நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்கள் அவைகளில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று கூறி பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் ‘புதிய இந்தியாவிற்கு புதிய அகராதி’ எனும் தலைப்பில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் “பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத (unparliamentary)” எனும் ஆங்கில வார்த்தைக்கு “பிரதமர் நம் நாட்டை கையாளும் விதத்தை சரியாக விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் விவரிக்க பயன்படுத்தும் வார்த்தை என்றும் ஆனால் தற்போது அதனை பேசுவதற்கு தடை விதிக்ப்பட்டுள்ளது” என விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அவர் ‌அந்த புகைப்படத்தில் “unparliamentary” எனும் வார்த்தைக்கு உதாரணமாக “இரட்டை நிலைப்பாடு கொண்ட சர்வாதிகாரி ஒருவர் தனது பொய்களும், தோல்வியும் வெளிச்சத்துக்கு வரும்போது சிந்தும் முதலைக் கண்ணீர்”. என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி அபிஷேக் மணு சங்கவி ட்விட்டரில் “ஒரு விமர்சனத்தை ஆக்கபூர்வமான முறையில் சொல்ல முடியாவிட்டால் பாராளுமன்றத்தின் பயன் என்ன? ஜும்லாஜீவியை (பொய்யனை) ஜும்லாஜிவி என்று அழைக்காமல் வேறு எவ்வாறு அழைப்பது?  இப்படி வார்த்தைகளை தடை செய்வது என்பது தேவையற்றது!” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா இது குறித்து டுவிட்டரில் “நம் அரசின் நோக்கம் என்னவென்றால் அது எப்பொழுதெல்லாம் ஊழல் செய்கிறதோ இனிமேல் அதை யாரும் ஊழல் என்று சொல்லாமல் அதற்கு பதிலாக அதனை ஒரு புத்திசாலித்தனமான விஷயமாக முத்திரை குத்த வேண்டும். அவர்கள் இரண்டு கோடி வேலை வாய்ப்புக்கள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு என ஜிம்லாக்களை (பொய்) பயன்படுத்தி அதற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் திருநாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா “ஏன் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவின் பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை பட்டியலில் “சங்கி” எனும் வார்த்தை இடம்பெறவில்லை” என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார் மேலும் திருநாமல் காங்கிரசின் எம்பி டைரக் ஓ’பிரைன் இத்தகைய “அடிப்படையான” சொல்லாடல்களை பயன்படுத்துவதை கண்டிப்பாக உறுதி செய்வேன் என்றும் மேலும் சபாநாயகருக்கு தன்னை சஸ்பெண்ட் செய்யுமாறும் சவால் விடுத்துள்ளார்.

தமிழில் – ஹபீப் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *