மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சந்திப்பு தேசிய அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி உள்ளது. பாசிச பாஜக அரசை ஒன்றியத்திலிருந்து மாற்றவில்லை என்று சொன்னால் நாடு நாசமாக போகும் என்ற முன்னறிவிப்புடன் சந்திரசேகர ராவ் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார். சென்ற முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசை  ஆதரித்த சந்திரசேகர் ராவ் இப்போது அவர்களுக்கு எதிராக படை திரட்டுவது குறிப்பிடத்தக்கது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முனைப்போடுதான் ராவ் களமிறங்கி உள்ளார் என அவரது கட்சியினர் கூறுகிறார்கள்.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முடிவு மார்ச் 10 அன்று வெளியாகும். அப்போது உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பாஜகவிற்கு பலத்த அடி விழும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் இந்த மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற உறுப்பினர்கள், 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோரின் கணிசமான வாக்குகளை  பாஜக  இழக்கும். இதன் மூலம் உருவாகும் வாய்ப்பால் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தொடங்கி 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரை எதிர்க்கட்சிகளுக்கு அனுகூலமாக இருக்கும் என ராவ் தேர்தல் கணக்கு கூட்டுகிறார்.

ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது புதிய முயற்சி அல்ல. ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க ஸ்டாலின் ஆகியோரும் இந்த ஒருங்கிணைப்பு முயற்சியில் முன்னணியில் உள்ளனர். மாநிலங்களின் அமைப்புச் சட்ட அதிகாரங்களை பறித்தும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஆரோக்கியமான உறவை சிதைத்தும் ஒன்றியத்தின் மீது அதிகமான அதிகாரங்களை குவித்தும் வரக்கூடிய ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்புதான் இந்த ஒருங்கிணைப்புக்கான முதன்மையான காரணமாகும்.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசாங்கத்திற்கும் ஒன்றிய பாஜக அரசின் ஏஜெண்டுகளாக உள்ள ஆளுநர்களுக்கும் இடையே பெரும் மோதல் உள்ளது. மாநில ஆட்சி நடவடிக்கைகளில் ஆளுநர்கள் தேவையில்லாமல் தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்று நிரந்தரமாக எழுந்து கொண்டிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரிகளை தங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஒன்றிய அரசின் பணிக்கு அழைப்பதற்கு ஏற்ற வகையில் அகில இந்திய ஆட்சியில் சேவை சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தது, சமூக நீதிக்கு எதிரானது என்ற அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை ஆளுநர் ஆர்.என். இரவி திருப்பி அனுப்பியது, யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை விட துணைநிலை ஆளுநருக்கு அதிகமான அதிகாரங்களை அளிப்பது,  வேளாண் சட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்களில் மாநிலங்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் எதேச்சதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், எல்லையோர காவல் படையில் அதிகார எல்லையை 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டராக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்… இவ்வாறு மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறிப்பதற்காக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எடுத்து வரும் நகர்வுகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையாகத்தான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மம்தா பானர்ஜியும், மு க ஸ்டாலினும் முன்னெடுத்துள்ளார். ஹிந்தியை திணிப்பதற்கான ஆளுநர் ரவியின் முயற்சி தமிழ்நாடு அரசு வட்டாரங்களில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானத்தை மீண்டும் ஒருமுறை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க மகாராஷ்டிரா அரசு பரிந்துரை செய்தபோது, அதை அங்குள்ள ஆளுநர் அனுமதி அளிக்காமல் மறுத்துவிட்டார்.

ஐஏஎஸ் அதிகாரிகளை கையாளுவது, கூட்டுறவு –  பத்திரப்பதிவு உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது போன்ற விஷயங்களில் மாநிலக் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டைத்தான் தேசிய கட்சியான காங்கிரசும் எடுத்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் நியாயமான காரணங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின்  ஒருங்கிணைப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுவதற்கு இவர்களால் முடியவில்லை. மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காக மம்தா பானர்ஜி முயற்சிக்கும் அதே நேரத்தில் இந்தக் கூட்டணியில் காங்கிரசை சேர்க்க மாட்டோம் என்று அவர் முடிவு எடுத்துள்ளார். ஆனால் திராவிட முன்னேற்ற கழகமும் சிவசேனாவும் அவர்தம் மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துதான் செயல்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி காங்கிரசை தவிர்த்துவிட்டு தேசிய அளவிலான கூட்டணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சந்திரசேகர ராவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில் காங்கிரஸை தவிர்த்துவிட்டு ஒன்றிய அளவிலான கூட்டணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என சிவசேனாவும் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் நடத்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அதனால் காங்கிரஸ் அல்லாத ஒன்றிய அளவிலான கூட்டணி என்ற கோரிக்கை மம்தா பானர்ஜி உடன் முடங்கிக் கிடக்கிறது.

ஒன்றிய பாசிச பாஜக அரசை கடுமையாக எதிர்க்கின்ற போதும் கேரளா இடதுசாரி அரசு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளில் எவ்வித பங்களிப்பையும் இதுவரை அளிக்கவில்லை. நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துதான் இந்த அரசியல் நகர்வுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

ஒரு சில குறைபாடுகள் இருப்பினும் நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லவும் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஆறுதலையும் எதிர்பார்ப்பையும் அளிக்கிறது.

தோற்கடிக்கவே முடியாது என்று கருதப்படும் அளவிற்கு காமராஜரால் வலுவாக நிலைநிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா விரட்டியடித்தார். அதற்கு மிக முக்கியமான காரணம், அன்றைக்கு தமிழ்நாட்டில் காங்கிரசிற்கு எதிராக இருந்த அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக முன்பு எதிர்த்தவர்கள் கூட கூட்டணியில் இடம் பிடித்தனர். வானவில் கூட்டணி என்றுதான் திமுக தலைமையிலான கூட்டணி அழைக்கப்பட்டது. அதேபோன்று இன்றைக்கு தேசத்தின் பெரும் நோயாக  உள்ள பாசிச பாஜகவை அனைத்துவித  அதிகார மட்டங்களில் இருந்தும் விரட்டியடிக்க வேண்டுமெனில் பகைமைகளையும் முரண்பாடுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய காலகட்டம் இது.

அப்படிப்பட்ட ஒரு முயற்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மரியாதைக்குரிய திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வலிமையாக முன்னெடுக்க வேண்டும். எடுப்பார் என நம்புகிறோம்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *