தொலைக்காட்சியில் கணினிவழிக் கல்வி குறித்த என் தங்கையின் சிறு நேர்காணலைப் பகிர்ந்திருந்தேன்.

இணையம்வழி சரியான முறையில் கற்பவர்களுக்குப் பல பலன்கள் உள்ளன என்பதை நானும் மறுக்கமுடியாது. ஆனால் சமூகரீதியாக அதிலுள்ள சிக்கல்களையும் நாம் அறியவேண்டியுள்ளது. இந்த இரண்டு மாதங்கள் ஏட்டுக்கல்வி கற்றலில் இணையம்வழி கற்பதற்கான வசதி வாய்த்த குழந்தைகளுக்கும், அதற்கான வாய்ப்புகளற்ற குழந்தைகளுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஐஐடி, நீட், குடிமைப்பணித் தேர்வுகளின் போது இந்த இடைவெளியின் தாக்கம் தெரியவரும். என் தங்கையின் நிறுவனம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி முகாம்களின்போது கணினிவழிப் பயிற்சி அளிப்பதற்காக அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இவ்வாண்டு அந்த முகாம்களும் நடைபெறவில்லை. இணையத்தின்மூலம் அதை நடத்துவதற்கான சாத்தியங்களும் இதுவரை இல்லை. [ஜூன் 15ல் தொடங்கப்படலாம்].

இணைய இணைப்பும், திறன்பேசியும், தொலைக்காட்சியும் இல்லையென்று கேரளாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேவிகாவை நினைத்துக்கொள்கிறேன். இத்தகைய கையறுநிலை எத்தனை குழந்தைகளின் மனநிலையாக இருக்கிறது என்பதை நாம் ஆராயவேண்டும்.

தங்கையின் நிறுவனம் அரசுப்பள்ளியில் பணிசெய்யும் கணிப்பொறி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தபோது ஓரிரு நாட்கள் நான் கோவையில் இருந்தேன். தங்கை இரவு வெகுநேரம் விழித்திருந்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டும், அவர்களது ஐயங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டுமிருந்தாள். பலர் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டார்கள். பல ஆழமான சமூகச் சிக்கல்களும் அப்போது வெளிப்பட்டன.

பல பெண்கள் (ஆசிரியைகள்) வீட்டிலிருந்து பணி செய்வதலிலுள்ள தொல்லைகளை அவளோடு பகிர்ந்துகொண்டார்கள். பலருக்கும் இரவு பத்துமணிக்கு மேல்தான் பயிற்சியில் தீவிரமாகக் கலந்துகொள்ளமுடிந்தது. பகலில் கணிப்பொறி முன் அமரும்போது வீட்டில் பொற்றோர், கணவன், குழந்தைகள் என்று பலரும் வெவ்வேறு வகைகளில் தடையாக இருந்திருக்கின்றனர். ‘பள்ளிக்குச் செல்லும்போதாவது அந்த சிலமணிநேரம் எங்களுக்கே எங்களுக்கென்று இருக்கும்,’ என்றனர்.

பயிற்சியின்போது சிறப்பாகச் செயல்பட்டவர்களின் பட்டியலை முதலிரு நாட்களில் கல்வித்துறை மூலமாக வெளியிட்டபோது, சிலர் தங்கையை அழைத்து அப்படிச் செய்யவேண்டாம் என்றனர். அப்படி அழைத்தவர்கள் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள். அவர்களது நண்பர்கள், உடன்பணியாற்றுபவர்கள் அவர்களை அழைத்து வாழ்த்துத்தெரிவிப்பதால், வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது என்றார்கள்.

‘டேட்டா தீர்ந்துபோயிடும்’ என்பது அவள் அடிக்கடி கேட்ட புகார். நல்ல ஊதியம் ஈட்டுகிற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கே அது ஒரு தடையாகத்தான் உள்ளது. நண்பர்கள் திரைப்பட விழாக்கள், இலவசமாகத் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள், பல முக்கியான இணைய உரைகள் என்று போட்டு எல்லாம் இலவசமாகிவிட்டது என்று புலங்காகிதம் அடையும்போது எனக்கு இருக்கும் பிரச்சனையும் அதுதான். டேட்டா இலவசம் கிடையாது. மாதம் 250ரூ செலவு செய்தால் ஒருநாளைக்கு 2 ஜி.பி. டேட்டா கிடைக்கிறது. இதுவே பெரிய செலவுதான். நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு இந்தளவுகூட செலவுசெய்யமுடியாது. இந்நிலையில் இலவசம் என்பது உண்மையில் இலவசம் கிடையாது. இணைய இணைப்பு வேகமும் கிராமங்களில் இன்னும் பெரிய தடைதான். இணையப் பக்கங்கள் தோன்றக் காத்திருப்பதிலேயே பாதிநேரம் போய்விடும். நேரலை ஒளிபரப்பைப் பார்ப்பதெல்லாம் பெரும்வதை.

நேற்று எங்கள் கிராமத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். என்னைவிட இளைவராகத்தான் இருப்பார். ஓரிண்டடு வயது வித்தியாசத்தில் மூன்று பெண்குழந்தைகள். வெகுகாலம் முன்பே கணவனை இழந்தவர், தந்தையும் அண்மையில் இறந்துவிட்டார். பெரும்பாலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையும் கணவவனை இழந்த பெண்களுக்கு அரசு தரும் பணத்தையும் நம்பி இருப்பவர். முதல் பெண் பன்னிரண்டாவது முடித்தவுடனே சொந்தத்தில் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள். இரண்டாவது பெண்ணும் 12வது முடித்தவுடன் ஒரு கடைக்குக் கணக்கெழுதும் வேலைக்குச்செல்லத்தொடங்கிவிட்டாள். மூன்றாவது பெண் இவ்வாண்டு 12வது எழுதியுள்ளாள்.

‘இந்த ரெண்டு மாசம் வேலையிருந்ததா?’ என்று கேட்டேன்.
‘எங்கீங்கண்ணா, ஒரு வேலையும் இல்ல. வீட்டிலயேதான் இருந்தேன். பொண்ணும் கடைக்கு வேலைக்குப் போக பஸ்ஸில்லை,’ என்றார்.
‘அப்புறம் எப்படி சமாளிச்சீங்க?’
‘எப்படியோ கிடைச்சதெ வைச்சு சமாளிச்சுடோம்.’
‘அரசாங்க நிவாரணப் பணம் கெடைச்சுதா?’
‘பேங்குக்கு எப்படிப் போறதுங்கண்ணா. நாங்க போய் பணம் வந்துருச்சான்னு கூடப் பார்க்கவே இல்லை. நேத்து பஸ் விட்டதுக்கப்புறம்தான் போயி பணத்த எடுத்தேன. பொண்ணோட கொழந்தைக்கு ஒரு வயசாயிடுச்சில்லீங்க? அவங்களுக்கு இன்னும் ஒன்னுமே செய்யலன்னு எல்லாம் வாங்கிக் குடுத்துட்டு வந்தேன். அம்மாவும் இங்க இருக்கமாட்டேன்னு ஊர்ல தனியாப் போயிட்டாங்க. அம்மாவுக்கு வாடகப்பணம் வருதுன்னாலும் நானும் ஏதாவது குடுக்கணும். ’
‘சின்னவளையாவது காலேஜுக்கு அனுப்புங்க.’
‘பெரிய புள்ளைகளும் அப்படித்தான் சொல்றாங்க. பார்க்கலாங்க. இப்போதைக்கு ஒரு வேலைக்கு அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்.’
‘அரசுக் கல்லூரில கிடைச்சா சேத்திரலாமில்லங்க? எப்படியோ மூணு வருஷம் தம் கட்டினா முடிச்சுருவா.’
‘பீஸ் கம்மின்னாலும் மத்த செலவெல்லாம் இருக்குமில்லீங்கண்ணா. மார்க் வரட்டும், பார்க்கலாம்.’

கிட்டத்தட்ட இதே நிலையில் எங்களுக்குத் தெரிந்தே இன்னும் இரண்டு பேராவது பன்னிரண்டாவது எழுதியிருக்கிறார்கள். பின்னும் பிற இடங்களோடு ஒப்புநோக்குகையில் எங்கள் கிராமம் பொருளாதார ரீதியாக ஓரளவு வளர்ச்சியுற்ற இடம்தான்.

இத்தனைக்கும் இடையில்தான் நாம் கணிப்பொறி, இணையம், செயற்கை நுண்ணறிவு என்று பேசவேண்டியிருக்கிறது.

-கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *