பாபர் மசூதி என்பது
ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை
நினைத்துக்கொண்டிருந்தீர்கள்

இல்லை அது
யாருடைய கையிலோ இருந்த
மதுக்கிண்ணம்
தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து
உடைந்து விட்டது

பாபர் மசூதி என்பது
உறுதியான ஒரு பழங்கால கட்டிடம்
என்று இதுவரை சொல்லப்பட்டது
இல்லை அது யாரோ
கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்
அது யார் கையிலோ உணர்ச்சிவசத்தால் மோதி
சிதறி விட்டது

இருபத்தெட்டு ஆண்டுகள்
நீண்ட விசாரணைக்குப்பின்
இந்த உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

வழங்கும் நீதிகளில்
ஒரு தொடர்ச்சி இருக்கிறது
ஒரு கட்டுக்கதையின்
ஒவ்வொரு அத்தியாயமும்
எந்தக்குழப்பமும் இல்லாமல்
தெளிவாக எழுதப்படுகிறது

எதுவும் திட்டமிடப்படவில்லை
எல்லாமே தற்செயலாக நடக்கின்றன
குழந்தைகள் கட்டிய மணல்வீடு
ஒரு காற்றில் கலைவதுபோல
பாபர் மசூதி கலைந்து விட்டது

அந்த ஸ்தூபியின் மீது ஏறி நிற்பவர்கள் யார்?
அது ஒரு க்ராஃபிக்ஸ் காட்சியாக இருக்கக்கூடும்
கேமிராக்கள் முன்
’இதற்காக பெருமைப்படுகிறோம்’ என
முழங்கியவர்கள் யார்?
அது ஒரு திரைப்படக் காட்சியே தவிர
உண்மையல்ல

திட்டமிடப்பபடாமல்தான்
ரத ஊர்வலங்கள் நாடு முழுக்கச் சென்றன
திட்டமிடப்படாமல்தான்
ஒன்றரை இலட்சம் பேர்
மசூதியின் முன் திரண்டார்கள்
திட்டமிடப்படாமல்தான்
சக்திவாய்ந்த கடப்பாறைகள்
காற்றில் எங்கோ தானாக வந்து சேர்ந்தன
திட்டமிடப்படாமல்தான்
தலைவர்கள் வெறியூட்டும் உரைகளை நிகழ்த்தினார்கள்
திட்டமிடப்படாமல்தான்
அங்கு ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மசூதி
காற்றில் மாயமாய் மறைந்துவிட்டது
திட்டமிடப்படாமல்தான்
நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன
திட்டமிடப்படாமல்த்தான்
சூலாயுதங்களில் ரத்தம் பெருகியது
திட்டமிடப்படாமல்தான்
குண்டுகள் வெடித்தன
திட்டமிடபடப்படாமல்தான்
ஒரு காவிநிற பேரசு
அந்த இடிபாடுகளின்மீது எழுந்தது

நீங்கள் திட்டமிடாமல் ஒரு கொலை செய்யலாம்
நீங்கள் திட்டமிடாமல் ஒரு வீட்டை உடைக்கலாம்
நீங்கள் திட்டமிடாமல் ஒரு நகரத்தை எரிக்கலாம்
நீங்கள் திட்டமிடாமல் ஒரு மதத்தினரை அகதிகளாக்கலாம்
எந்தக் குற்றத்தையும் திட்டமிடாமல் செய்தால்
நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்
நீங்கள் இந்த தேசத்தை ஆள்வீர்கள்

கூட்டு மனசாட்சியின் பெயரால்
நிரபராதிகளை தூக்கிலிடலாம்
கூட்டு மனசாட்சியின் பெயரால்
குற்றவாளிகளை நிரபராதிகளாக்கலாம்
கூட்டு மனசாட்சியின் பெயரால்
ஆலயங்களைத் தகர்க்கலாம்
கூட்டு மனசாட்சியின் பெயரால்
அதன் மேல் வேறு ஆலயங்களைக் கட்டலாம்

புனித யுத்தத்தில்
படைகளை வழி நடத்தியவர்களே
அவர்களை தடுத்தார்கள் என
தீர்ப்புகள் எழுதப்படுகின்றன

மேல் முறையீட்டில்
இன்னும் சில தீர்ப்புகள் வர இருக்கின்றன
அங்கு மசூதி என்று எதுவும் இருக்கவில்லை எனவும்
அவை இடிக்கப்படுகிற காட்சிகள் அனைத்தும்
மாயாவிகள் உருவாக்கிய
மாயத்தோற்றங்கள் எனவும்
அங்கு பறந்தவை எல்லாம்
காவிக்கொடிகள் அல்ல
சமாதானத்தின் வெள்ளைக்கொடிகள் எனவும்

இன்னொரு முறை உரத்து முழங்குங்கள்
ஒரு நாடு
ஒரே மதம்
ஒரே நீதி

-மனுஷ்ய புத்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *