சமீபத்தில் தீபாவளியை ஒட்டி வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஆழமான தாக்கத்தையும், அதிர்வலைகளையும் உருவாக்கியதோடல்லாமல், பொதுவெளியில் ஆரோக்கியமான பல விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. அரசு நிர்வாகத்தின் இயல்பை, அலட்சியத்தை, ஆதிக்கமனோபாவத்தை, அதிகார துஸ்பிரயோகத்தை, சாதிய சார்பு நிலைகளையெல்லாம் கொஞ்சமும் சமரசமில்லாமல் தைரியமாக காட்சிப்படுத்தியதும் அதேபோன்று விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை, பிரச்சனைகளை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையெல்லாம் தோலுரித்து காட்டியதும்  தான் ஜெய் பீம் வெகு மக்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறிப்போயிருப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

இப்படி ஜெய்பீம் எல்லா தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்டு, சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக கொண்டாட பட்டுக் கொண்டிருக்கும் போது, அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கெதிரான திரைப்படமாக சுருக்கிவிட முயன்றிருக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

படத்தில் காட்டபட்ட சர்ச்சைக்குரிய காலண்டர்  குறியீடு உண்மையில் தவிர்த்திருக்கபட வேண்டியதுதான். ஆனால் அது சர்ச்சைக்குள்ளாகி  சுட்டிக்காட்ட பட்டவுடன் உடனடியாக  மாற்றபட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .ஆனால் தொடர்ந்து இதை ஊதி பெருசாக்கி அரசியல் செய்ய முயல்கிறார் அன்புமணி.

நடிகர் சூர்யாவை அறமற்ற மௌனம் காப்பதாக விமர்சித்துள்ள அவர், சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் வெளிப்படையாகவே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை போல் சித்தரித்ததை எதிர்த்து எத்தனை கேள்விகளை கேட்டிருந்தார் ? என்ன எதிர்வினை ஆற்றியிருந்தார் ? வெறும்  அறமற்ற கள்ள மௌனம் தானே அப்போது இவரது நிலைப்பாடாக இருந்தது.

தமிழகத்தில் இவர்கள் செய்யும் அரசியல் என்ன சமூக நீதி அரசியலா ? எப்பொழுதெல்லாம் தனது செல்வாக்கு சரிய தொடங்குமோ அப்பொழுதெல்லாம் ஒரு சாதிய  வெறுப்பை கட்டமைத்து,  மக்களை ஒரு கொதிநிலைக்கு  எடுத்து சென்று தன்னோடு தக்க வைத்துக்கொள்ளும்  பாசிச தந்திரம் தான்   இவர்களின் கடந்த கால அரசியல் வரலாறு. தர்மபுரியும், பொன்பரப்பியும் இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கு போதுமான சான்றுகளாக  நம்முன் சாட்சியளிக்கிறது .

ஜெய்பீமுக்கு எதிரான இவர்களின் ஆத்திரத்திற்கு காரணம் வெறும் குறியீடுகள் இடம்பெற்றதால் மட்டுமல்ல, மாறாக காலம் காலமாக பெருமை பேசி கட்டமைக்கப்பட்டு வந்த மேல் சாதி ஆதிக்க மனோபாவத்தை சுக்குநூறாக நொறுக்கி தள்ளியிருப்பதும், அதை கேள்வி எழுப்பியதுமே எரிச்சளுக்கான காரணமாகும்.

எல்லா சமூகத்திலும், எல்லா மத நம்பிக்கையாளர்களிலும், எல்லா கருத்தியல்களிலும் கடும்போக்கு கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தமே. அதை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம்சுமத்தி ஒதுக்கித்தள்ள முற்படுவது என்பது ஏற்றுகொள்ள முடியாததுதான் .

அதேநேரம் மக்களிடம் வெறுப்பை விதைத்து அதன்மூலம்  அரசியல் அறுவடை செய்ய துடிக்கும் சுயநல அரசியல்வாதிகளை அடையாளங்கண்டு புறக்கணிக்கவேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.

இறுதியாக ஜெய்பீமில் ஒரு வசனம் வரும் “எந்த ஒரு ஆதரமுமில்லாமல் நாம் வழக்கு தொடர்ந்திருப்பது தனி ஒரு போலீசை எதிர்த்தல்ல மாறாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் எதிர்த்து” என்று. அது போன்று அன்புமணியின் கடிதம் என்பது  ஜெய்பீம் அதிகாரவர்க்கத்தை மட்டுமல்ல ஆதிக்கவர்க்கத்தையும் உலுக்கியிருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த சான்று  ஆகும்.

காஜா காதர் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *