பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்தும் ஒன்றிய அரசு, இப்போது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சையையும் சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது. ஏப்ரல் 1 முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஒரேயடியாக உயர்த்தி உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் தேசியப்பட்டியலில் (என்.எல். இ.எம்) உட்படுத்திய, விலை நிர்ணய அதிகாரம்  அரசிடம் ஒப்படைக்கப்பட்ட மருந்துகளுக்குத்தான் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்.பி.பி.ஏ) 10.7 6 சதவீதம் விலை உயர்வை  அறிவித்துள்ளது.

 பாராசிட்டமால், அசித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள், வேதனை குறைப்பான்கள், நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள், இதயம், ஈ என் டி மருந்துகள், ஆன்டி-செப்டிகுக்கள் உட்பட சர்வ சாதாரணமான பயன்பாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மருந்துகளும் இந்த விலை உயர்வு பட்டியலில் உள்ளன. ஒன்றிய தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில், உட்கட்டமைப்பு துறையின் பொருளாதார ஆலோசகரின் அலுவலகம்தான் இந்த விலை உயர்வை தீர்மானித்துள்ளது. 2013இல் திருத்தம் செய்யப்பட்ட மருந்து விலை கட்டுப்பாடு ஆணையின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலிலுள்ள மருந்துகளின் விலை உயர்வை தீர்மானிப்பதற்கான அதிகாரம் என்.பி.பி.ஏக்குத்தான். ஆனால், வெறும் அறிவிப்பானாக அது மாறியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த தீர்மானத்தை மருந்து விற்பனை நிறுவனங்கள் வரவேற்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த விலை உயர்வும் போதாது என்பதுதான் அவர்கள் வாதம். கோவிடை தொடர்ந்து மூலப் பொருட்களின் விலையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவருவதற்கான போக்குவரத்துச் செலவும் மிகவும் அதிகரித்துள்ளதால் மருந்து விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உணவைப் போல  மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய மருந்துகளுக்கு இவ்வளவு அதிகமான அளவு விலையை உயர்த்துவதால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்ற கவலை கிஞ்சிற்றும் ஒன்றிய அரசருக்கு இல்லை.

மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதற்கும் பெருநிறுவன மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை லாபத் துரோகத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றவும் 1997இல் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் நேஷனல் பார்மசூட்டிக்கல்ஸ் ப்ரைசிங் அத்தாரிட்டி  என்ற என் பி பி ஏ. சென்ற வருடம் பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் துறை அமைச்சர் கூறியதன் அடிப்படையில் 1997இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது முதல் மருந்து கம்பெனிகளின் அதிக விலை உயர்வு தொடர்பாக சுமார் 2116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 818 வழக்குகள் தொங்கு நிலையில் உள்ளன.  அதிக விலைக்கு மருந்துகளை விட்டதன் மூலம் 8180 கோடி ரூபாயை மருந்து நிறுவனங்கள் இலாபமாக பெற்றுள்ளனர். நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 324 வழக்குகள்  மட்டும் 6550 கோடி ரூபாய் தொடர்புடையதாகும். கோவிட் இரண்டாம் அலையின் மூலம் நோயாளிகள் அதிகரித்த போது மருந்துக் கம்பெனிகள் பேராசையுடன், பெரும் கொள்ளை நோக்கத்துடன் களத்திற்கு வந்தார்கள். ரெம்டேசிவர் ஊசி பற்றாக்குறை அதிகரித்தபோது அதன் விலை பன்மடங்கு உயர்ந்தது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. அன்று என் பி பி ஏ தலையிடல் மூலமாக விலை ரெம்டேசிவர் ‘சுயமே’  குறைந்தது.

நமது நாட்டில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்கள் அதிக விலை தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், வழக்கும் அபராதங்களும் சட்ட நடவடிக்கைகளும் கை மேற்கொண்டாலும் எதிர்காலத்தில் அதிக விலை உயர்வில் இருந்து மருந்து கம்பெனிகளை பின்வாங்கச் செய்வதில் என்பிபிஏ தோல்விகளைதான் சந்திக்கும் என்பதைத்தான் கடந்த கால அனுபவங்கள் எடுத்துச் சொல்லுகிறது. இறுதியில் மருந்து நிறுவனங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக  உருவாக்கப்பட்ட அமைப்பே விலை உயர்வுக்கு உபகரணமாக மாற்றப்பட்ட வினோதம் இங்கே அரங்கேறியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை, போக்குவரத்துச் செலவு, வரி போன்றவற்றில் ஏற்பட்ட  உயர்வு ஆகியவற்றை சுட்டிக் காட்டித்தான் இப்போது சாதாரண மக்களின் கழுத்தை நெறிக்கும் விதமாக அவர்களது அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளின் விலையை உயர்த்தி உள்ளார்கள்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அரசின் கட்டுப்பாடு வேண்டும் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசு வியாபாரத்திற்கும் வியாபாரிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தால் மக்கள் பிச்சை எடுக்கும் சூழல்தான் வரும். மருந்து நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையே மருந்து விலை நிர்ணயத்தில் உள்ள சுரண்டலை வெளிப்படுத்துகிறது. ‘மருந்து பயன்பாட்டாளர்களுக்கு சிறிது சுமை ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், ஏராளமான உற்பத்தியாளர்களும் பலவிதமான உற்பத்தி முறையும் உள்ளது என்பதால் அனைவரும் விலையை உயர்த்திய ஆகவேண்டும் என்ற தேவை இல்லை. இருப்பினும், 10 சதவீத விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த வாய்ப்பை யாரும் தட்டிக் கழிக்க மாட்டார்கள்’ என்றுதான் சங்கத்தின் பொதுச் செயலாளர் தாரா பி. பட்டேல் கூறியுள்ளார்.

மருந்து நிறுவனங்கள் விலையை அதிகரிக்காமலும் முன் செல்ல முடியும் என்ற குறிப்பைத்தான் அவர் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்டதை விட அதிகமாக அவர்களுக்கு கொடுத்து, அதன் மறைவில் மக்களின் மீதான சுரண்டல்களுக்கு மருந்து நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசை வழிநடத்தும் பாஜகவிற்கும் சங்பரிவார் கும்பலுக்கும் போதிய வருமானம் கிடைக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுவும் ஒரு ஊழலே. எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை  எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்ததை போல மருந்துப் பொருட்களின் விலை நிர்ணய அதிகாரத்தையும் ஒரு அமைப்பிற்கு ஒன்றிய அரசு அளித்துள்ளது. இவர்கள் மருந்து நிறுவனங்களுக்குதான் எப்போதும் முன்னுரிமை அளிப்பார்கள் என்பது வெள்ளிடை வெளிச்சம். ஆகவே, மருந்து விலை கட்டுப்பாடு என்ற பெயரில் ஒன்றிய அரசு மருந்து நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை. அதற்கு மாறாக ஆன்டிபயாடிக்குகளையும் வைட்டமின் மருந்துகளையும் வாழ்வின் ஒரு பாகமாக கொண்டு செல்லும் சாதாரண மக்களைதான் பழிவாங்குகிறது.

ஒன்றிய பாசிச பாஜக அரசு என்பது சாதாரண மக்களுக்கான அரசு அல்ல. பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்ட, பெருநிறுவனங்களின் ஏஜென்டாக செயல்படும் அரசு என்பதையே அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *