“புதிய வரலாறு உருவாகிறது. சுல்தான்களின் பரம்பரைகள் இங்கே உருவானது. இல்லாமலும் போனது. ஆனால் பனாரஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் இந்த நகரத்தை ஆக்கிரமித்தார்கள். அழிக்க முனைந்தார்கள். அவுரங்கசீப்பின் கொடூரங்களை, குற்றங்களை வரலாறு அறியும். வாளின் மூலம் நம் கலாச்சாரத்தை அழிக்க அவர் முயற்சித்தார்.  ஆனால், ஒரு அவுரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் இங்கே உதயம் கொள்வார்.”

800 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்படும் காசி விஸ்வநாதர் ஆலயமும் கங்கை நதியும் ஒருங்கிணைக்கும் படித்துறையின் புதிய கட்டமைபை துவங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி செய்த சொற்பொழிவின் சுருக்கம் தான் மேலே உள்ள வரிகள். அனைத்து ஆச்சார முறைகளையும் முழுமையாக செய்து கங்கா நதியில் குளித்து (ஸ்நானம்) பூஜைகளை செய்த பிறகு, மோடி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தலைவர் ஜே பி நட்டா முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான துறவிகள் முன்னிலையில் மேற்படி நிகழ்வை துவக்கி வைத்தார். பணிகள் முழுமை அடையாமலேயே துவக்க விழாவை நடத்தியதும் அவ்வேளையில் செய்த சொற்பொழிவும் ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்கிறது. அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத்தை வெற்றிபெற வைக்க வேண்டும். பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதுதான் அது. ஐந்து வருட காலமாக நடந்த இந்துத்துவத்தின் ஆட்சியின் நன்மைளை கூறி வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம். தொழில், சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தோல்வியைத்தான் உத்திரபிரதேச அரசு சந்தித்திருக்கிறது. யோகியை ஒரு முன்மாதிரி ஆட்சியாளராக மக்கள் முன்னால் கொண்டு வருவதற்கு மோடி –  அமித்ஷாவால் முடியாது. கடந்த முறை யோகியை அதிகாரத்தில் அமர வைக்க உதவியாக இருந்த ஜாட் – முஸ்லீம் மோதல்களும் இப்போது இல்லை. அதுமட்டுமல்ல ஒன்றரை வருட காலமாக நடைபெற்ற விவசாயிகளுடைய போராட்டமும் வெற்றிகரமாக முடிவுற்றது. மத்திய, மாநில பாஜக அரசுகள் மோசமான தோல்வியையும் பின்வாங்கலையும் சந்தித்தது. பாபரி மசூதி இடிப்பையும் அதற்குப் பின்னால் உருவாக்கப்படும் ராமர் கோவிலையும் சொல்லி ஓட்டு வாங்குவதற்கு உண்டான சூழலும் இப்போது இல்லை. உச்சநீதிமன்றமும் பாபர் மசூதி இருந்த இடத்தை ஹிந்துத்துவவாதிகளுக்கு கொடுத்து அங்கே பல ஆயிரம் கோடிகள் செலவிட்டு கோயில் உருவாக்கமும் ஆரம்பம் செய்யப்பட்டுவிட்டது. ஆகவே இப்போது முஸ்லீம் வெறுப்பையும் தீவிர இந்துத்துவ வெறியையும் முடிந்தளவு பரப்புவதுதான் அவர்கள் இலட்சியத்தை அடைவதற்கான ஒரே வழி.

எதிர்க் கட்சிகளின் நிலை என்ன?  யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் தோல்வியை மக்களிடம் எடுத்துச் சொல்ல முடிந்தாலும் ஹிந்துத்துவ உணர்வை எதிர்கொள்ள அவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதனால் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அகிலேஷ் யாதவும் இந்துத்துவத்தைதான் துணைக்கு எடுத்துக் கொள்கிறார். காசி விஸ்வநாத கோயிலின் புதிய கட்டமைப்பை தன்னுடைய அரசுதான் முதலில் அங்கீகரித்தது என்பதால் அதனுடைய நற்பலன்கள் எனக்குத்தான் என உரிமை கோருகிறார் அகிலேஷ் யாதவ். தேர்தல் களத்தில் உள்ள மற்றுமொரு கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாவித மத ரீதியான வேஷங்களை அணிந்துகொண்டு ஆசாரங்களை கடைபிடித்து காசி யாத்திரையை நடத்தி விட்டார். நிலையுள்ளது

இனி மீதமுள்ளது சாட்சாத் மதச்சார்பின்மையின் அடையாளமாக சொல்லப்படும் காங்கிரஸ்தான். ராகுல்காந்தியின் ஜெய்ப்பூர் சொற்பொழிவு இப்போது ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் இந்து தான். ஆனால் இந்துத்துவவாதி அல்ல. இந்த நாடு இந்துக்களின் நாடு. இந்துத்துவாவாதிகளுடையது அல்ல. வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு உயிர்களுக்கு ஒரே ஆத்மா இருப்பது எப்படி சாத்தியம் இல்லையோ, அதைப் போல இரண்டு வார்த்தைகளுக்கு ஒரே பொருளும் இருக்காது. யாரையும் அச்சுறுத்தாத, எல்லாரையும் அரவணைத்துச் செல்பவன்தான் இந்து. இந்துத்துவாவாதிகளை நாம் புறக்கணிக்க வேண்டும். நாட்டில் இந்துக்களின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். தீவிர இந்துத்துவாக்கு எதிராக மென்மையான இந்துத்துவா என்ற காங்கிரஸ் கட்சியின் போக்கை ராகுல்காந்தியின் வாக்குகள் வெளிப்படுத்துகிறது.

நமது நாட்டின் அமைப்புச் சட்டம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும் ஜாதி – மதம் – மொழி – நிறம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு எல்லா குடிமக்களுக்கும் உரிமையானதுதான் இந்தியா என்று பிரகடனப்படுத்த இந்தியா எனும் நாட்டின் சிற்பி ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன், இரும்பு மனுஷி என போற்றப்பட்ட  இந்திரா காந்தியின் பேரனுக்கு முடியாமல் போனது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை குறித்து அறிவில்லாமல் போனதால் அல்ல. அவர் ஒரு மதச்சார்பின்மைவாதியாக இல்லாததாலும் அல்ல. சமகாலச் சூழல் அவரை அந்த வார்த்தைகளை சொல்ல வைத்திருக்கிறது. இடதுசாரிகள் இந்த வழியில் இருந்து மாறி நடப்பதாக அறிவித்தாலும் இன்றைக்கு அவர்கள் ஆட்சியிலிருக்கும் கேரளாவில் அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் செயல்பாடுகள் மென்மை இந்துத்துவா போக்கின் அடையாளமாகவே இருக்கிறது.

மதத்தின் அடிப்படையிலான தேசியம் என்ற இனவாதம் அனைத்துவிதமான எல்லைகளையும் கடந்து அழிச்சாட்டியம் நடத்தும் சமகாலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை காப்பாற்றுவதற்காக குறுகிய, தற்காலிகமான நலன்களை தள்ளி வைத்து, மதச்சார்பற்ற சக்திகளும் கட்சிகளும் ஒருங்கிணைந்து நின்று வெறுப்பின், பிரிவினையின் சக்திகளை தோற்கடிக்க முனையவில்லை என்று சொன்னால் யோகி ஆதித்யநாத்கள் உத்திரபிரதேசத்தை மட்டுமல்ல இந்தியாவையே ஆளுவார்கள்.

K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *