை கட்டாய படமாக்குவது இங்கே பெரிய  விவாதமாக கூட மாறவில்லை. மதச்சார்பின்மை என்பது முஸ்லீம்களின் உரிமையை பறிக்க மட்டுமே பயன்படும் ஆயுதசொல்லாக மாறிப்போயிருப்பதை இந்த நிலை  காட்டுகிறது.

மாணவர்களின் ஆடைகளில் மதச்சார்பின்மையை நிலைநாட்ட நினைத்த நீதி மன்றமோ மாணவர்களின் கல்வியே காவி மயமாவதை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டும் காணாமல்  இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது

இந்த திணிப்பை எதிர்த்து களமாட  வேண்டிய எதிர்கட்சிகளோ குறிப்பாக காங்கிரெசும், ஆம் ஆத்மியும்  உங்களுக்கும் எங்களுக்கும் பெரிய வித்யாசம் ஏதும் இல்லை என்பதை போல ஒருமித்த மனதுடன் ஆதரவு தெரிவித்திருப்பது பாஜகவை சித்தாந்த ரீதியில் எதிர்க் கொள்ள எதிர்க்கட்சிகள் இன்னும் தயாராகவில்லை என்பதையே காட்டுகிறது.

காஜா காதர் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *