புதிய வருடம் காலடி எடுத்து வைக்கின்ற போது மீண்டும் ஒரு கொள்ளை நோயின் மேகங்களால் உலகம் இருள் மூடிக் கிடக்கிறது. கோவிடின் மற்றொரு வடிவமான ஓமைக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. தினந்தோறும் வரும் செய்திகளின் அடிப்படையில் நமது நாடும் அதிலிருந்து விதிவிலக்கல்ல என்றே தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களில் நடந்ததைப் போன்றதொரு ஊரடங்கை நோக்கித்தான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகமே கிராமம் ஆகிப்போன உலகமயச் சூழலில் எங்கேனும் ஒரு சிறு தேசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் உலகம் முடங்கிப் போகும் சூழல்தான் தற்போது உள்ளது. இப்புது வருடத்திலும் மனித சமூக முன்னேற்றத்தில் ஓமைக்ரான் ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இச்சூழலில் நம்மால் முடங்கிப் போய்விட முடியாது, முன்னேறிச் சென்றே ஆகவேண்டும். மனித அறிவின், தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெகுவிரைவாக இந்த கொள்ளை நோய் விரட்டியடிக்கப்படும் என்ற விஷயத்தில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வழியில் அறிவியல் உலகம் வெகுதூரம் பயணப்பட்டு கொண்டுதானிருக்கிறது. இந்த வருடத்தோடு கோவிட் அச்சத்திலிருந்து இவ்வுலகம் விடுபடும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றோம். பெரும் குழப்பங்கள் நம்மை எதிர்கொண்டாலும் நிகழ் வருடத்தை நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் எதிர்கொள்வோம்.

கோவிட்டை தடுத்து நிறுத்த உதவியது மனிதன் அடைந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவுதான் காரணம் என சொல்லப்பட்டாலும் அதற்கு பின்னால் இருந்தது அது மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறைகள் பல இருந்தாலும் மானுட தார்மீகங்களை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இயங்கியதால் மட்டுமே கோவிட்டில் இருந்து உலகில் பல நாடுகள் விடுதலை பெற்றது. ஜனநாயக முறைமைகள் பலவீனமான பலநாடுகளில் கோவிடுக்கு எதிராக செயல்படுவதில் அறிவியல் தொழில் நுட்பங்கள் தோற்றுப் போனதை நாம் பார்க்கலாம். ட்ரம்பின் அமெரிக்காவும் மோடியின் இந்தியாவும் அதற்கான சிறந்த உதாரணங்கள். தேவையான சிகிச்சை வசதிகள் இருந்தபோதிலும் சதித்திட்டங்களின் சித்தாந்தம் பேசி குறித்து மட்டுமே பேசி வாய்பிளந்து நின்ற டிரம்பினால் நியூயார்க் நகரம் சவங்களின் பிரதேசமாக மாறிப்போனது. எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் பாசிசத்தின் பாணியில் ஊரடங்கு போன்ற தடுப்பு வழிகளை கை மேற்கொண்டதன் விளைவாகத்தான் கோவிடின் ஆரம்ப காலம் இந்தியாவின் துயரக் காலமாக மாறிப்போனது. அக்கால இழப்புகளில் இருந்து இன்னமும் எம்மக்கள் விடுபடவில்லை. கோவிட்டின் பாதிப்புகளையும் இனவெறி பிரச்சாரத்திற்கான உபகரணங்களாகத்தான் மோடி அரசு பயன்படுத்தியது. ஜனநாயகத்திற்கு பதில் இந்துத்துவாவின் அழிவு அரசியலை முன்னெடுத்ததுதான் இந்த துயரங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமாக இருந்தது. கொரோனோ உருவாக்கிய பாதிப்புகளில் இருந்து நாம் ஓரளவு மீண்டாலும், பாசிச அழிவு அரசியலின் வாள் இப்போதும் நம் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவிற்கு, இந்திய மக்களுக்கு 2022 மிகவும் முக்கியமான ஒரு வருடம் ஆகும். கோவா, மணிப்பூர், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் இவ்வாண்டுதான் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பஞ்சாப்பை தவிர பாக்கி எல்லா இடங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது.
உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் இந்துத்துவாவின் ஆய்வுக்கூடங்களாகவே உள்ளது. நிச்சயமாக அந்தந்த இடங்களில் அளிக்கப்படும் மக்கள் தீர்ப்பு அந்தந்த அம்மாநிலங்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க கூடியதாகவும் அமையும்.

ஆகவேதான் 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் ஒத்திகை என்றும் அரையிறுதி போட்டி என்றும் சிறப்பிக்கப்படும் ஒரு ஜனநாயகத் தேர்தல் மைதானத்தை நோக்கி இவ்வருடம் நம்மை கொண்டு செல்கிறது. ஆனால் இந்தத் தேர்தல் மைதானத்தில் உரக்கக் கேட்பது இந்துத்துவாவின் ஆவேச முழக்கங்கள் மட்டும்தான். பிரதம அமைச்சர் உள்பட அனைவரும் பேசிக்கொண்டிருப்பது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைக் குறித்து அல்ல. அதற்கு மாறாக பசு அரசியலையும் பாபரி மசூதியின் இடத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயிலையும் குறித்துதான். அயோத்திக்கு பிறகு மதுராவும் காசியும்தான் முக்கிய விஷயங்கள். கோவிடும் ஊரடங்கும் இந்த நாட்டை பட்டினியில் ஆழ்த்தியது யாருக்கும் ஒரு பொருட்டல்ல. மக்கள் நல அரசியலை குறித்துப் பேசுவதற்கு பகரமாக இனத்துவேஷ வெறிக் கூச்சல்கள் உயர்கின்ற போது அமைதியாக கடந்து செல்லும் இந்த நாடு, பாசிசத்தின் ஆட்சி முறைமைக்கு அனுகூலமாக இருக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

வீதிகளில் இருந்து மட்டுமல்ல ஜனநாயகத்தின் ஆலயத்திலிருந்தும் ஹிந்துத்துவ இனவாதத்தின் குரல்கள் வெளிப்பட்டு வருகிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் பிளேசஸ் ஆஃப் வர்ஷிப் ஆக்ட் போன்ற சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற பாஜக உறுப்பினர்களின் வேண்டுகோள் இயல்பான ஒன்றல்ல. இதைப்போன்ற வேண்டுகோளோடு இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்றங்களையும் அணுகி உள்ளன. இரண்டு தேவைகளும் நிறைவேற்றப்பட்டால், காசியிலும் மதுராவில் உள்ள மஸ்ஜிதுகளை சங்பரிவார்கள் ‘சட்டபூர்வமாகவே’ ஆக்கிரமிப்பார்கள். வீதிகளில் உலாவி வந்த அழிவு சக்திகள் நாடாளுமன்றத்திலும் நிறைந்து இருக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள். அந்தக் கும்பல்தான் ‘அமைப்புச் சட்டத்தின்’ ஊடாகவே இந்த நாட்டை விற்று தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இந்தியா என்ற தத்துவத்தின் ஆன்மாவை சீரழித்து கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் நாம் நிராசை அடைந்து விடக்கூடாது. மக்கள் போராட்டங்களின் மூலமாக இந்த கும்பல்களை குப்புற விழ வைத்த சில அபூர்வ நிகழ்வுகளும் இக்காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது. விவசாயிகள் அடைந்த உன்னதமான வெற்றி ஜனநாயகவாதிகளின் குரல்களுக்கு வலிமையை தரக்கூடிய ஒன்றாகும். ஆகவே எதிர்பார்ப்புகள் அஸ்தமிக்க வில்லை. வலிமையான போராட்டங்களின், சமரங்களின், கருத்துரையாடல்களின் மூலமாக இந்தியாவை மீட்டெடுத்தே தீரவேண்டும். புது வருட ஆரம்பம் அவற்றுக்கான துவக்கமாக இருக்கட்டும்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *