LOADING

Type to search

அரசியல் சமூகம் திரைப்படம் விமர்சனம்

பரியேறும் பெருமாள் – தமிழ் திரை வரலாற்றில் சிறந்த படங்களுள் ஒன்று

Share

2005 நான் பள்ளி முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்த வருடம். நண்பர்கள் கொண்டு வரும் ஒன்றிரண்டு கிங் சைஸ் நோட் புக்கில் நடிகர் நடிகைகள், க்ரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கும். அப்போது எந்த புகைப்படத்துடன் நோட்டு புழக்கத்தில் இருந்ததோ அதே புகைப்படத்துடனான நோட்டு புத்தகத்தை பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பயன்படுத்துகிறார்கள். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர் சுதர்சன். சுதர்சன் மீது செருப்பு வீச்சு என்று கடையில் தொங்கும் தினசரி வால் போஸ்டரில் இருக்கிறது.இத்தகைய விவரணையிலேய படம் எந்த அளவிற்கு நுணுக்கமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தனது வாழ்வில் கடந்து வந்த நிகழ்வுகளை அதே வலியுடன் பதிவு செய்து அந்த வலியை பார்ப்பவர்களுக்குள் கடத்துவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒவ்வொரு காட்சியும், வசனமும் நம்மை குத்திக் கிழிக்கிறது. பிறப்பை வைத்து ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் ஒருவன் மேலே வர என்னென்ன அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதை காட்சிக்கு காட்சி விவரிக்கிறார். இட ஒதுக்கீடு தேவையில்லை என்று வாதிடுபவர்களுக்கு இன்னும் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதற்கு இந்த படத்தின் காட்சிகளில் பதில் இருக்கிறது.

முதல் பாதியில் ஆங்கில மோகம், தமிழ் பற்றிய தாழ்வு மனப்பான்மை,  எல்லாம் தெரிந்தது போல வெளியில் காட்டிக் கொள்ளும் பகுமானம் இவற்றை நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளது சிறப்பாக இருக்கிறது.

யோகி பாபு, நாயகனுக்கு உதவும் சட்டக் கல்லூரி பேராசிரியை பாத்திரங்கள் சாதி, மதம்  பார்க்காமல் பழகக் கூடியவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ‘பூ’ ராமுவின் சட்டக் கல்லூரி முதல்வர் பாத்திரம், அவர் பேசும் வசனங்கள்  கச்சிதமான வார்ப்பு.

நாயகியின் தந்தை என் மகளையும் சேத்துக் கொன்னுடுவாங்கடா என்று சொல்லும் வசனம் சாதிச் சமூகத்தில் ஆணவக் கொலை என்பது எப்படி பெற்றோர்களையும் மீறி நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு சான்று. எழுத்தாளர் இமையம் எழுதிய பெத்தவன் என்ற புத்தகத்தில் ஏறக்குறைய இதே போன்ற பாத்திர வடிவமைப்பு இடம் பெற்றிருக்கும். சமீபத்தில் வெளிவந்த படைவீரன் திரைப்படத்திலும் குடும்பத்தினரின் விருப்பம் இல்லாமலேயே ஆணவக் கொலை நிகழ்த்தப்படுவதை சொல்லியிருப்பார்கள்.

நாயகனின் தந்தை கதாபாத்திரம் நானறிந்து தமிழ் சினிமா இதுவரை பார்த்திராதது. அந்த ஒரு காட்சியின் கதறல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சாதிக்காக ஆணவக் கொலை செய்வதை குலசாமிக்கு செய்யும் பூசையாக கருதும் அந்த வயதான கதாபாத்திரம் வரும் இடங்களில் எல்லாம் அடுத்து யாரோ என்ற கேள்வி, என்ன கொடூரமான மனிதன் என்ற ஆதங்கம், நம்மையும் அறியாமல் அந்த கதாபாத்திரம் மீது சீற்றம் இவற்றை தவிர்க்க முடியவில்லை. அந்த பாத்திரம் பல காலங்களுக்கு நின்று பேசப்படும்.

கருப்பி,நான் யார் இரண்டு பாடல்களின் வரிகளும் காட்சிப்படுத்துதலும் நிச்சயம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும். நம் காலத்தில் நிகழ்ந்த ஆணவக் கொலைகளை எல்லாம் கண் முன் நிறுத்துகிறது. முன்னோட்டங்களில் பிரதானப்படுத்தப்பட்ட நாய் முதல் காட்சியிலேயே கொல்லப்படுவதால் எழுந்த கேள்விகளை படம் முழுவதும் நாய் இருப்பது போலவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் சரி செய்து விடுகிறார்கள்.

நீங்க நீங்களாக இருக்கும்வரை நான் உங்க நாயாக இருக்கணும்ன்னு நீங்க நினைக்கும் வரை இந்த நிலை தொடரும் என்ற வசனம் தனிமனித மாற்றம் சாத்தியமாகாத வரை சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பதை நிறுவுகிறது. படம் முழுவதும் வசனங்களே பிரதானமாக கதையை நகர்த்திச் செல்கிறது.

திரையில் தோன்றிய, திரைக்கு பின்னால் இருந்து உழைத்த அனைத்து கலைஞர்களும் தரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் நிச்சயம் தமிழ் திரையுலகின் சிறந்த திரைப்படத்தில் ஒன்று.

திருச்சியில் மொத்தம் ஐந்து திரையரங்குகள், இருபதுக்கும் மேற்பட்ட திரைகள், ஒரு நாளில் நூறுக்கும் மேற்பட்ட காட்சிகள். கடந்த வாரங்களில் வெளிவந்த எந்த திரைப்படமும் ரசிகர்களின் திருப்தியைப் பெறவில்லை. பொதுவாக புதிய படங்கள் வரும்போது வசூல் வராத திரைப்படங்களை நிறுத்திவிட்டு முடிந்தவரை புதிய படங்களை வைத்து வருமானம் ஈட்ட முயல்வார்கள் திரையரங்கு முதலாளிகள். சிறிய முதலீட்டு படங்கள், அறிமுகமில்லாத நட்சத்திரங்கள் என்றாலும் கூட இதே போல பல திரைகளில் திரையிட்டு லாபம் ஈட்ட பார்ப்பார்கள்.

ஆனால் இந்த வாரம் இரண்டு படங்கள் வெளிவந்த நிலையில் ஒரே ஒரு திரையரங்கில் ஒரு திரையில் மட்டுமே பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பரியேறும் பெருமாள் இயக்குனர் ரஞ்சித் தயாரித்துள்ள திரைப்படம். முன்னோட்டம், முக்கியஸ்தர்களுக்கான திரையிடல் அனைத்திலுமே மிகச் சிறந்த படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தும் கூட அந்த திரைப்படத்தை வாங்கி திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முன்வரவில்லை.

ரஞ்சித் இயக்கிய படங்களை வாங்கித் திரையிட போட்டியும், ஆர்வமும் காட்டும் விநியோகஸ்நர்கள், திரையரங்கு முதலாளிகள் இந்த திரைப்படம் மீது பாராமுகமாக இருப்பது நல்ல திரைப்படங்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் திரைப்படங்கள் மீதும் ஏவப்படும் அடக்குமுறையாகவே தெரிகிறது. சமீபத்தில் இதே நிலையை எதிர்கொண்ட ஒரு நல்ல திரைப்படத்தின் இயக்குனர் தயவு செய்து பரியேறும் பெருமாள் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள், நண்பர்களுக்கு படத்தின் டிக்கெட்டை பரிசளியுங்கள், எதுவும் இல்லாவிட்டால் கிழித்தாவது போடுங்கள் ஆனால் டிக்கெட் வாங்குங்கள், நீங்கள் வாங்குவதன் மூலம் திரையரங்கு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று பேசியுள்ளார்.

இதற்கு முன்பு ஒரு பதிவில் ரெமோ போன்ற படங்களுக்கு திரையரங்குகள் நிரம்பி வழிவதும், நிசப்தம் போன்ற படங்களுக்கு திரையரங்குகளே கிடைக்காத ஒரு நிலையும் தமிழ் திரையுலகின் மோசமான நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக எழுதியிருந்தேன். அதே நிலைதான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்து சந்தைப்படுத்த முடியாமல் ரஞ்சித் போன்றவர்களே சிரமப்படும் நிலையில் எங்கிருந்து மாற்று சினிமா, வாழ்வியல் சினிமா என்றெல்லாம் பேசவும், முயற்சிக்கவும் முடியும்.?

இவர்களைப் பார்க்கும்போது தமிழில் இதுவரை வந்ததிலேயே மொக்கைப் படங்களை வரிசைப்படுத்தி அதுமாதிரி படங்கள் மட்டுமே இவர்களுக்கு வெளிவர வேண்டும் என்று வாழ்த்த தோன்றுகிறது.

தொடர்புக்கு : 9597739200

Tags:

You Might also Like

1 Comments

  1. K.R.Abu October 30, 2018

    உண்மை இது. அழகிய பதிவு பல ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும் திரைப்படங்களில் பரியேறும் பெருமாள் ஒரு இதை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *