தந்தை பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியைக் கட்டிக்காத்த பெரியாரின் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாடுவது முற்றிலும் வரவேற்கத்தக்கது. சமூக நீதியையும் பெரியாரையும் ஒன்றிணைத்து, ஒரே நாளில் நினைவுகூர்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற போதும், கடந்த காலங்களில் பெரியாரை வெறும் `சமூக நீதிக் காவலர்’ எனச் சுருக்குவதன் பின்னணியில் இந்தியத் தேசிய நலன்களும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவின் வர்க்க நலன்களும் இல்லாமல் இல்லை.

பெரியார் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ என அறிவித்தவுடன் ‘தலித் அல்லாதோர் கூட்டமைப்பு’ கட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், வழக்கம் போல இது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி எனவும், கடந்த 33 ஆண்டுகளாக பாமக செப்டம்பர் 17 அன்று ‘சமூக நீதி நாள்’ கொண்டாடி வருகிறது எனக் கூறியுள்ளார். பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் பாமக தான் தலித்துகளுக்கு எதிராக வட மாவட்டங்களில் வன்னியர் சமூக இளைஞர்களைத் தூண்டிவிட்டு வருகிறது. சாதிய கலவரங்களை முன்னின்று நடத்தி வருகிறது. ஆணவப் படுகொலைகளை ஊக்குவித்து வருகிறது; தலித்துகள் மீதான வன்கொடுமையைத் தடுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தடை செய்ய தொடர்ந்து போராடி வருகிறது. பெரியார் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ எனக் கடைபிடிக்கும் ஒரு இயக்கம் எப்படி சாதிய கட்சியாகவும், தலித்துகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என்பதில் இருந்து பாமகவின் இரட்டை வேடப் போக்கை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த விவகாரம் இதோடு முடிந்து போவதில்லை.

`திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல’, `திமுகவின் பெரும்பான்மையானோர் இந்துக்களே!’, ‘கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் சேனலை திமுக எதிர்க்கிறது’ என்ற திமுக பிரமுகர்களின் கருத்துகள், பாரத மாதாவுக்கு நினைவாலயம் திறந்து வைத்தது, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து கொரோனா வார்ட் திறந்தது, உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது என திமுக இந்துத்துவத் தத்துவத்தோடு இணைந்து நின்ற இடங்கள் இருக்கின்றன. அதே வேளையில், திமுக கொண்டு வந்துள்ள மிக முக்கியமான திட்டங்களான கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் முதலானவை முற்போக்கானவை. கடந்த கால அடக்குமுறை வரலாற்றோடு ஒப்பிடுகையில் தைரியமாக அமல்படுத்தப்பட்டு, நிச்சயம் பாராட்டுகளைப் பெற தகுதி பெற்றவை.

எனினும், இந்தத் திட்டங்களின் மறுபக்கத்தை, சமூக தத்துவமாக இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும்பான்மையானோரிடம் விதைக்கப்பட்டுள்ள இந்துத்துவத்தின் போக்கோடு அணுகும் போது நிச்சயம் அச்சம் எழுகிறது. இந்து மதத்தை ஜனநாயகப்படுத்துவது என்பதும், `இந்து ஒற்றுமை’ உருவாக வேண்டும் என எண்ணுவதும் இந்துத்துவத்தின் கொள்கைப் பண்பு. முஸ்லிம், கிறித்துவர், பார்சி அல்லாத அனைவரும் இந்துக்களே என்று இந்து மதத்தை இந்தியத் தேசியக் கொள்கை பெரும்பான்மை மதமாக மாற்றி அனைவர் மீதும் திணித்தது. இந்துத் தேசியக் கொள்கை அதனை அறுவடை செய்து, சிறுபான்மை மீது பெரும்பான்மையைத் திருப்பி விடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

வழிபாடு, வாழ்க்கை நெறி முதலான விவகாரங்களில் பெரும்பான்மை இந்துக்களுக்கு இடையிலான சாதிய முரண்பாட்டைக் களைய இந்துத்துவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயல்கிறது. இந்த நடவடிக்கைகள் மேலிருந்து, பார்ப்பனர்களிடம் இருந்து, கீழே இறங்குவதால், இதனால் இந்துச் சமூகத்திற்குள் மாற்றங்கள் எதுவும் நிகழ்வதில்லை. எனினும், ‘இந்து ஒற்றுமை’ என்று பெயரளவிலான ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது இந்துத்துவம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்துத்துவம் இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, பழைய இந்து சீர்திருத்த நடைமுறைகளால் பெரிதும் பயன்படப் போவது இந்துத்துவ சக்திகள் மட்டுமே. இந்து மதத்தை வழிபாடு என்ற அடிப்படையில் ஜனநாயகப்படுத்தும் பணியை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழ்ச் சமூகம் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதி என்பதையும், வர்ணம் என்பதையும் தொழிற்பிரிவு என்ற அளவில் கருதுவதோடு, சாதி, வர்ணம் ஆகியவை நீடிப்பதில் பிரச்னை இல்லை எனவும், சாதிய ஏற்றத் தாழ்வும், தீண்டாமையும் மட்டுமே பிரச்னை எனவும் தங்கள் பார்ப்பனரல்லாத உறுப்பினர்களுக்குப் பாடம் எடுத்து வருகிறது. அதாவது ஒரு கவுண்டரும், அருந்ததியரும் தங்கள் சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம். சாதியின் பெருமையைப் பேசலாம். ஆனால் இருவரும் தங்களைச் சமமானவர்களாக கருதிக் கொள்ள வேண்டும் என ஒரு கருத்தை முன்வைக்கிறது. நடைமுறையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனியப் பற்றாளர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

திராவிடக் கட்சிகளும் ஏறத்தாழ இதே முறையைப் பின்பற்றி வருகின்றன. சாதியை வெறும் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் மன நோயாக பார்க்கும் பார்வையில் இருந்து இது பிறக்கிறது. சாதி என்பதன் பின்னணியில் இருக்கும் பொருளாதார ஆதாயங்களை, நிலம், பொருள் மீதான அதிகாரத்தை அசைக்கும் கண்ணோட்டம், இந்தியாவின் பெரும்பாலான தேர்தல் கட்சிகளுக்கு இல்லை. இதில் திமுகவும் விதிவிலக்கு அல்ல.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த போது, ராமர் கோயிலுக்காக ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பதறிப் போனது. `இந்து ஒற்றுமை’ என்ற பெயரில் முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரித்து `மந்திர் இயக்கம்’ கட்டிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது மாபெரும் இடியாக அதன் தலையில் விழுந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளால் ‘சூத்திரப் புரட்சி’ நிகழப் போகிறது என அச்சம் தெரிவித்திருந்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் `ஆர்கனைஸர்’ இதழ்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த மண்டல் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு, தனியார்மயமாக்கல் முதலான நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்திய அரசியல் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இட ஒதுக்கீடு என்பது இந்து ஒற்றுமையை சீர்குலைக்கும் எனக் கருதும் ஆர்.எஸ்.எஸ், மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எழுந்த ஆதரவால் தனது உத்தியை மாற்றியது. அதுவரை, சித்பவன் பார்ப்பனர்களை மட்டுமே தலைவராக நியமித்த ஆர்.எஸ்.எஸ், 1994ஆம் ஆண்டு முதல்முறையாக பார்ப்பனரல்லாத, ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத்தைத் தலைவராக நியமித்தது. அவர் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் படி அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைப் படிப்படியாக குறைக்க கோரினார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளின் சார்பில் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளைப் பார்க்க முடிந்தது. உயர்சாதியினரின் கட்சியாக கருதப்பட்ட பிஜேபி, மண்டல் கமிஷன் அரசியலைக் கையில் எடுத்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தீவிர இந்துத்துவாதியாகத் தன்னை நிரூபித்துக் கொண்ட நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானது இதன் நீட்சி தான். நரேந்திர மோடி பிரதமரான பிறகு, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. பட்டியல் சாதியினருக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. உயர்சாதி சமூகங்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் நாடாளுமன்றத்தில் பார்ப்பனர்கள், பிற உயர்சாதியினரின் எண்ணிக்கை அதிகளவில் தென்படத் தொடங்கியிருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஒரு இயக்கமாக மாற்றிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் முயற்சியை இந்துத்துவ இயக்கம் வீழ்த்தியிருக்கிறது. மீண்டும் பழைய முறைகளை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்த முடியாது.

ஏற்கனவே நாளுக்கு நாள் அரசு உறுப்புகள், செக்யூலர் அரசியல் கட்சிகள், இந்துச் சமூகம் எனப் பல முனைகளில் வேர்விட்டுப் படர்ந்திருக்கிறது இந்துப் பெரும்பான்மைவாதம். இந்து மதத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளால் ‘இந்து ஒருங்கிணைப்பு’ நிகழுமே தவிர, சாதிய அமைப்பு முறை ஒழியப் போவதில்லை. இந்த முயற்சிகளைத் தமிழக பிஜேபியின் தலைவர்கள் பலரும் வரவேற்றிருப்பது இந்தப் புள்ளியில் இருந்துதான்.

இந்தப் பின்னணிகளில் இருந்து, திமுகவின் இன்றைய ‘சமூக நீதி நாள்’ என்ற அறிவிப்பைப் பார்க்க முடிகிறது. பெரியார் சமூக நீதிக்காக மட்டுமல்ல, சாதிய அமைப்பு முறையை ஒழிப்பதற்காகப் போராடியவர்; சமூக நீதி என்பது இங்கிருக்கும் அனைத்து சாதிகளுக்கும் ஒரே உரிமைகளைப் பெற்றுத் தருவது; சாதி ஒழிப்பு என்பது அனைவருக்கும் விடுதலையைத் தருவது. இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டில், பெரியாரை சமூக நீதிப் போராளியாக மட்டுமே சுருக்குவதன் மூலம், திமுக தனது இயலாமையை, தனது சாதிய, வர்க்க நலன்களை மறைத்துக் கொள்ளவே முயற்சி செய்வதாகக் கருத முடியும்.

`சமூக நீதி இல்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியம் இல்லை’ என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். சாதி ஒழிப்புக்கான பணியில் முதல் படியாக சமூக நீதியை முன்வைக்க வேண்டும். ஆனால், சாதி ஒழிப்பை இறுதித் தீர்வாகக் கருத வேண்டும். சாதிய அடிப்படையிலான வேட்பாளர் தேர்வு, சாதிய அடிப்படையிலான வாக்குறுதிகள், சாதிய அடிப்படையிலான மணி மண்டபங்கள் அறிவிப்பு, சாதியத் தலைவர்களின் குருபூஜைகளுக்கு முதல் ஆளாகப் பங்கேற்பு என சாதியை வாக்கு வங்கிகளாக மாற்றிய பிறகு, சாதி ஒழிப்பைத் தொலைதூரத்திற்குத் தள்ளிவிட்டு, பெரியாரை ‘சமூக நீதி காவலர்’ எனக் கொண்டாடுவதன் மூலம், பிஜேபி நயினார் நாகேந்திரனின் பாராட்டைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, உண்மையாகவே பெரியாருக்குச் செய்யும் மரியாதையாக அது இருக்க முடியாது.

தற்போதைய திராவிட இயக்கங்களும், கட்சிகளும், திராவிடம் என்ற பெயரில் திமுகவுக்கு ஆதரவு தரும் தனி நபர்களும் பெரியாரின் வாழ்க்கையையும் கொள்கையையும் நாத்திகம், சமூக நீதி, பெண்ணடிமைத்தன ஒழிப்பு என்ற அளவில் மட்டுமே சுருக்கிக் கொண்டு வருகின்றனர். பெரியாரின் இந்தியத் தேசிய எதிர்ப்பு, தமிழ்நாட்டு விடுதலை, மாநில சுயாட்சியை வெற்றுப் பம்மாத்தாகக் கருதிய பண்பு முதலானவை பெரியாரிடம் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, இன்றைய அறிவிப்பையும் கருத முடியும். எதிர்காலத்தில் பெரியார் இந்து மதத்தை எதிர்த்ததே இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வதற்காகத் தான் எனத் தமிழக பிஜேபியினர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான ஆயத்தங்கள் தான் தற்போது பெரியாரை சொந்தம் கொண்டாடும் தரப்பில் இருந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

– ர.முகமது இல்யாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *