“கோட்சேவை தெய்வமாக கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 20 முதல் குஜராத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இனக்கலவரங்கள் நடந்த ஹிம்மத் நகர், கம்பத் போன்ற இடங்களில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அவரிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். இது மகாத்மாவிற்கு கோவிலைக் கட்டியவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் மிகச்சிறிய செயல்”. குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட ட்விட்டர் செய்தி இது. இது நமது நாட்டில் பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் விமர்சனத்தின் தொடர்ச்சி மட்டுமே.

ஆளுபவர்களை இதை விடவும் கடுமையான சொல்லாடல்களால் விமர்சித்த வரலாறு பாஜகவிற்கு உண்டு. அச்சுறுத்தல் நிறைந்த இக்காலகட்டத்திலும் சங்பரிவாரின் கோட்சே மீதான காதலை சங்பரிவார் விமர்சகர்கள் எப்போதும் சுட்டிக்காட்டிக் கொண்டேதான் உள்ளார்கள். ஆனால், இந்த வரலாற்று உண்மைகளை உரத்துச் சொல்வது என்பது நரேந்திர மோடி  கட்டமைத்துக் கொண்டிருக்கும்  புதிய இந்தியாவில் குற்றச் செயல்களாக பார்க்கப்படுகிறது. ஜிக்னேஷ் மேவானி மீதான தொடர் கைதுகள் அதைத்தான் உணர்த்துகிறது.

ஜிக்னேஷ் மேவாணியின் ட்விட்டர் செய்தியில் மத உணர்வுகளையும் சமூக அமைதியையும் பாதிக்கக்கூடிய எவ்வித செய்திகளும் இல்லை என்பது வெளிப்படையான, அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அவர் மீது போடப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்திய நாட்டில் கருத்துச் சுதந்திரம் தடை செய்யப்பட்டு விட்டதோ என்ற உணர்வைத்தான் இது உருவாக்குகிறது. குற்றச் சதி (120 – பி), தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல் (153 பி), ஏதேனும் பிரிவினரின் மத உணர்வுகளை சுய உணர்வுடன் காயப்படுத்துவது, தூண்டிவிடுவது (295 ஏ), சமூக அமைதியை சீர்குலைத்து அதற்காக வேண்டி மனப்பூர்வமாக தூண்டுதல்களை செய்வது (504), மாநிலத்தில் பொது அமைதியைக் குலைத்து பொதுமக்களில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்குவது (501-1பி), தொழில் நுட்ப சட்டம் உட்பட பல தீவிரமான வகுப்புகளின் கீழ் மேவானிக்கு எதிராக அசாம் போலீஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

குஜராத்திலிருந்து வெளியிட்ட  ட்விட்டிற்காக அசாமின் உள் மாவட்டமான கொக்ரஜாரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து இரவோடு இரவாக குஜராத்தில் வந்து கைது செய்து அசாமிற்கு கொண்டு சென்று சிறையில் அடைப்பது என்பது புதிய இந்தியாவின் ஊளத்தனமாகும். அவருடைய ட்வீட்டில் மத உணர்வுகளை காயப்படுத்தக்கூடிய, சமூக வாழ்க்கையை சீர் குறைக்கக்கூடிய, நாட்டை இழிவு படுத்தக்கூடிய செய்தி எங்கே என்ற கேள்விகள் கூட புதிய இந்தியாவையும் சட்ட அமைப்புகளையும் கேலி செய்வதற்கு சமமானதாகவே  பார்க்கப்படும். புதிய இந்தியாவின் தேசிய தெய்வமாக கோட்சேவும் மதமாக ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து மகாசபையும் அறிவிக்கப்பட்டுவிட்டதோ என்ற எண்ணமே எழுகிறது. அவர்களை யார் விமர்சித்தாலும் அவர்கள் எல்லோரும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய மாபெரும் குற்றத்தை இழைத்தவர்கள் என்ற அளவிற்கு அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஏன்?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்ததற்காக தேசவிரோத குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலிதின் பிணை தொடர்பான விசாரணையின் பொழுது 2022 ஏப்ரல் 22, 23 ஆகிய நாட்களில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுள்  வெளியிட்ட கருத்துக்கள், சங்பரிவாரை விமர்சித்தால் நீதிமன்றங்களுக்கும் கோபம் உண்டாகும் என்பதையே காட்டுகிறது. மேவானிக்கு பிணை கிடைத்து விட்டது.  ஆனால் உமர் காலித்  இன்னும் எத்தனை நாள் சிறையில் இருக்கவேண்டும் என்பதற்கு விடை தெரியவில்லை. 2020 பிப்ரவரி 17 இல் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உமர் காலித் நடத்திய சொற்பொழிவின் சுருக்கம் இதுதான். “நாங்கள் வெள்ளையர்களின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருந்த பொழுது, இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களான ஆர்எஸ்எஸ், இந்து மகாசபையின் முன்னோர்கள் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டுகளாக செயல்பட்டார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆங்கிலேயர்கள்  இந்தியர்களை சுட்டுக் கொலை செய்து கொண்டிருந்தனர். சுதந்திரத்திற்காக கனவு கண்ட பலரையும் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளில் இந்திய மக்கள் தியாகங்களை செய்து கொண்டிருந்தபோது இன்றைய ஆட்சியாளர்களின் முன்னோர்கள் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்”. உமரின் இந்த வார்த்தைகளை குறித்து நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதற்காக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 153 ஏ,  153 பி ஆகியவற்றின் கீழ் ஏன் வழக்கு  பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனநாயகத்தின், கருத்து சுதந்திரத்தின் மற்ற நான்கு தூண்களாக செயல்படுபவர்களுக்கு விமர்சனங்களுக்கு அனுமதி உண்டு,  எனினும் இது போன்ற விமர்சனங்கள் ஏற்புடையது அல்ல என்ற நீதிமன்ற அறிவுறுத்தல் ஜனநாயகத்தின் மீதும் சட்ட அமைப்புகளின் மீதும்  நம்பிக்கை கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் அமைதியின்மையை உருவாக்கியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸையும் இந்து மகாசபையையும் விமர்சிப்பதை சமுதாய நிறம்  பூசி அதை குற்றச் செயலாக காண்கின்ற காவல்துறையின், நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சிலவற்றை கூறிச் செல்கின்றன. கைது செய்யக்கூடிய அளவிற்கு எவ்வித காரணங்கள் இல்லாமல் இருப்பினும் அறிக்கைகளின், சொற்பொழிவுகளின் பெயரில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு வந்து மிக எளிதாக யாரையும் கைது செய்து கொண்டு செல்லலாம் என்ற ஒரு ஆபத்தான நிலைமை இப்போது நாட்டில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி கைதும் உமர் காலிதின் பிணை மீதான விசாரணையின் போது நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களும் ஒன்றை உணர்த்துகின்றன. ஒன்று அரசை நீங்கள் அக மகிழ்வோடு ஆதரிக்க வேண்டும். அல்லது நாவடக்கத்துடன் மௌனமாக கடந்து செல்லவேண்டும். இதுதான் தற்போதைய நிலையில் இந்தியாவில் வாழ்ந்து செல்வதற்குண்டான ஒரே வழி என அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

“ஒரு நாயைக் கொன்றால் கேள்வி கேட்கும் இந்நாட்டில், ஒரு மனிதனைக் கொன்றால் எந்த நாயும் கேள்வி கேட்காது என்ற தைரியம் எங்கே இருந்து வந்தது?.  அந்த நம்பிக்கைதான், தைரியம்தான் இந்த நாட்டின் சமகால அரசியல் சூழல். கேள்வி கேட்பவரின்  குரல் வளையை நெரித்து மௌனியாக்கும் அரசியல். விரல் சுட்டுபவனின் கைகளில் விலங்கு பூட்டும் அரசியல். எங்கள் குரல்வளையை நெரித்து மௌனிகள் ஆக்கினாலும், எந்த சிறைகளில் அடைத்தாலும் கேள்விகள் கேட்போம். பதில் தந்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இந்த நாடு யாருடைய அப்பனுடைய சொத்தும் அல்ல.”

(ஜன கண மன படத்தில் கதை நாயகன் நீதிமன்றத்தில் பேசும் வசனம்)

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *